ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் இந்து என அடையாளம் காணப்பட்டு பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர்ப்பங்கீட்டு ஒப்பந்தம்” தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரம்பான் பகுதியில் உள்ள பக்லிஹார் அணை மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள கிஷன்கங்கா அணை மூலமாக பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.பக்லிஹார் அணையின் நீர் வெளியேறும் வாயில்களின் கதவுகள் மூடப்பட்டு, பஞ்சாப் மாகாணம் நோக்கி செல்லும் நீர் ஓட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருந்தாலும், பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கையாகும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருநாடுகளுக்கும் இடையே நீர் விநியோகம் குறித்த இந்த ஒப்பந்தம் 1960ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. ஆனால் தற்போது இந்தியா அதை நிறுத்தியுள்ளது பாகிஸ்தானை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பாகிஸ்தான் இதை போருக்கான காரணமாக பார்க்கிறது என்றும் கூறியுள்ளது.மேலும், இந்தியா எடுத்துள்ள மற்ற கடும் நடவடிக்கைகள்:பாகிஸ்தானிலிருந்து அனைத்து இறக்குமதிகளும் தடைசெய்யப்பட்டதுபாகிஸ்தான் கொடியுடன் வரும் கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் நுழைவு தடைஇந்திய – பாகிஸ்தான் தபால் சேவைகள் நிறுத்தம்பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வழி மூடப்பட்டது
இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையின் முக்கிய கட்டமாக பக்லிஹார் அணை தண்ணீரை இந்தியா நிறுத்தி உள்ளது.பஹல்காம் சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு செயல்களுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.இந் நிலையில், அடுத்த நடவடிக்கையாக செனாப் நதியில் உள்ள பக்லிஹார் அணை தண்ணீர் வெளியேற்றத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இது தவிர, ஜீலம் நதியில் உள்ள கிஷன்கங்கா அணையிலும் இதே போன்றதொரு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பி.டி.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பக்லிஹார் அணை ராம்பன் மாவட்டத்திலும், கிஷன்கங்கா வடக்கு காஷ்மீரிலும் உள்ளது. இந்த அணைகளின் நீர் வெளியேற்ற நேரத்தை ஒழுங்குபடுத்தும் அனுமதி மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது.60 ஆண்டுகளாக இருந்த இந்த ஒப்பந்தம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது, பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் இன்று விமானப்படை தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்துள்ளார். இதற்கு முன்பு நேற்று கடற்படை தலைவர் தினேஷ் திரிபாடி, அரபிக்கடல் பாதுகாப்பு நிலை குறித்து பிரதமரை சந்தித்திருந்தார். அடுத்தடுத்து விமானப்படை, கடற்படை தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்திருப்பதால் எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீதான தாக்குதல் தொடங்கும் என கூறப்படுகிறது.அதே நேரத்தில் பாகிஸ்தான் அரசும் ராணுவமும் இன்று அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேசிய பாதுகாப்பு நிலை குறித்து ஆலோசனை நடத்துகிறது. இந்த ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.
NIA அறிக்கையின் படி, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பாகிஸ்தான்-ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் இருந்தவர்களுடன் திட்டமிட்டு அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புலனாய்வு தகவல்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம், இது திட்டமிட்ட எல்லை கடந்த நடவடிக்கையாக இருந்தது என தெரிகிறது. தாக்குதலுக்கு முன், பேடாப் பள்ளத்தாக்கில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்றும், இது தாக்குதலுக்கான ஆயத்தங்களை முன்பே செய்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது என்றும் தெரிகிறது.
இந்த தாக்குதலில் உள்ளூர் உதவியாளர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்பதும், அவர்கள் தங்குமிடம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை பயங்கரவாதிகளுக்கு வழங்கியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகப்படுபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
NIA விசாரணையின் ஒரு பகுதியாக, 150 பேருக்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதல் நடந்த இடத்தில் 3D மேப்பிங் செய்து, குற்ற நிகழ்வு மறுபடியும் உருவாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சில பொருட்கள் அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அறிக்கை தற்போது NIA இயக்குநரால் பரிசீலிக்கப்பட்டு, உள்துறை அமைச்சகத்துக்கு வழங்க தயாராக உள்ளது. இதன் அடிப்படையில், உள்ளூர் மற்றும் எல்லை கடந்த பயங்கரவாத வலைத்தளங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.