சென்னையில் ரூ.50.65 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 6 பேர் கைது.

சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம்  ரூ.50.65 கோடி மதிப்புள்ள 10.13 கிலோ மெத்தாம்ப்டமைன் என்ற போதைப் பொருளைப்  பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக  6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையிலிருந்து மூன்று நபர்கள் போதைப் பொருட்களை தமிழகத்தின் தென் கடலோரப் பகுதியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருப்பதாக உளவுத் தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில், 29.08.2024,  30.08.2024 ஆகிய தேதிகளில் நுணுக்கமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கையால், சென்னை புறநகர் பகுதியான பொத்தேரி அருகே அவர்களின் வாகனத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரக சென்னை மண்டல அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வாகனத்தை சோதனையிட்டபோது, காரின் பின் இருக்கைக்கு அடியில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட குழியில், 10.13 கிலோ மெத்தாம்ப்டமைன் போதைப் பொருள் அடங்கிய 10 பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய நபர்களின் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது  மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் விற்பனை தொகையான ரூ.1.30 கோடி ரொக்கமாகவும், குற்றவாளிகள் பயன்படுத்திய மூன்று வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version