500 வருட போராட்டங்களுக்கு பிறகு உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22-ல் நடைபெறவிருப்பது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி தீபாவளியாக கொண்டாட நாட்டு மக்கள் தயாராக வேண்டும் என கூறியுள்ளார்.
இந்திய அளவில் பல்வேறு மக்களுக்கு அழைப்பு விடப்பட்டிருக்கிறது. இதையொட்டி, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுடன் தொடர்புடைய பல்வேறு சம்பவங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் இருக்கின்றன.
அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் வரை யாருடனும் வாய் திறந்து பேச மாட்டேன்’ என, மவுனம் விரதம் இருந்த ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி தேவி, 85.வயது மூதாட்டியின் 30 ஆண்டுகளாக மவுன விரதம் வரும், 22ம் தேதி, தன் விரதத்தை நிறைவு செய்ய முடிவு செய்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியைச் சேர்ந்தவர், சரஸ்வதி தேவி, 85. இவர் ராமர் மீது அதீத பக்தி கொண்டவர். இவருக்கு, நான்கு மகன்கள், நான்கு மகள்கள்.உள்ளார்கள் இவரது கணவர் அகர்வால், 35 வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார்.
அதற்கு பின், ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டு, கடவுள் ராமரை வழிபடுவதையும், அவர் புகழ் பாடுவதையுமே, வாழ் நாள் லட்சியமாக வைத்து வாழ்ந்து வருகிறார், சரஸ்வதி.கடந்த, 1992ல் ராமஜென்ம பூமியில் இருந்த மசூதி அகற்றப்பட்ட பின், சரஸ்வதி தேவி ஒரு சபதம் எடுத்தார்.
‘ராமஜென்ம பூமியில், ராமருக்கு கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடக்கும் வரை, வாய் திறந்து பேச மாட்டேன். மவுன விரதம் இருப்பேன்’ என, அறிவித்த அவர், அந்த சபதத்தை தீவிரமாக பின்பற்றத் துவங்கினார்.
தனக்கு வேண்டியவற்றை சைகை வாயிலாகவே பிறருக்கு தெரிவித்து வந்தார். சைகையால் விளக்க முடியாத விஷயங்களை, எழுதி காட்டு வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.
பெரும்பாலான நேரத்தை, கடவுள் ராமரை வழிபடுவதற்காகவே கழித்து வந்தார். கோவில்களுக்கு சென்று ராமரைப் பற்றி பாடல்களை பாடுவது, ஹனுமன் சாலிசா பாடுவது என, தன் அன்றாட வாழ்வை நகர்த்தி வந்தார்.
இடையில், சில தவிர்க்க முடியாத காரணத்தால், மதிய வேளையில், ஒரு மணி நேரம் மட்டும், மற்றவர்களுடன் உரையாடி வந்தார். ஒரு மணி நேரத்துக்குப் பின், மீண்டும் மவுன விரதத்தை தொடர்ந்தார்.
இந்நிலையில் தான், 2020ல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதை கேள்விப்பட்டதும், மீண்டும் முழுமையான மவுன விரதத்தை துவக்கிய சரஸ்வதி தேவி, கும்பாபிஷேகத்தன்று தான், இனி வாய் திறந்து பேசுவேன் என அறிவித்தார்.
தற்போது ராமர் கோவில் கட்டப்பட்டு, வரும், 22ல் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும்படி சரஸ்வதி தேவிக்கு , ஆன்மிக அமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று, தன்பாதில் இருந்து நேற்று அயோத்திக்கு, கங்கா சட்லெஜ் ரயிலில் புறப்பட்டுச் சென்றார்.
இது குறித்து சரஸ்வதி தேவியின் மகன் ஹரே ராம் அகர்வால் கூறியதாவது:கடவுள் ராமருக்காகவே, தன் வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டு உள்ளார், என் தாய்.ஆன்மிகத்தில் மிகவும் நாட்டம் உடைய அவர், பிடிவாதமான குணமுடையவர். 1992ல் இருந்து மவுன விரதம் இருந்து வருகிறார்.
ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டதும், அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.தற்போது அயோத்திக்கு சென்றுள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேக நாள், என் தாய்க்கு மறக்க முடியாத, மகிழ்ச்சியான ஒரு நாளாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.