உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி வளாகத்தின் பாதாள அறையில், ஹிந்துக்கள் பூஜை செய்வதற்கு தடை விதிக்க முடியாது என, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மனைலம்`மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி வளாகம் தொடர்பான வழக்கு, மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வளாகம், முன்பிருந்த கோவில் இடிக்கப்பட்டு அதன் மேல் கட்டப்பட்டுள்ளதால், அதை ஹிந்துக்களிடம் ஒப்படைக்கக் கோரி வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில், தொல்லியல் துறை ஆய்வு செய்து, தன் அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையே, ஞானவாபி வளாகத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாதாள அறையில் பூஜை செய்வதற்கு அனுமதி கேட்டு, சைலேந்திர குமார் பாதக் என்பவர், மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த, 1993ம் ஆண்டு வரை, தன் தாத்தா மற்றும் குடும்பத்தினர் அங்கு பூஜை செய்து வந்ததாகவும், அப்போது முதல்வராக இருந்த சமாஜ்வாதியின் முலாயம் சிங் யாதவ் இதற்கு தடை விதித்ததாகவும், தன் மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.
இதை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், கடந்த, ஜன., 17ல் அளித்த உத்தரவில், இந்த பாதாள அறையை மாவட்ட கலெக்டரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றது.
இதைத் தொடர்ந்து, ஜன., 31ம் தேதி அளித்த உத்தரவில், பாதாள அறையில் பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து, ஞானவாபி வளாகத்தை பராமரிக்கும் அஞ்சுமன் இந்தேஜாமியா மசூதி குழு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் இரு தரப்பு வாதங்கள் அடிப்படையில், பாதாள அறையில், ஹிந்துக்கள் பூஜை செய்வதற்கு தடை விதிக்க முடியாது.இந்த விவகாரத்தில் மாவட்ட நீதிமன்றம் அளித்த உத்தரவில் தலையிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் பூஜைகள் தொடர்ந்து நடைபெறலாம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.