காங்கிரஸ் கட்சியில் பாதி பேர் பெயிலிலும் (ஜாமினில்), மீதி பாதி பேர் ஜெயிலிலும் இருப்பதாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கொப்பல் பகுதியில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் கட்சியில் ராகுல், சோனியா, டி.கே.சிவக்குமார் என பாதி பேர் பெயிலில் (ஜாமினில்) இருக்கின்றனர், மீதி பாதி பேர் ஜெயிலில் இருக்கின்றனர். அப்படியிருக்கையில் அவர்கள் ஊழலை பற்றி பேசுகின்றனர். பி.எப்.ஐ.,க்கு எதிரான வழக்குகளை காங்கிரஸ் திரும்பப்பெற்றது, ஊழலில் ஈடுபட்டது, வளர்ச்சிப்பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது. காங்கிரசுக்கு ஓட்டளித்தால் பி.எப்.ஐ.,யை மீண்டும் கொண்டு வருவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
9 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது? முன்பெல்லாம் இந்தியா ஊழலுக்கு பெயர் போனதாக இருந்தது. ஆனால் இப்போது, பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ், ஜி20 மற்றும் எஸ்.சி.ஓ (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) ஆகியவைகளின் மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. மற்ற நாட்டு பிரதமர்கள், அமைச்சர்கள், வெளியுறவு அமைச்சர்கள் என பலரும் இந்தியா வருகின்றனர். இந்தியாவிற்கு இந்த அடையாளத்தை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.