தி.மு.கவை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடி பழனிசாமி! மாணவர்களுக்கு ‘நீட்’ அல்வா கொடுத்த விடியல் அரசு!

“திமுக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது மாநிலம் முழுவதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுத்தான் என்று கூறியது. நீட்டை ரத்து செய்யும் வழிமுறைகள் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் இப்போதைய முதல் அமைச்சருமான ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும் என்று அவர்களுடைய இளைஞரணி செயலாளர் முதல் கடைக்கோடி பேச்சாளர்கள் வரை தேர்தல் மேடைகளில் அம்மா அரசிற்கு எதிராக வெற்று முழக்கமிட்டு மக்களை திசைதிருப்பி வெற்றியும் பெற்றுவிட்டனர். நான் கடந்த மாதம் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீது பேசும்போது கூட நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு நேரடியாக பதில் சொல்லுங்கள் என்று கேட்டேன். ஆனால் அதற்கு முதலமைச்சர் நேரடியாக எந்த பதிலும் தரவில்லை.

நீதியரசர் ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அதன் பரிந்துரையின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் பதிலளித்தார். நீதியரசர் ராஜன் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஏதோ இன்றே இந்த அரசு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டது போல ஸ்டாலின் வானத்திற்கும், பூமிக்குமாக குதித்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும் அதற்கான வழி எங்களுக்கு தெரியும் என்று வாய் வீரம் காட்டிய ஸ்டாலின் தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக என் மீது வீண்பழி சுமத்துகிறார்.

எங்களைப் பார்த்து பாதம் தாங்கிகள், எதிர்க்கட்சி ஆனபிறகும் பிஜேபியின் அடிமைகள் என்றெல்லாம் அரசியல் நாகரீகம் இன்றி, தான் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கான தகுதியையும் உணராமல் அறிக்கை என்ற பெயரில் நஞ்சை கக்கி இருக்கிறார். 1999-2004 கால கட்டத்தில் மத்திய பாஜக அரசில் 5 ஆண்டுகள் பதவி சுகம் அனுபவித்து 2001-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பிஜேபிக்கு 21 இடங்களை வழங்கி குலாவியபோதும் இவர்கள் எதைத் தாங்கிக் கொண்டு இருந்தார்கள்? என்று திருப்பிக் கேட்க எங்களுக்கு ஒரு நிமிடம் ஆகாது. இன்றைய திமுக ஆட்சியாளர்களைபோல் எந்த வாக்குறுதியை வேண்டுமானாலும் அள்ளிவிடலாம். மக்களை ஏமாற்றலாம். அதிகாரம் கைக்கு வந்தபின் எப்படி வேண்டுமானாலும் மாற்றி பேசலாம். 5 ஆண்டுகளுக்கு நம்மை யாரும், எந்தக் கேள்வியும் கேட்க முடியாது என்ற மமதை குணம் கொண்டுள்ளதுபோல் நாங்கள் செயல்படவில்லை.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பேச்சை நம்பி நீட் ஒழிந்துவிடும் என்று தேர்வுக்கு தயாராகாத மாணவர்கள் மத்தியில் செப்டம்பர் 12-ம் நாள் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மாணவர்களின் தலையில் இடிபோல் இறங்கியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சரோ நீட் தேர்வுக்கான கல்வியை மாணவர்கள் கற்றுக்கொள்வது நீட்தேர்வுக்கு பின்னரும், மருத்துவரான பின்பும் அவர்களுக்கு கை கொடுக்கும். நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் மன உளைச்சல் ஏற்படாமல் இருக்கவே நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்ற அரிய விஞ்ஞான கண்டுபிடிப்பை வெளியிட்டு உள்ளார். 2019-ல் மருத்துவம் பயில அரசுப் பள்ளியில் பயின்ற வெறும் 6 மாணவர்கள் மட்டுமே தேர்வாயினர்.

இந்த நிலையை மாற்றிடவேண்டும் என நான் உறுதி கொண்டேன். அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினோ, பொதுமக்களோ, வேறு யாருமோ கோரிக்கை வைக்காத நிலையில் ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் ஒரு குழு அமைத்து அதன் பரிந்துரையை ஏற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை சட்டமாக்கி அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கினேன். இதன்மூலம் 2020-ல் அரசு பள்ளிகளில் படித்த 435 மாணவர்கள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கான மருத்துவ படிப்பு கட்டணத்தையும் அம்மாவின் அதிமுக அரசே ஏற்றுக்கொண்டது. 2011-ல் திமுக ஆட்சி முடிவு வரும்போது 1,945 மருத்துவ இடங்கள்தான் இருந்தன. அம்மாவின் ஆட்சியில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் மருத்துவமனை கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களை அதிகப்படுத்தி, அதன் மூலம் சுமார் 5,400 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்க கூடிய சூழ்நிலையை உருவாக்கியது அம்மாவின் அரசுதான்.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 17 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தார்.எடப்பாடி பழனிசாமி ஆவேச பதிலடி கொடுத்திருப்பதுபற்றி அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மட்டுமின்றி 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, மிகக்கடுமையாக எடப்பாடியாரை தாக்கிப் பேசினார். தன்னை விட 25 வயது மூத்தவர் என்றபோதும் கொஞ்சமும் மரியாதை கொடுக்காமல் தரக்குறைவாகவும் தாக்கினார். குறிப்பாக நீட் ரத்து தேர்வு உறுதிமொழி பற்றி பேசும்போது, மாணவர் சமுதாயத்திற்கு பெரும் அநீதி இழைத்துவிட்டதுபோல் சினிமாவில் பேசுவது போல் வார்த்தை ஜாலமும் காட்டினார்.

அன்று அப்படி அவர் பேசியதை யாருமே கண்டிக்கவில்லை.இது எதிர்வினையாற்றும் நேரம்.அவர் சொன்ன வார்த்தைகள் தற்போது அவரையே திருப்பி தாக்கியுள்ளது. இன்று எடப்பாடியாரும் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். அன்று வீரவசனம் பேசிய உதயநிதி இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு இதற்கு பதில் சொல்வார்?…பள்ளி இறுதியாண்டு மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்னும் எடப்பாடியாருடைய குற்றச்சாட்டுக்கு நிச்சயம் திமுகவினரிடம் பதிலே இருக்காது.மாறாக திசைதிருப்பும், விதமாக சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி ஒரு பொய்யை உண்மையாக்க பார்ப்பார்கள்.அல்லது புதிதாக வேறொரு பிரச்சினையை கிளப்புவார்கள்.இது, அவர்களுக்கு கைவந்த கலை. நீட் என்ற ஒரு விஷயத்திலேயே திமுகவின் வேடம் கலைந்துபோய்விட்டது” என்று அவர்கள் கொந்தளித்தனர்.

Exit mobile version