திராவிட மாடல் என்று எதுவுமே இல்லை. அது ஒரு காலாவதியான கொள்கை, நாடு முழுவதும் மொழி வெறியை திணிக்கும் வகையில் இதன் கொள்கை உள்ளது’ என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.திமுக அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஆங்கில நாளிதழுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டி: திராவிட மாடல் முறையை பாராட்டி நான் ஆதரிக்க வேண்டும் என அவர்கள் (திமுக.,வினர்) விரும்புகின்றனர். அது ஒரு அரசியல் வார்த்தை மட்டுமே. திராவிட மாடல் என்று எதுவுமே இல்லை. அது ஒரு காலாவதியான கொள்கை, அதை மீண்டும் புதுப்பிக்க முயற்சி நடைபெற்று வருகிறது.
ஒரே நாடு ஒரே பாரதம் என்ற கொள்கைக்கு எதிரானதே திராவிட மாடல். நாடு முழுவதும் மொழி வெறியை திணிக்கும் வகையில் இதன் கொள்கை உள்ளது. கவர்னர் மாளிகை செலவினங்களில் விதிமீறல் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுவது அப்பட்டமான பொய். சிதம்பரத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறவே இல்லை. தீட்சிதர்கள் மேல் அரசு பொய் வழக்கு போட்டுள்ளது. சட்டசபை பேச்சில் தவறான புள்ளி விவரங்களை, பொய்களை எழுதிக் கொடுத்து என்னைப் பேச சொன்னதால் மறுத்தேன்.
சட்டசபையில் எனது உரைக்கு பிறகு, அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பதற்காக அவையில் காத்திருந்தார். ஆனால் சபாநாயகருடன் ரகசியமாக பேசி முதல்வர் எனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். “சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது நீங்கள் வெளியேறியதும், முக்கிய தலைவர்களின் பெயரை குறிப்பிடாததும் சரியா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “2022 ஆம் ஆண்டு சட்டபேரவையில் முதன்முறையாக நான் பேசுவதற்கு முன்பு, தேசிய கீதம் இசைக்க மாட்டோம் என அவர்கள் என்னிடம் கூறினார்கள். ஆனால் நான் உரையாற்றுவதற்கு முன், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.மதுரையில் கட்டப்பட்டு வரும் கருணாநிதி நூலகத்தில் தமிழ், ஆங்கிலத்தில் மட்டும் 3.25 லட்சம் புத்தகங்கள் வாங்குகிறார்கள். மற்ற மொழி புத்தகங்கள் வாங்கவில்லை.
தனிப்பட்ட முறையில் எனக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. ஸ்டாலின் நல்ல மனிதர். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால், கவர்னர் தனது அதிகாரத்தை மீறி எல்லை தாண்டி செயல்படுகிறார் என்று திமுக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டு. அது முழுக்க முழுக்க அபத்தமானது. கவர்னருக்கு என்று ஒரே ஒரு எல்லை தான் இருக்கிறது. அந்த எல்லை என்பது அரசியல் சாசனத்தால் வகுக்கப்பட்டது. மாநில அரசு நிர்வாகத்தில் நான் தலையிடவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.