நீதிமன்றத்தை மதிக்காத தமிழக அரசு… மொத்தமாக முடித்த சம்பவம்.. இனி அப்படி நடந்தால் தகுதி நீக்கம் தான்…

நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் நிறைய வழக்குகளில் எதிர் மனுதாரராக அரசுதான் இருக்கிறது. அரசு எடுத்த ஒரு தவறான நடவடிக்கைக்கு நிவாரணம் வேண்டி, அரசு இழைத்த அநீதிக்கு நியாயம் வேண்டி, பலரும் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். நியாயமாக, ஒருவர் நீதிமன்றத்துக்கு வர வேண்டிய தேவை இல்லாமலே அதைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால், வழக்குகளை இழுத்தடிப்பதும், பாதிக்கப்பட்டவர்களை வஞ்சிப்பதும், மேல் முறையீடு என்ற பெயரில் நீதியைத் தடுக்க முயல்வதும் நடக்கிறது. அதற்கு உதாரணம், சமீபத்தில் தமிழ்நாடு அரசு தொடுத்த ஒரு மேல்முறையீட்டு வழக்கு.

சென்னை வேப்பேரியில்‌ உள்ள அரசு உதவிபெறும்‌ கல்லூரியில்‌ தூய்மைப் பணியாளர்‌ நியமனத்துக்குத் தமிழ்நாடு அரசு ஒப்புதல்‌ வழங்கவில்லை. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிபதி ‘உடனடியாக ஒப்புதல் வழங்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்தாமல்‌, தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளர்‌ மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நான்கு வாரங்களில் அமல்படுத்த உத்தரவிட்டதோடு, ஏற்கெனவே தீர்வு காணப்பட்ட விவகாரத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்ததற்காக ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்தது.

இதேபோல இன்னொரு வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி தேவானந்தம், ‘‘நீதிமன்ற உத்தரவுகளைத் தமிழ்நாடு அரசும் அதிகாரிகளும் மதிப்பதாகத் தோன்றவில்லை. நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என்று அரசு உறுதிபூண்டது போல் இருக்கிறது” என்று விமர்சித்தார். நீதிமன்ற உத்தரவுகளை அரசு நிறைவேற்றாதபோது, சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க மீண்டும் நீதிமன்றம் வருகிறார்கள். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். அதிகாரிகளின் அலட்சியமே இதற்குக் காரணம்.

இந்திய நீதிமன்றங்கள் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளால் திணறிக்கொண்டிருக்கின்றன. கடந்த 2023 ஜூலையில் ஒரு முக்கியமான மைல்கல்லை இந்திய நீதித்துறை தொட்டது. முதல்முறையாக இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அப்போது 5 கோடியாக உயர்ந்தது. விசாரணை தாமதமாவது ஒரு காரணம் என்றாலும், போதுமான நீதிமன்றக் கட்டமைப்புகளை உருவாக்காமல் போனது, காலிப் பணியிடங்களை முறையாக நிரப்பாதது என அரசுகளே அதற்கும் மறைமுகக் காரணமாக இருக்கின்றன.

ஏற்கெனவே வழக்குகளால் திணறும் நீதிமன்றங்களை அநாவசிய மேல்முறையீடு என்ற பெயரில் அரசுகளே மேலும் சிக்கலுக்குள்ளாக்குவது, முக்கியமான பிரச்னைகளில் இருந்து திசை திருப்பிவிடும். நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் சம்பந்தப்பட்டவர்கள் நெடுங்காலம் மன உளைச்சலோடு காத்திருக்க வேண்டியுள்ளது. இது நிர்வாகத்தையும் நீதிமன்றங்களையும் மட்டுமன்றி, தனி மனிதர்களையும் பாதிக்கும் பிரச்னையாக இருக்கிறது.

அதிகாரிகள் மக்களிடம் ஈகோ காட்டாமல், மனசாட்சிப்படியும் சட்டத்துக்கு உட்பட்டும் செய்ய வேண்டிய விஷயங்களைத் தயங்காமல் செய்தாலே பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்துவிடும். எல்லாவற்றுக்கும் நீதிமன்றங்களைத்தான் நாட வேண்டும் என்பது நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல. நீதியைத் தாமதிப்பதும், நீதியை மறுதலிப்பதே ஆகும்.இவ்வாறு இனியும் நடனத்தால் தகுதி நீக்கம் தான்..

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version