நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். அதிலும், நிர்வாகி கரு.பிரபாகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அது, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, “14 ஆண்டுகளாக நாங்கள் நாம் தமிழர் கட்சியில் உள்ளோம். ஈழ மக்களை காப்பாற்ற கட்சி ஆரம்பித்தோம், தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்தோம், பலமுறை சிறை சென்றுள்ளோம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி மண்டலத்தில் மட்டும் ஒரு லட்சம் வாக்குகளை நாதக கட்சிக்காக பெற்று தந்தோம். கட்சியை ஆரம்பித்த போது பல மாநில பொறுப்பாளர்கள் இருந்தனர். ஆனால் இப்பொது அவர்கள் கட்சியில் இல்லை. திட்டமிட்டு ஒரு சிலர் ஒதுக்கப்படுகிறார்கள்.
14 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எந்தவித மரியாதையும் இங்கு இல்லை. அவர்கள் நிராகரிக்கப்படுகின்றனர். எங்கள் இளமைக்காலம் முழுவதும் கட்சிக்காகவே சென்றுவிட்டது. நாங்கள் பிச்சை எடுத்து கட்சிக்கு நிதி சேர்த்தால், அந்த நிதியில் சீமான் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்.
சீமானின் வீடு ரூ.2 லட்சம் ரூபாய் வாடகையில் உள்ளது, அவருக்கு 15 வேலையாட்கள் இருக்கிறார்கள். அவை அனைத்தும் கட்சியின் பணம் தான். கட்சியின் செயல்பாடுகளில் கட்டுப்பாடு இல்லை, தனிமனித அடிப்படையில் நடக்கும் அரசியலை எதிர்க்க வேண்டும் என்ற எங்கள் எண்ணம் தோல்வியடைந்தது.
சீமான், பிற கட்சியினர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார், ஆனால் நாம் தமிழர் கட்சியினரின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு கூட செல்லவில்லை. சிறை சென்றவர்கள் மற்றும் கட்சிக்கு உழைத்தவர்களை மீண்டும் இணைக்கப்படவில்லை என்றால், விலகியவர்களை ஒன்றிணைத்து புதிய தமிழ் தேசிய இயக்கம் உருவாக்கப்படும்”, என்று நதாக நிர்வாகி பிரபாகரன் பேசி இருக்கிறார்.