பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாகக் காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி, அங்கு செனாப் பாலத்தைத் திறந்து வைத்தார். சுமார் 359 மீட்டர் அதாவது சுமார் 1177 அடி உயரத்தில் அமைந்துள்ள இதுதான் உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள ரயில்வே பாலம் ஆகும். இந்த பாலத்தின் சிறப்புகள் குறித்து நாம் பார்க்கலாம்.ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று \ பல முக்கிய திட்டங்களைத் திறந்து வைத்தார். அதில் முதன்மையானது மற்றும் முக்கியமானது செனாப் பாலமாகும். உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான இது, இந்தியப் பொறியியல் துறையின் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
பிரதமர் மோடி
பஹல்கம் தாக்குதலுக்கு பிறகு பிரதமர் மோடி காஷ்மீருக்குச் சென்றுள்ளார். உலகின் உயரமான பாலத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, பாலத்தின் மீது நமது மூவர்ணக்கொடியுடன் சிறிது தூரம் நடந்தார். இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரைப் பாகிஸ்தான் அத்துமீறி ஆக்கிரமிக்க முயலும் நிலையில், அதற்கு அனுப்பப்பட்ட ஒரு மெசேஜாகவே இது பார்க்கப்படுகிறது.
இது 272 கி.மீ. நீளமுள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதே உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா திட்டத்தில் தான் இந்தியாவின் முதல் கம்பி ரயில் பாலமான அஞ்சி காட் பாலமும் (cable-stayed rail bridge) கட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் சிறப்புகளை நாம் பார்க்கலாம்.
செனாப் பாலத்தின் சிறப்புகள்
1.31 கி.மீ., நீளமுள்ள செனாப் பாலம் திட்டத்திற்குக் கடந்த வாஜ்பாயி ஆட்சி காலத்தில் 2003ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் கட்டுமானத்தை முடிக்கவே 20 ஆண்டுகள் ஆகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஆமைவேகத்தில் பணிகள் நடைபெற்றது மீண்டும் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. தாமதம் ஆனாலும் கூட பல காரணங்களுக்காகச் சிறப்பு வாய்ந்ததாகவே இந்த செனாப் பாலம் இருக்கிறது.
ரூ.1,486 கோடி செலவில் கட்டப்பட்டது.. இது, உலகின் மிக உயரமான ரயில்வே பாலமாகும். இது 28,660 மெட்ரிக் டன் எஃகால் ஆனது. இது காஷ்மீர் குளிரைத் தாங்கும் வகையில் பூஜ்ஜிய டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையையும் உறுதியாக இருக்கும்படி கட்டப்பட்டுள்ளது. மேலும், இது 40 டிகிரி வரையிலான வெப்பத்தையும் தாங்கும் திறன் கொண்டது.
அதேபோல இன்றைய தினம் பிரதமர் மோடி காத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். இது காஷ்மீரில் சுற்றுலாவிற்கு ஒரு பெரிய ஊக்கத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில்கள் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
செனாப் பாலம் 359 மீட்டர் உயரத்தில் உள்ள இது, பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமானது. குதுப்மினாரை விட ஐந்து மடங்கு உயரமானது. இந்தியாவின் ரயில்வே துறை சமீப காலங்களில் எதிர்கொண்ட மிகப் பெரிய இன்ஜினியரிங் சவால் என்று அரசு இதை குறிப்பிடுகிறது.
இப்பகுதியின் கடினமான நிலப்பரப்பு தான் இந்த பாலத்தின் கட்டுமானத்தில் இருந்த மிகப்பெரிய சவாலாகும். இமயமலைப் பகுதியில் பெரிய இயந்திரங்கள் மற்றும் பிற கட்டுமான உபகரணங்களைக் கொண்டு செல்வது என்பது மிகவும் கடினமான பணி.
இந்த பாலம் மணிக்கு 266 கி.மீ., வேகத்தில் வீசும் காற்று மற்றும் அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களையும் தாங்கும் திறன் கொண்டது. ரயில் போக்குவரத்துக்கு ஏற்றதாகவும், மோசமான வானிலையைத் தாங்கும் வகையிலும் இருப்பதை உறுதி செய்யவே பல ஆண்டு ஆய்வு தேவைப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் கட்டுமானம் எதிர்பாராத விதமாகச் சேதமடைந்தாலும், ரயில்கள் குறைந்த வேகத்தில் செல்ல அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் பூஜ்ஜிய டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் கூட இயங்கும் திறன் கொண்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரின் மிகவும் குளிரான பகுதிகளில் சுமுகமாகச் செயல்பட முடியும். தண்ணீர் உறைவதைத் தடுக்க சிலிகான் ஹீட்டிங் பேட்கள் மற்றும் பயோ-டாய்லெட் தொட்டிகளை இந்த ரயில் கொண்டுள்ளது. இந்த ரயில்களில் ஆட்டோ-டிரெய்னிங் வசதியும், மோசமான வானிலையின்போது ரயிலைப் பாதுகாப்பாக இயக்க உதவும் ஆன்டி-ஸ்பால் லேயரும் உள்ளது.
வடக்கிழக்கில் சிலிகுரி பகுதி, கோழி கழுத்து பகுதி என்று அழைக்கப்படுகிறது. இதேபோன்று ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியும் கோழி கழுத்து பகுதி என்று அழைக்கப்படுகிறது. ராணுவரீதியாக இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.இங்கு செனாப் ரயில் பாலம் கட்டப்பட்டிருப்பது பாகிஸ்தான், சீனாவுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட சவால் ஆகும். பாகிஸ்தான் எல்லை பகுதி இங்கிருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ளது. போர்க்காலங்களில் ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், ஆயுதங்களை ரயில் பாதை மூலம் மிக எளிதாக எல்லைப் பகுதிக்கு எடுத்துச் செல்ல முடியும். எனவே பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு இணையாக ராணுவ ரீதியாகவும் புதிய ரயில் பாதை மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.