இந்தியாவில் ஆஸ்திரேலிய இடையேயான மெய்நிகர் உச்சிமாநாடு இன்று நடைபெறும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக வரலாற்றில் இது வரை இல்லாத அளவில் இந்தியாவில் ரூ.1500 கோடி மதிப்பிலான முதலீட்டை பல்வேறு துறைகளில் ஆஸ்திரேலியா அறிவிக்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது .
முன்னதாக, 2020 ஜூன் மாதம் பிரதமர் மோடிக்கும் மோரிசனுக்கும் இடையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க முதல் மெய்நிகர் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, இந்தியா-ஆஸ்திரேலியா உறவு ‘விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு’ என்ற நிலைக்கு உயர்ந்தது. தூய்மையான தொழில்நுட்பம் மற்றும் முக்கியமான கனிமங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்புக்காக ரூ.183 கோடியும், விண்வெளித் துறையில் உறவுகளை மேம்படுத்த ரூ.136 கோடி உள்ளிட்ட ரூ.1,500 கோடி (280 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்) பல முதலீட்டு திட்டங்கள் இதில் அடங்கும். இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் வகையிலான மிகப்பெரிய அளவிலான முதலீடுகளை மோரிசன் அறிவிப்பார் என்று தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான கனிமங்கள் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) மூலம் ஆஸ்திரேலியாவில் உலோக நிலக்கரி மற்றும் லித்தியம் ஆகியவற்றுக்கான இந்தியா அணுகலை அதிகரிக்க உதவும் என்பதோடு, இந்தியாவின் வளர்ந்து வரும் மின்சார வாகனங்களுக்கான தேவை மற்றும் உள்கட்டமைப்பைப் பூர்த்தி செய்ய இது உதவும் என தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரிய கனிமங்கள் துறையில் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதில் இந்தியாவும் ஆர்வம் காட்டி வருகிறது. இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த புதிய மையங்களை அமைப்பதற்காக மொத்த தொகுப்பில் ரூ.152 கோடியும், திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு தனித் தொகையாக ரூ.97 கோடியும் ஒதுக்கப்படும் என்று வெளியுறவு வட்டாரங்கள் தெரிவித்தன.
இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தையும், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களில் இரு நாடுகளின் நெருங்கிய ஒத்துழைப்பையும் இந்த உச்சிமாநாடு எடுத்துக்காட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.