தேசிய விருதுகளை பெற்ற காக்கா முட்டை , கடைசி விவசாயி என மக்களை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் மணிகண்டன்.கடந்த 2015-ம் ஆண்டு வெளியான காக்கா முட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதற்கு முன்பே விண்ட் என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். காக்கா முட்டை படத்திற்காக சிறந்த குழந்தைகள் படம் என்ற பிரிவில், தேசிய விருது பெற்றிருந்தார். தொடர்ந்து குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கினார்.
2022-ம் ஆண்டு வெளியாக கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கியிருந்தார். விமர்சனரீதியான பாராட்டுக்களை பெற்றிருந்த இந்த படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. இயக்குனர் மணிகண்டன் மதுரையை அடுத்து உசிலம்பட்டி எழில் நகரில் வசித்து வருகிறார். தற்போது அடுத்த திரைப்பபட பணிகளுக்காக கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி ஒரு கொள்ளை கும்பல் உசிலம்பட்டியிலுள்ள இயக்குனர் மணிகண்டன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய், 5 பவுன் தங்க நகை, கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசால் வழங்கிய இரு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றனர்.
தேசிய விருதுபெற்ற இயக்குநர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உசிலம்பட்டி வட்டாரத்தில் மட்டுமல்ல அந்த மதுரை மாவட்டத்தையே பரபப்புக்குள்ளாக்கியது இதனை தொடர்நது, உசிலம்பட்டி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை
இந்நிலையில் இயக்குநர் மணிகண்டன்வீட்டில் திருடிய திருடர்கள் இன்று காலை மணிகண்டன் வீட்டில் பாலித்தீன் பையில், திருடிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களுடன், ‘அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு..’ என்ற இரண்டு வரிகள் எழுதப்பட்ட காகிதத்தையும் வைத்துவிட்டு சென்றனர்.
இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல்துறையினர் அவைகளை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருடர்கள், விருதுக்கான பதக்கங்களை மட்டும் வைத்து கடிதம் எழுதிவிட்டு சென்றுள்ளது உசிலம்பட்டி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.