கொரோன தொற்று காரணமாக கடந்த 33 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே இதை முன்னுதாரணமா தமிழக அரசு ஊரடங்கு முடிந்தவுடன் நிரந்தரமாக மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும்’ என, தமிழக பா.ஜ க தலைவர எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் : பல ஆண்டுகளாக, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழும்போது, ‘கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும்’ எனக்கூறி, தமிழக ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்.ஒரு மாத ஊரடங்கில், மது கிடைக்காதவர்கள் யாரும், தற்கொலை செய்யவில்லை; மன நோய்க்கு உள்ளாகவில்லை. மாறாக, பெண்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கெட்டதிலும் ஒரு நல்லது என்பதை போல, கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த அறிவிக்கப் பட்ட ஊரடங்கு, மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவது சாத்தியமானது என்பதை நிரூபித்து உள்ளது.தமிழகத்தில், நாளையே முழு மதுவிலக்கு வந்தாலும், மது இல்லாமல், தமிழகம் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில், முழு மதுவிலக்கை அமல்படுத்த, சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழக அரசு, இந்த உண்மையை புரிந்து, ஊரடங்கிற்கு பின், நிரந்தரமாக மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும்.இவ்வாறு, பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.