டாஸ்மாக் கடைகளை மூடிட, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தவறுவது ஏன்?
குடி குடிப்போரை மட்டுமல்ல, குடிப்போரின் வீட்டையும், நாட்டையும் கெடுக்க வல்லது. குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களின் குடும்பங்கள் பொருளாதாரத்தால் பாதிக்கப்படுவது ஒன்று; உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் என்பது மற்றொன்று.
பெருந்தொற்று காலகட்டங்களில் குடிப்பழக்கம் அறவே நிறுத்தப்பட வேண்டும். ஏனெனில் மது பல வழிகளிலும் கரோனாவை அதிகரிக்கக்கூடியது. மதுக்கடைகளில் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதால் மதுபிரியர்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக நோய் தொற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
மது ஒவ்வொருவர் உடலிலும் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை வெகுவாக குறைப்பதால் கரோனா போன்ற பெரும் தொற்றுகள் குடிப்பழக்கத்திற்கு ஆளானோரிடம் எளிதாக தொற்றிக் கொள்வது மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் பரவுகிறது. மேலும் ஆரம்பக்கட்ட கரோனா அறிகுறிகளைக் குடிப்பழக்கம் மறைத்து விடுகிறது.
இதனால் மது பழக்கத்திற்கு ஆளானோர் சிகிச்சை அளித்தாலும் பலன் அளிக்காத நிலையிலேயே மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, பெரும்பாலானோர் உயிரிழப்புகளுக்கு ஆளாகின்றனர். டாஸ்மாக் கடைகள் மூலமாக கரோனா தொற்று வேகமாகப் பரவியுள்ளது என்பது கடந்த கால அனுபவங்களாகும்.
கடந்த ஒரு மாத காலமாக டாஸ்மாக் கடைகள் முற்றாக மூடப்பட்டிருந்த நிலையில் கரோனாவின் தாக்கம் ஓரளவிற்குக் குறைந்து வருகிறது. ஆனால் மரணங்களின் எண்ணிக்கை இன்னும் குறையாமல் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
11.06.2021தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் கிராமப்புற மற்றும் தேநீர் கடைகளையும்; தொழில், வணிக நிறுவனங்களையும் கூட திறக்க அனுமதி இல்லாத நிலையில் டாஸ்மாக் கடைகளை மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதித்திருப்பது எவ்விதத்தில் நியாயம்.?
தேர்தலுக்கு முன் தி.மு.கவால் கொடுக்கப்பட்ட மிக முக்கிய வாக்குறுதிகளில் மதுக்கடைகளைத் திறக்க மாட்டோம் என்பது ஒன்று. அது மட்டுமின்றி கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின் போது மது கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் உட்பட திமுகவினர் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கொடுத்த வாக்குறுதியையும், இப்போது ஆட்சிக்கு வந்ததையும் மறந்துவிட்டு தாராளமாகக் குடிக்க ஏதுவாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது தமிழக மக்களுக்குத் தெரிந்தே தீங்கு செய்வது ஆகாதா?
ஏற்கனவே வருமானம் இல்லாததால், வாங்கிய சிறு சிறு கடன்களைக் கூட கட்ட முடியாமல், கந்துவட்டி கும்பல்களிடம் சிக்கி பல குடும்பங்கள் தத்தளிக்கின்றன.
வரும் 14 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதிலும், மறுநாளான 15 ஆம் தேதி முதல் இரண்டாவது தவணையாக ரூ 2,000 கொடுப்பதிலும் உள்ள மர்மம் என்ன? தொடர்பு என்ன? கடந்த ஒரு மாதமாகத்தான் அடி தடி சண்டை சச்சரவுகள் இல்லாமல் பெண்கள் வீடுகளில் நிம்மதியாக இருக்கிறார்கள்;
காவல்துறையும் நிம்மதியாக இருக்கிறது. தாய்மார்களின் நிம்மதியைக் காட்டிலும், கிராம மற்றும் நகர்புற தெருக்களில் நிலவும் அமைதியைக் காட்டிலும், மதுக்கடைகளால் வரும் லாபம் மட்டும் தான் முக்கியமா? தினமும் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் கழக கண்மணிகளின் சாராய ஆலைகளின் லாபம் தான் உங்களுக்கு முக்கியமா?
தடுப்பூசிகள் தான் கரோனாவை தடுக்கும் மாமருந்து என்ற அடிப்படையில் தமிழகத்தில் தடுப்பூசிக்கு எதிரான தயக்கம் மெல்ல மெல்ல நீங்கி, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் நேரத்தில் தடுப்பூசி போடுவதற்கும், போட்டபின்னும் குடிக்க கூடாது என்ற மருத்துவரின் ஆலோசனைகளைக் குடிப்பழக்கத்துக்கு ஆளானோரிடம் எப்படி அமலாக்குவீர்கள்?
எனவே, மதுக்கடைகளைத் திறப்பதில் பல்வேறு விதமான உடல், பொருளாதார ரீதியான பாதிப்புகள் மற்றும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் காரணிகள் இருப்பதால் டாஸ்மாக் கடைகளை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது என புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
மக்களின் உடல்நிலை, பொருளாதார நிலை, கரோனா பெருந்தொற்று பரவும் அபாயம் பற்றி கவலை கொள்ளாமல், திமுக கழக கண்மணிகளின் சாராய ஆலைகளின் பெரும் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் செயலை கண்டித்தும், அனைத்து டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட கோரியும் தமிழகமெங்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடத்தப்படும், தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, நிறுவனர் & தலைவர்.புதிய தமிழகம் கட்சி.