கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்,
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் விவசாயத்திற்கு மையப்புள்ளியாக விளங்கும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தின் உயிர்நாடியான காண்டூர் கால்வாயின் மராமத்துப் பணிகள் ஜூலை மாதமே முடிவடைந்திருக்க வேண்டிய நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் திறனற்ற நிர்வாகத்தினால் அவை இன்னும் முடிந்தபாடில்லை.
இதன் விளைவாக, தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழையினால் பரம்பிக்குளம் அணை நிரம்பினாலும், திறக்கப்படும் தண்ணீரானது குறித்த நேரத்தில் திருமூர்த்தி மலையை சென்றடைவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பிஏபி பாசனத்தை நம்பியுள்ள தமிழக விவசாயிகள் இதன்மூலம் பெரிதும் பாதிப்புக்குள்ளாவர்கள் என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் சிந்தித்து, முன்னெச்சரிக்கையாக காண்டூர் கால்வாயை தூர்வாருதல் போன்ற பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
மேலும், தமிழகம் தண்ணீர்ப் பஞ்சத்தில் சிக்காமலிருக்க, தேவையான தண்ணீரை வழங்கக்கோரி நாள்தோறும் அண்டை மாநிலத்தாரிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தமிழகத்தில் பெய்துவரும் பருவமழை நீரை சரியான முறையில் சேமித்து பாதுகாப்பதே ஒரு சிறந்த நிர்வாகத்திற்கு அழகு.
எனவே, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும், விவசாயிகளும் பயன்பெறும் வகையில் காண்டூர் கால்வாயின் பராமரிப்பு பணிகளைத் துரிதப்படுத்த வேண்டியது தமிழக முதல்வர் ஸ்டாலினின் தலையாய கடமை என்பதை அவர் நினைவில் கொள்ளவேண்டும்.