சென்னையில் மட்டும் 11,217 போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து! அப்போ இந்தியா முழுவதும் அடேங்கப்பா! அதிரடி கட்டிய மத்திய அரசு!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய கம்பெனி விவகாரங்கள் இணை அமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் கூறியுள்ளதாவது:

உண்மையான வர்த்தகச் செயல்பாடுகள் அல்லது சொத்துகள் இல்லாத, வரி ஏய்ப்பு, பணமோசடி, பினாமி நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் போலி நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இத்தகைய நிறுவனங்களைக் கண்டறிந்து, உரிமங்களை ரத்து செய்வதற்காகச் சிறப்புப் பணிக்குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. 2018-2021 ஆண்டுகளில் 2,38,223 போலி நிறுவனங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது.சென்னை பகுதியில் 2018 முதல் 2021 ஜூன் வரை 11217 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 191 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

2018 முதல் 2021 வரை 370 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளன.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2018-19-ம் ஆண்டில் 6 வெளிநாட்டு நிறுவனங்களும், 2019-20-ம் ஆண்டில் 7 வெளிநாட்டு நிறுவனங்களும், 2020-21-ம் ஆண்டில் 9 வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளன.

2019-ம் ஆண்டு 118 வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ 13,58,22,000 பதிவுக் கட்டணமாகவும், 2020-ம் ஆண்டு 124 வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ 13,20,03,100 பதிவுக் கட்டணமாகவும், 2021-ம் ஆண்டு 78 வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ 7,02,46,600 பதிவுக் கட்டணமாகவும் பெறப்பட்டுள்ளன. என தெரிவித்துள்ளார்

Exit mobile version