இந்திய சீனா போருக்கு காரணமான கல்வான் பள்ளதாக்கு அதன் வரலாறு என்ன ?

அது என்ன கல்வான் பள்ளதாக்கு என்றால் அதன் வரலாறு கொஞ்சம் உருக்கமானது

சீக்கிய பேரரசு வடக்கே பெரும் ஆளுமையாக இருந்தபொழுது காஷ்மீர் அவர்களிடம் இருந்தது, அவுரங்கசீப்புக்கு பின்னரான மொகலாய சாம்ராஜ்யத்தை உடைத்து சீக்கியர் வடக்கே பெரும் ராஜ்யம் வைத்திருந்தனர்

பின் 1840 வாக்கில் பிரிட்டிசார் சீக்கியரை வீழ்த்தி காஷ்மீரை கையில் எடுத்தனர், அப்பொழுது குலாப் சிங் என்பவர் உதவினார், அவருக்கு காஷ்மீரின் மன்னராக முடிசூட்டி வைத்தனர் பிரிட்டிசார்

அந்த குலாப் சிங்க் தான் 1940களில் காஷ்மீர் அரசராக இருந்த ஹரிசிங்கின் தாத்தா

குலாப்சிங் காலத்தில் காஷ்மீரில் கால்வைத்த பிரிட்டிசார் அதன் அழகில் சொக்கினர், அப்பொழுது பிரிட்டன் பெரும் தாதா என்பதாலும் , திபெத் தனியான அமைதியான நாடு என்பதாலும் அங்கே சிக்கலே இல்லை

பாகிஸ்தான் சைனா என இம்சைகளெல்லாம் அன்று இல்லை, பிரிட்டன் வகுத்ததே விதி

அந்த பிரிட்டிசார் மலையேற்றம் மற்றும் சிகரங்களை அளப்பது என அங்கு சுற்றி திரிந்தபொழுது ஒருவன் அவர்களுக்கு உதவினான் அவன் பெயர் குலாம் ரசூல் கல்வான்.

லடாக்கில் பிறந்த அவனுக்கு அந்த ஏரியா முழுக்க அத்துபடி என்பதால் அவன் மூலமே அங்கு பெரும் இடங்களை பிரிட்டிசாரால் சுற்றி பார்த்து அளக்க முடிந்தது

பிரிட்டிசாருக்கு பெரும் உதவியாக அவன் இருந்தான், அதுவும் கே2 சிகரம் உட்பட பல சிகரங்களை அவன் உதவின்றி பிரிட்டிசாரால் அளந்திருக்க முடியாது

17 வயதில் பிரிட்டிசாருக்கு வழிகாட்ட ஆரம்பித்த அவனின் பயணம் 1925 வரை உற்சாகமாக நடந்தது , அந்த மலை உச்சியில் புதிய சூழலில் அவனே அவர்களை நடத்தி சென்றான்

அவனை பொறுத்தவரை பிரிட்டிசார் விருந்தாளிகள், நம் பகுதியினை சுற்றிகாட்ட வேண்டும் எனும் ஆர்வமும் வெகுளிதனமும் அக்கறையும் இருந்தது, இது பிரிட்டிசாரை கடந்தது

அந்த பக்கம் ஏகபட்ட ஓடைகள் உண்டு, அந்த ஓடைகள் உண்டு அதில் ஒரு ஓடை சீயோக் நதியுடன் கலக்கும் அந்த சீயோக் நதி சிந்து நதியின் முக்கிய துணையாறு

அந்த ஓடை பக்கமாக பிரிட்டிஷ் குழு சென்றபொழுது ஒரு ஆபத்து வந்தது, பயிற்சி இல்லா ஒரு பிரிட்டானியன் அந்த பள்ளத்தில் சரிய அவனை காத்து காத்து உயிர்விட்டான் அந்த குலாம் ரசூல் கல்வான் அப்பொழுது வயது 47

அவரின் மறைவு வெள்ளையரை உருக்கியது, அவன் தங்களை அழைத்து சென்ற பகுதிக்கு கால்வான் பள்ளதாக்கு என்றும், அந்த ஓடைக்கு கால்வான் நதி எனும் பெயரிட்டனர்

அந்த கால்வான் பள்ளதாக்குத்தான் இப்பொழுது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் முக்கிய சண்டையாக உருவெடுத்துள்ளது

விஷயம் சொல்வது இதுதான்

அது திபெதின் பகுதியாக இருந்தால் பிரிட்டானியர் அங்கு சென்றிருக்க மாட்டார்கள் அவசியமும் அல்ல‌

அது காஷ்மீர் பகுதி என்பதால் லடாக்கில் இருந்த ஒருவனை அழைத்து அப்பகுதியில் சுற்றினார்கள், அவனும் தன் சொந்த மண்ணை உற்சாகமாக சுற்றிகாட்டி அவர்களுக்காக உயிர்விட்டு தன் பெயரை தன் மண்ணில் நிலைத்து நிற்க செய்தான்

ஆம் அது காஷ்மீரின் பகுதி , காஷ்மீர் இந்தியாவின் பகுதி என சொல்லி கொண்டிருக்கிது கல்வான் பள்ளதாக்கு.

அதன் பின்னால் இருந்து தேசத்தின் பலத்தை கூட்டுகின்றான் அந்த கல்வான்.

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.

Exit mobile version