மதம் மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது-வருகிறது அடுத்த அதிரடி !

இந்து மதத்தில் இருந்து விலகி மதம் மாறும் எவருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும் பிற அரசு சலுகைகளும் கிடையாது என்று கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தை கர்நாடக மாநில அரசு நிறைவேற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலமாக தூண்டுதலின் பேரில் மதம் மாற்றுவது பெரிதளவு கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் மதம் மாற்றும் நிகழ்வு தினமும் நடைபெற்று வருகிறது. இவற்றில் பெரும்பான்மையானவை கட்டாய அல்லது தூண்டுதலின் பேரில் நடக்கும் மதமாற்றம் ஆகவே இருந்து வருகிறது. மதம் மாறினாலும் தங்கள் தாய் மதத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கப்பெறும் என்ற காரணத்தை காட்டியும் மதமாற்ற சக்திகள் இயங்கி வருகின்றன.

மேலும் லவ் ஜிகாத் பிரச்சனையில் திருமணத்திற்கு பின் அல்லது திருமணத்தின் போது மதம்‌ மாற மறுக்கும் அப்பாவி இந்து பெண்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. எனவே பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருகின்றன. தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆளும் கர்நாடகாவிலும் கட்டாய மதமாற்ற தடை சட்டம் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் தூண்டுதலின் பெயரில் நடைபெறும் மதமாற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டாய அல்லது பணம், கல்வி, மருத்துவ உதவி தருவதாக தூண்டுதல் மூலம் மதம் மாற்றக் கூடாது என்று அரசியலமைப்பு சட்டம் கூறும் போதும், அவ்வாறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்க சட்டத்தில் இடம் இல்லை.

இது மதமாற்ற சக்திகளுக்கு சாதகமாக இருக்கிறது. அதிகபட்சம் பொது அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் குந்தகம் விளைவிப்பதாக மட்டுமே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடியும். இதை நிவர்த்தி செய்யும் விதமாக கட்டாயப்படுத்தியோ அல்லது ஏமாற்றியோ மதம் மாற்றுபவர்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாகவும், மதம் மாற விரும்புவோர் இரண்டு மாதங்களுக்கு முன்பே துணை கமிஷனரிடம் பதிவு செய்ய வேண்டும் என்று விதிகளை உள்ளடக்கியும் கர்நாடக அரசு சட்டத்தை வடிவமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் மதம் மாற விரும்புவோருக்கோ, அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கோ எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது. மதம் மாறுபவர்கள், மாற்றுபவர்கள் இதில் தொடர்புடைய அமைப்புகள் ஆகியவை பற்றிய முறையான தகவல்களை சேமிக்கவே இந்த சட்டம் என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

Exit mobile version