ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு 135 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்கள் ஆசிர்வாதங்கள் : பிரதமர் மோடி !

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்பதை முன்னிட்டு, வீரர்களை ஊக்குவிக்கும் முயற்சிதான் பிரதமரின் கலந்துரையாடல். இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணையமைச்சர் திரு நிசித் பிரமனிக், சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சகஜமாக கலந்துரையாடிய பிரதமர், விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தார், குடும்ப உறுப்பினர்கள் செய்த தியாகங்களுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். வில் அம்பு வீராங்கனை தீபிகா குமாரியிடம் பேசிய பிரதமர், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். தீபிகா குமாரியின் பயணம், மாங்காய் பறிப்பது முதல் வில் அம்பு போட்டி வரை வந்துள்ளதை பிரதமர் குறிப்பிட்டார். விளையாட்டு வீராங்கனையாக அவரது பயணம் பற்றி பிரதமர் விசாரித்தார். சிக்கலான சூழ்நிலையை சந்தித்தபோதிலும், வில் அம்பு போட்டியில் பிரவீன் ஜாதவ் தொடர்ந்து இருந்ததை பிரதமர் பாராட்டினார். அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடிய பிரதமர், அவர்களின் முயற்சிகளை பாராட்டினார். அந்த குடும்பத்தினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி மராத்தியில் பேசினார்.

ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்கும் வீரர் நீரஜ் சோப்ராவுடன் பேசிய பிரதமர், இந்திய ராணுவத்துடன் அவரது அனுபவம் குறித்தும், காயத்திலிருந்து அவர் மீண்டது குறித்தும் விசாரித்தார். எதிர்பார்ப்பை கண்டுகொள்ளாமல், தன்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்படும்படி அந்த வீரரை திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்துடன் பேசிய பிரதமர் திரு மோடி, அவரது பெயருக்கான அர்த்தத்தை கேட்டு பேச்சை தொடங்கினார். பிரகாசம் என அறிந்ததும், விளையாட்டு திறன்கள் மூலம் ஒளியை பரப்பும்படி அவருக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். விளையாட்டு வீரர்களின் பின்னால் இந்தியா இருப்பதால், அச்சமின்றி முன்னேறும் படி அவரை பிரதமர் கேட்டுக் கொண்டார். குத்துச் சண்டையை தேர்வு செய்தது ஏன் என குத்துச் சண்டை வீரர் ஆசிஷ் குமாரிடம் பிரதமர் கேட்டார். கொரோனாவுடன் போராடி பயிற்சியை தொடர்ந்தது எப்படி என அவரிடம் பிரதமர் கேட்டார். தந்தையை இழந்தபோதிலும், தனது இலக்கில் இருந்து அவர் விலகாமல் இருந்ததை பிரதமர் பாராட்டினார். சோகத்தில் இருந்து மீள்வதில் குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆதரவாக இருந்ததை அந்த வீரர் நினைவுகூர்ந்தார். இதேபோன்ற சூழலில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டல்கரும் தனது தந்தையை இழந்த சம்பவத்தையும், தனது விளையாட்டு மூலம் அவர் தனது தந்தைக்கு புகழஞ்சலி செலுத்தியதையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

விளையாட்டு வீரர்கள் பலருக்கு முன்மாதிரியாக இருப்பதற்காக குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம்-ஐ பிரதமர் பாராட்டினார். குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, தொற்று நேரத்தில் விளையாட்டையும் அவர் தொடர்ந்தது குறித்து பிரதமர் விசாரித்தார். அவருக்கு பிடித்த குத்து மற்றும் வீரர் குறித்தும் பிரதமர் கேட்டார். சிறப்பாக செயல்பட அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுடன் பேசிய பிரதமர், ஐதராபாத் கச்சிபவுலியில் அவர் பெற்ற பயிற்சி குறித்தும் விசாரித்தார். அவரது பயிற்சியில் உணவின் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் கேட்டார். குழந்தைகளை விளையாட்டு வீரர்களாக ஆக்க விரும்பும் பெற்றோர்களுக்கு, என்ன ஆலோசனை மற்றும் உதவி குறிப்புகள் கூற விரும்புகிறீர்கள் என பி.வி.சிந்துவின் பெற்றோரிடம் பிரதமர் கேட்டார். ஒலிம்பிக்கில் வெற்றி பெற பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், ஒலிம்பிக் போட்டியில் இருந்து திரும்பி வருகையில் அவர்களை வரவேற்கும்போது, அவருடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவதாக பிரதமர் கூறினார்.

விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது ஏன் என துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவனிடம் பிரதமர் கேட்டார். அகமதாபாத்தில் வளர்ந்த அவரிடம் குஜராத்தியில் பேசிய பிரதமர் அவரது பெற்றோர்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்தார். மணிநகர் பகுதி எம்.எல்.ஏ.வாக திரு நரேந்திர மோடி இருந்ததால், தனது ஆரம்ப காலங்கள் பற்றியும் இளவேனில் நினைவு கூர்ந்தார். அவர் படிப்பு மற்றும் விளையாட்டு பயிற்சி இரண்டையும் எப்படி சமன் செய்தார் என்பது குறித்தும் பிரதமர் விசாரித்தார்.

துப்பாக்கி சுடும் வீரர் சவுரப் சவுதரியிடம் பேசிய பிரதமர், கவனம் மற்றும் மனதை மேம்படுத்துவதில் யோகாவின் பங்கு குறித்தும் பேசினார். முந்தைய ஒலிம்பிக் போட்டிக்கும், தற்போதைய ஒலிம்பிக் போட்டிக்கும் உள்ள வித்தியாசம், கொரோனா தொற்றின் தாக்கம் பற்றி பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலிடம் பிரதமர் கேட்டார். அவரது பரந்த அனுபவம், ஒட்டுமொத்த விளையாட்டு குழுவுக்கும் உதவும் என திரு நரேந்திர மோடி கூறினார். மற்றொரு டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, ஏழை குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிப்பதற்காக அவரை புகழ்ந்தார். விளையாடும்போது அவர் தனது மூவர்ண பட்டை அணிவதை பிரதமர் குறிப்பிட்டார். நடனம் மீதான அவரது ஆர்வம் விளையாட்டுகளில் மன அழுத்தமாக உள்ளதா எனவும் பிரதமர் கேட்டார்.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்டிடம் பேசிய பிரதமர், குடும்ப மரபு காரணமாக, உயர்ந்த எதிர்பார்ப்புகளை அவர் எப்படி சமாளிக்கிறார் என கேட்டார். அவரது சவால்களை குறிப்பிட்டு, அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என பிரதமர் கேட்டார். அவரது தந்தையிடம் பேசிய பிரதமர், இத்தகைய புகழ்பெற்ற மகள்களை வளர்ப்பதற்கான வழிகளை பிரதமர் கேட்டார். நீச்சல் வீரர் சஜன் பிரகாஷிடம் பேசிய பிரதமர், பலத்த காயத்திலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

ஹாக்கி வீரர் மன்ப்ரீத் சிங்கிடம் பேசிய பிரதமர் கூறுகையில், இவருடன் பேசுவது, ஹாக்கி பிரபலங்கள் மேஜன் தயன் சந்த் போன்றோரிடம் பேசுவதை ஞாபகப்படுத்துவதாக உள்ளது என்றார். அவரது குழு, பாரம்பரியத்தை தொடர்ந்து காப்பாற்றும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் பேசிய பிரதமர், டென்னிஸ் விளையாட்டின் பிரபலம் அதிகரித்து வருவதை குறிப்பிட்டார், மற்றும் புதிய வீரர்களுக்கு சானியா மிர்சாவின் அறிவுரை குறித்தும் பிரதமர் கேட்டார். டென்னிஸில் சானியா மிர்சாவுடன் விளையாடும் வீராங்கனையுடன், அவரது சமன்நிலை குறித்தும் பிரதமர் விசாரித்தார். கடந்த 5-6 ஆண்டுகளில் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா கண்ட மாற்றம் குறித்தும் பிரதமர் கேட்டார். சமீப காலங்களில் இந்தியா தன்னம்பிக்கையை பார்ப்பதாகவும், அது செயல்பாட்டில் பிரதிபலிக்கும் என சானியா மிர்சா கூறினார்.

இந்திய விளையாட்டு வீரர்களிடம் பேசும்போது, தொற்று காரணமாக அவர்களுக்கு விருந்தளிக்க முடியவில்லை என பிரதமர் வருத்தம் தெரிவித்தார். கொரோனா தொற்று, வீரர்களின் பயிற்சியை மாற்றியதோடு, ஒலிம்பிக் ஆண்டையும் மாற்றிவிட்டது என பிரதமர் குறிப்பிட்டார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும்படி மனதின் குரல் நிகழ்சியில் நாட்டு மக்களிடம் கூறியதை அவர் நினைவு கூர்ந்தார். #Cheer4India ஹேஸ்டாக் பிரபலத்தையும் அவர் குறிப்பிட்டார். நாடு அவர்களின் பின்னால் உள்ளதாகவும், அவர்ளுக்கு நாட்டு மக்களின் ஆசிர்வாதங்கள் உள்ளன எனவும் அவர் கூறினார். நமோ செயலியில் மக்கள் உள்ளே சென்று விளையாட்டு வீரர்களை மக்கள் உற்சாகப்படுத்தலாம் என்றும், அதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். ‘‘135 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்கள், விளையாட்டு களத்தில் நுழையும் முன் உங்கள் அனைவருக்கும் நாட்டின் ஆசிர்வாதங்கள்’’ என பிரதமர் கூறினார்.

விளையாட்டு வீரர்களிடம் உள்ள பொதுவான பண்புகள், தைரியம், நம்பிக்கை மற்றும் நேர்மறை என பிரதமர் குறிப்பிட்டார். அனைத்து வீரர்களும் ஒழுங்கு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதி என்ற பொதுவான காரணிகளை கொண்டுள்ளனர் என அவர் கூறினார். விளையாட்டு வீரர்களிடம் உறுதி மற்றும் போட்டித்திறன் ஆகிய இரண்டும் உள்ளதை பிரதமர் குறிப்பிட்டார். புதிய இந்தியாவிலும் இதே பண்புகள் உள்ளன. புதிய இந்தியாவை விளையாட்டு வீரர்கள் பிரதிபலிக்கின்றனர் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை அடையாளப்படுத்துகிறார்கள் என பிரதமர் கூறினார்.

புதிய சிந்தனை மற்றும் புதிய அணுகுமுறையுடன், விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரின் பின்னால் நாடு துணை நிற்பதை விளையாட்டு வீரர்கள் இன்று கண்டனர் என பிரதமர் கூறினார். இன்று உங்களின் உந்துதல் நாட்டுக்கு முக்கியம். வீரர்கள் முழு திறனுடன் சுதந்திரமாக விளையாடவும், தங்கள் விளையாட்டு மற்றும் நுட்பத்தை மேம்படுத்தவும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் சமீபகாலத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களையும் பிரதமர் குறிப்பிட்டார்.

விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான பயிற்சி முகாம்கள் மற்றும் சிறந்த சாதனங்கள் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என பிரதமர் கூறினார். தற்போது விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் சர்வதேச வெளிப்பாடு அளிக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களின் ஆலோசனையால், விளையாட்டு தொடர்பான நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், குறுகிய காலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு அதிக அளவிலான வீரர்கள் தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். இதற்கு உடல் தகுதி இந்தியா, கேலோ இந்தியா போன்ற பிரசாரங்களும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளன என அவர் கூறினார். முதல் முறையாக, இந்திய வீரர்கள் அதிக அளவிலான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர் என அவர் கூறினார். முதல் முறையாக இந்தியா பல விளையாட்டுகளில் தகுதி பெற்றுள்ளது.

இளம் இந்தியாவின் நம்பிக்கையையும் ஆற்றலையும் பார்த்து, வெற்றி மட்டுமே, புதிய இந்தியாவின் வழக்கமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று என்று பிரதமர் கூறினார். சிறப்பாக விளையாடும்படி விளையாட்டு வீரர்களுக்கு அறிவுரை கூறிய பிரதமர், இந்தியாவுக்காக உற்சாகப்படுத்தும்படி அவர் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார்.

Exit mobile version