தமிழகம் முழுவதும் தற்போது சர்ச் காட்டும் பணிகள் அதிகமாகி வருகிறது. முக்கியமாக மலை குன்றின் மீது சர்ச் கட்டும் பணிகள் வேகமெடுத்து வருகிறது. அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்படும் சர்ச்களின் எண்னிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை அருகே, உள்ள இளையாங்கன்னி மலை மீது சிலுவை நட்டு, பின் ஆக்கிரமித்து சர்ச் கட்டியுள்ளது, விசாரணையில் அம்பலமாகியுள்ளது.இது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரப்பரபினை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், இளையாங்கன்னி பகுதியில் , 4,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு நுாறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, கார்மேல் மலை மாதா கோவில், ரோமன் கத்தோலிக்க வேலுார் மறை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதில், இளையாங்கன்னி பகுதியை சேர்ந்த பல குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த கிராமத்தில், வனத்துறைக்குட்பட்ட மலையை இணைத்தவாறு, 160 ஏக்கர் பரப்பளவில், 150 அடி உயர மலைகுன்று உள்ளது. இவை வருவாய்த்துறை ஆவணத்தில், கல்லாங்குத்து என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மீது கடந்த, 1961ல், அப்பகுதி மக்கள் மூலம் சிலுவை நட செய்த சர்ச் நிர்வாகம், பொதுமக்களை முன்னிறுத்தி, மலை மீது, 2 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமித்து, 1982ல், சர்ச் கட்டியது.
தொடர்ந்து மலை செல்ல படிக்கட்டுகள் அமைத்து, 2014ல், குன்றை குடைந்து, மண் சாலை அமைத்து மலை மீது மேலும், 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமித்து பார்க்கிங் இடமாக மாற்றியது.மூன்று மாதங்களுக்கு முன், அந்த மண் சாலை, 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலையாக அமைக்க செங்கம் தொகுதி, தி.மு.க.,- எம்.எல்.ஏ., கிரி தலைமையில் பூமி பூஜை நடந்தது.
இந்நிலையில் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நட, கடந்த 19ல், கலெக்டர் முருகேஷ், மலை மீது சென்றபோது, 5 ஏக்கர் பரப்பளவில் மலை சமன் செய்து, சில கட்டுமான பணி நடந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதை அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு துறை விசாரணை நடத்தியதில், சர்ச் கட்டப்பட்டு அதை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம், அரசு ஆவணத்தில் கல்லாங்குத்து என உள்ளதும், அந்த இடம் யாருக்கும் பட்டா வழங்கப்படாததும் தெரியவந்தது. மேலும், மக்களை முன் நிறுத்தி சர்ச் நிர்வாகம் மலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவது, விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சர்ச் தவிர்த்து மற்ற இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற, சர்ச் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இக்கிராமத்தை ஒட்டியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம், பொரசப்பட்டு பஞ்.,க்கு உட்பட்ட சவேரியார்பாளையத்தில் உள்ள மலை மீது, சிலுவை நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், அனுமதியின்றி புற்றீசல் போல் பெருகி வரும் கிறிஸ்தவ ஜெப கூடங்களை அகற்ற, இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அருண்குமார் தலைமையில் கலெக்டர், முருகேஷிடம் மனு அளிக்கப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், புதியதாக கிறிஸ்தவ ஜெப கூடங்கள் மற்றும் சர்ச் கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. அதில் ஏழை இந்துக்களையும், குழந்தைகளையும் ஏமாற்றி மதமாற்றம் செய்து வருகின்றனர். முக்கியமாக நோயுற்றுள்ள இந்துக்களை நாங்கள் ஜெபம் செய்து, உங்களுடைய நோய்களை குணம் செய்வதாக கூறி கொண்டு, ஒரு கும்பல் மாவட்டம் முழு வதும் சுற்றி வருகிறது.
உதாரணமாக, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ராமகிருஷ்ணா ஓட்டல் எதிரில், வீடு என ஆவணம் பெற்றும், கீழ்பென்னாத்துார் அடுத்த சானிப்பூண்டி கிராமத்தில் பஞ்., நிர்வாகத்திடம் வீட்டு மனை என அனுமதி பெற்றும், இளையாங்கன்னி பஞ்.,க்கு சொந்தமான மலையை ஆக்கிரமித்தும், போளூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் மலையை ஆக்கிரமித்தும் கிறிஸ்தவ பொம்மைகளை வைத்து ஜெபவீடாக நடக்கிறது. அரசின் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றியும், அனுமதி பெறாத ஜெபக்கூடங்களையும் தடை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி : தினமலர்