பாரத நாடு என்பது கலாசாரம் மற்றும் நாகரிக வளர்ச்சியால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது என பீஹார் மாணவர்களுக்கு மத்தியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
‛ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின்கீழ், சென்னை கவர்னர் மாளிகையில் பீஹார் மாணவர்களுடன் கவர்னர் ரவி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: பாரதம் என்பது 1947ம் ஆண்டு உருவாக்கப்படவில்லை; 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானது. குறிப்பாக பாரத நாடு என்பது கலாசாரம் மற்றும் நாகரிக வளர்ச்சியால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது. ராஜாக்கள் காலம் முதல் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.
பன்மொழிகள் கொண்ட நாடாக இருப்பது இந்தியாவிற்கு அழகு. பழமையான மொழி, கலாசாரத்தை தமிழகம் கொண்டுள்ளது. பழமையான மொழிகள் என்றால் தமிழும், சமஸ்கிருதமும் சொல்வர். அதில் இப்போது வரை முடிவு கிடைக்கவில்லை. தமிழில் இருந்து சமஸ்கிருதத்திலும், சமஸ்கிருதத்தில் இருந்து தமிழிலும் சொற்கள் வந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.