சுமார் 3 – 4 ஆண்டுகள் விரிவான ஆலோசனைகள் மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆலோசனைகளைப் பரிசீலித்த பிறகு தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது என்று பிரதமர் தெரிவித்தார். தேசியக் கல்விக் கொள்கை குறித்து நாடு முழுக்க ஆரோக்கியமான விவாதங்கள் நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.இளைஞர்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்தும் வகையில், தேசிய மாண்புகள் மற்றும் தேசிய லட்சியங்களில் கவனம் செலுத்தி தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
புதிய இந்தியாவுக்கு, 21வது நூற்றாண்டின் இந்தியாவுக்கு அடித்தளம் அமைப்பதாக இந்தக் கொள்கை இருக்கிறது என்று திரு. நரேந்திர மோடி கூறினார். இந்தியாவை பலப்படுத்தவும், வளர்ச்சியின் புதிய உச்சத்தை அடைவதற்கும், அதிகபட்ச அளவில் வேலைவாய்ப்புக்குப் பொருத்தமானவர்களாக உருவாக்கி அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதற்கும், இளைஞர்களுக்குத் தேவையான கல்வி மற்றும் தொழில் திறன்கள் இதில் அளிக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக நமது கல்வித் திட்டங்கள் மாற்றப்படாமல் இருந்ததால், சமநிலையற்ற முன்னுரிமைகள் தரப்பட்டன என்றும், டாக்டர், பொறியாளர் அல்லது வழக்கறிஞராக ஆக வேண்டும் என்று மட்டுமே பலரும் விரும்பினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆர்வம், திறன் மற்றும் தேவை ஆகியவற்றை ஒன்று சேர்ப்பதற்கான முயற்சி எதுவும் நடைபெறவில்லை என்றார் அவர்.
நமது கல்வியின் மீதான ஈர்ப்பு, கல்வியின் தத்துவம், கல்வியின் தேவை குறித்து புரிதல் இல்லாமல் போனால் இளைஞர்களிடம் புதுமைச் சிந்தனை எண்ணங்கள் எப்படி உருவாகும் என்று பிரதமர் கேள்வி எழுப்பினார்.அனைத்து உயிர்களுடனும் நல்லிணக்கம் காட்டும் வாழ்க்கையை வலியுறுத்தக் கூடிய, குரு ரவீந்திரநாத்தின் சித்தாந்தங்கள் இந்தக் கல்விக் கொள்கையில் பிரதிபலிக்கின்றன என்று அவர் தெரிவித்தார். வளர்ச்சியை அடைவதற்கு முழுமையான அணுகுமுறை தேவை என்று கூறிய அவர், தேசிய கல்விக் கொள்கை மூலம் அது வெற்றிகரமாக சாத்தியமாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
இரண்டு முக்கியமான கேள்விகளை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டது. சிந்தனை ஆற்றல், ஆர்வம் மற்றும் உறுதிப்பாட்டுடன் முன்னெடுக்கும் வாழ்க்கை ஆகியவற்றுக்கான உத்வேகத்தை இளைஞர்களுக்கு அளிப்பதாக நம் கல்வி நடைமுறை இருக்கிறதா? நம் இளைஞர்களுக்கு அதிகாரம் கிடைக்கச்செய்யும் வகையில், நாட்டில் அதிகாரம் பெற்ற சமூகத்தை உருவாக்கும் வகையில் கல்வி முறை இருக்கிறதா என்பதே அந்தக் கேள்விகளாக உள்ளன என்று அவர் கூறினார். முக்கியமான இந்த விஷயங்களில் தேசிய கல்விக் கொள்கை அக்கறை காட்டுகிறது என்று பிரதமர் திருப்தி தெரிவித்தார்.
மாறிவரும் காலக்கட்டத்திற்கு ஏற்ப இந்தியாவின் கல்வி முறை மாற வேண்டியுள்ளது என்றார் அவர். 5 + 3 + 3 + 4 என்ற புதிய நடைமுறை, இதற்கான நடவடிக்கையாக உள்ளது என்றும் தெரிவித்தார். நமது மாணவர்கள் உலகளவிலான குடிமக்களாக ஆக வேண்டும், அதே சமயத்தில் வேர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
`எப்படி சிந்திக்க வேண்டும்’ என்பதற்கு புதிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றார் பிரதமர். கேட்டறிதலின் அடிப்படையிலான, கண்டுபிடித்தலின் அடிப்படையிலான, கலந்துரையாடலின் அடிப்படையிலான, பகுப்பாய்வு அடிப்படையிலான கற்றல் முறைகள் குழந்தைகளிடம் கற்றலிலும், வகுப்பில் பங்கேற்பு மனநிலையில் இருக்கச் செய்வதற்கும் ஆர்வத்தை ஊட்டக் கூடியதாக இருக்கும் என்று திரு. நரேந்திர மோடி கூறினார்.
தனக்கு பிடித்தமானதைச் செய்யும் வாய்ப்பு ஒவ்வொரு மாணவனுக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். படிப்பை முடித்து ஒரு வேலையில் சேரும் போது தான், அந்த வேலைக்கும் தன்னுடைய படிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதை இளைஞர்கள் அறிந்து கொள்கிறார்கள். நிறைய மாணவர்கள் கல்வியை நிறுத்திக் கொள்ள முற்படுகிறார்கள். அதுபோன்ற மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பல முறை கல்வியில் இருந்து வெளியேறி மீண்டும் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு புதிய கல்விக் கொள்கையில் அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.
புதிய கல்விக் கொள்கையின்படி கிரெடிட் வங்கி ஒன்று உருவாக்கப்படும். கல்வியில் இடையிலேயே ஒரு மாணவர் வெளியேறினாலும், மீண்டும் படிக்க விரும்பும்போது, அவர் ஈட்டிய கிரெடிட்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். எந்த நபரும் தொடர்ச்சியாக மறு திறனாக்கம் மற்றும் திறன் அதிகரிப்பு செய்து கொண்டே இருக்க வேண்டிய காலக்கட்டத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.எந்தவொரு நாட்டிலும் அதன் வளர்ச்சியில் சமூகத்தில் அனைத்துப் பிரிவினரின் கண்ணியமும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் கூறினார். எனவே, மாணவர்களின் கல்வி, தொழிலில் கண்ணியம் ஆகியவற்றுக்கு தேசிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்த உலகின் தேவைகளுக்கு ஏற்ப திறன்களையும், தொழில்நுட்பங்களையும் அளிக்கும் திறமை இந்தியாவில் இருக்கிறது. இந்த வகையில் இளைஞர்களை புதிய கல்விக் கொள்கை தயார்படுத்துகிறது. தொழில்நுட்பம் சார்ந்த பாடத் திட்டங்களை இது உருவாக்கியுள்ளது. மெய்நிகர் ஆய்வகங்கள் போன்ற சிந்தனைகள், நல்ல கல்வி என்ற மில்லியன் கணக்கான மக்களின் கனவை நனவாக்குகிறது. ஆய்வக வசதி இல்லாததால் முன்பு இதுபோன்ற பாடங்களைப் படிக்காதவர்களும் கூட இதில் பயன் பெற முடியும். நாட்டில் ஆராய்ச்சிக்கும், கல்விக்கும் இடையே உள்ள இடைவெளியை நீக்குவதாகவும் தேசிய கல்விக் கொள்கை இருக்கும் என்றார் அவர்.
கல்வி நிலையங்களிலும், கட்டமைப்பு உருவாக்குவதிலும் இந்த சீர்திருத்தங்களைச் செய்தால் மட்டுமே, தேசிய கல்விக் கொள்கையை இன்னும் சிறப்பாகவும், வேகமாகவும் அமல்படுத்த முடியும் என்று பிரதமர் கூறினார். புதுமை சிந்தனைக்கான மதிப்புகளை உருவாக்குதல், சமூகத்தில் அவற்றைப் பயன்படுத்துதல் ஆகியவை இப்போதைய தேவைகளாக உள்ளன என்றும், இவை நமது நாட்டின் கல்வி நிலையங்களில் தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.
தன்னாட்சியின் மூலம் உயர் கல்வி நிலையங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். தன்னாட்சி குறித்து இரண்டு வகையான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. எல்லாமே அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செய்யப்பட வேண்டும் என்பது ஒரு தரப்பாரின் கருத்து. எல்லா கல்வி நிலையங்களுக்கும் இயல்பாகவே தன்னாட்சி அதிகாரம் அளிக்க வேண்டும் என்பது இரண்டாவது தரப்பாரின் கருத்தாக உள்ளது. அரசு அல்லாத நிறுவனங்கள் மீது நம்பிக்கையின்மை காரணமாக முதலாவது வாதம் எழுந்துள்ளது. தன்னாட்சி என்பது தங்கள் உரிமை என்று கூறுபவர்கள் இரண்டாவது கருத்தை முன் வைக்கின்றனர் என்றார் அவர். நல்ல தரமான கல்விக்கான பாதை என்பது இந்த இரண்டு கருத்துகளுக்கும் இடைப்பட்டதாக இருக்கிறது என்று பிரதமர் கூறினார்.
தரமான கல்விக்கு அதிகம் பாடுபடும் நிறுவனங்களுக்கு அதிக சுதந்திரம் அளித்து பாராட்ட வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார். அப்படி செய்வது தரத்தை ஊக்குவிப்பதாக இருக்கும் என்றும், எல்லோரும் வளர்ச்சி காண்பதற்கு ஊக்கம் தருவதாக இருக்கும் என்றும் கூறினார். தேசிய கல்விக் கொள்கை அமலுக்கு வரும்போது, கல்வி நிலையங்களுக்கு தன்னாட்சி கிடைப்பது துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வார்த்தைகளை நினைவுகூர்ந்த பிரதமர், “திறன் மற்றும் சாமர்த்தியத்துடன் இணைந்த நல்ல மனிதனை உருவாக்குவது தான் கல்வியின் அவசியமாக இருக்க வேண்டும். ஞானம் பெற்ற மனிதர்களை ஆசிரியர்களால் உருவாக்க முடியும்” என்று கலாம் கூறியிருப்பதைக் குறிப்பிட்டார்.
நல்ல கற்பித்தல் முறையை உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கையில் கவனம் செலுத்தப்படுகிறது. எனவே ஆசிரியர்கள் நல்ல தொழில் நிபுணர்களையும், நல்ல குடிமக்களையும் உருவாக்குவார்கள். ஆசிரியர் பயிற்சிக்கு இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொண்டிருக்கலாம் என்று பிரதமர் கூறினார்.
தேசிய கல்விக் கொள்கையை அமல் செய்வதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக் கல்வி வாரியங்கள், பல்வேறு மாநிலங்கள், தொடர்புடைய துறையினர் ஆகியோருடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை இங்கிருந்து தொடங்க வேண்டும் என்றார் அவர். தேசிய கல்விக் கொள்கை குறித்து இணையவழிப் பயிலரங்குகளைத் தொடர வேண்டும் என்றும், அதுபற்றி தொடர்ந்து விவாதிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். தேசிய கல்விக் கொள்கையை சிறப்பாக அமல் செய்வதற்கான நல்ல ஆலோசனைகள், நல்ல தீர்வுகள் இந்த மாநாட்டில் கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.