விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மோடி அரசின் முக்கிய குறிக்கோள் என்றும் புதிய வேளாண் சட்டங்கள் இதற்கு வழிவகுக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலத்தில் பாகல் கோட் மாவட்டத்தில் உள்ள கேராகால்மட்டி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, இவ்வாறு கூறினார். மேலும், இன்று பல்வேறு வேளாண் திட்டங்களுக்கான அடிக்கல்நாட்டு விழாவிலும் கலந்துகொண்டார்.
விழாவில் உரையாற்றிய அவர், “நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக்குவது என்ற முக்கிய குறிக்கோளை நிறைவேற்றுவதை நோக்கியே செயல்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தைப் பலமடங்கு அளவிற்கு உயர்த்த உதவும் என்றும், இதன் மூலம் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை, தங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில், உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானால் விற்கும் அதிகாரத்தை பெறுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளை நலனை கருத்தில் கொள்ளாமல், சுய லாபத்திற்காக, விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர் என உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
”விவசாயிகளை தூண்டிவிடுபவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். விவசாயிகள் நலனில் உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் உங்கள் ஆட்சியில் ஏன் விவசாயிகளுக்கு ₹6000 மானியம் அளிக்கவில்லை. அதே போன்று, எத்தனால் தொடர்பான கொள்கையை ஏன் மறு பரிசீலனை செய்யவில்லை” என அமித்ஷா கேள்வி எழுப்பினார்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் தில்லியின் எல்லை பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் குடியரசு தினத்தில் தில்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த டிராக்டர் பேரணிக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















