1997-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவை மாற்ற முயற்சி! வேளாண் பல்கலைக்கு கருணாநிதி பெயரா?

மதுரையில் ’பென்னி குயிக்’ வாழ்விடம் அழித்து நூலகம் – கோவையில் ’தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக பெயர்’ மறைத்து – கருணாநிதி பெயர் மாற்றமா?அரசு கட்டிடங்கள்-நிறுவனங்களுக்கு பெயர் சூட்ட 1997-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவை மாற்ற முயற்சி! மீண்டும் வேண்டாம் இன்னொரு விஷப்பரீட்சை!!

கடந்த மே மாதம் ஏழாம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற நாள் முதல் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைக் காட்டிலும் பழைய செய்திகளை தூசித் தட்டி பெருமை பேசிக் கொள்வதிலும், அதைப் பரப்புவதிலுமே ஸ்டாலின் அதிகமாக முனைப்புக் காட்டி வருகிறார்.

கடந்த இரண்டு வருட காலமாக நமது தேசத்தில் நிலைகொண்டுள்ள கரோனாவால் தமிழகம் அடிக்கடி முழு அடைப்புக்கு ஆளாவதும், அதனால் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார சிக்கல்களால் தொழில்கள் நலிவடைந்து, வாங்கிய கடனைக்கூட கட்ட முடியாமல் பல குடும்பங்கள் சீரழிந்து தற்கொலை செய்து கொள்கிற அவலநிலை உருவாகியுள்ளது. அப்படிப்பட்ட குடும்பங்களை அரவணைத்து, பொருளாதார உதவிகள் செய்து காப்பாற்றுவதற்கு பதிலாக ஊதாரித்தனமான செலவுகளை செய்வதிலேயே திமுக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள எல்லா பகுதிகளிலும் நூலகம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எல்லா விதமான தகவல்களையும் ஒரு கையடக்க கைப்பேசி வழியாக அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் நிலவும் இந்த நவீன தொழிற்நுட்ப காலகட்டத்தில் 70-80 கோடி செலவில் நூலகங்கள் உடனடியாக அமைக்க வேண்டிய அவசியமில்லை.

தனது தந்தையின் பெயரை சென்னையை தாண்டி தென் தமிழகத்திலும் பிரபல்யப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த ஒரு மாமனிதர் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்று மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களை இன்றும் வளம் அடையச் செய்து வரும் ’முல்லைப் பெரியாறு’ அணையைக் கட்டிக் கொடுத்த ’பென்னி குயிக்’ அவர்கள் தங்கி வாழ்ந்து வந்த மதுரை மாநகர் நத்தம் சாலையில் உள்ள அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லத்தை இடித்து அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்புகளையும் மீறி கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க வேண்டியதன் உடனடி அவசியம் என்ன?

இந்தியாவில் உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும்; அது நவீனமான முறையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நவீன, விஞ்ஞான முறைகளை வேளாண்மையில் புகுத்துவதற்கு உண்டான கல்விக்கூடத்தை முதன் முதலில் 1868-ல் சென்னை-சைதாப்பேட்டையில் துவக்கப்பட்ட வேளாண்மை பள்ளி பின், கோயமுத்தூருக்கு இடம் மாற்றப்பட்டு, இரண்டு வருட டிப்ளமோ படிப்பிலிருந்து மூன்று வருட இளநிலை பட்டப்படிப்பு வரை உயர்த்தப்பட்டு, இப்போது ஏறக்குறைய ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இளநிலை, முதுநிலை, டாக்டரேட் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாடப்பிரிவுகளில் பட்டதாரிகளாகவும், வேளாண்மையில் வல்லுநர்களாகவும் உயர்த்தும் அறிவு களஞ்சியமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகமாக வளர்ந்தும், உயர்ந்தும் உள்ளது.

அந்த வேளாண்மை பல்கலைக் கழகங்களின் கீழ் தமிழகம் எங்கும் பரவலாக பெரும்பாலான மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரிகளும், பல ஆராய்ச்சி மையங்களும் உருவாகி ஆலமரம் போல் தமிழகமெங்கும் தமிழக வேளாண்மை பல்கலைக்கழகங்கள் பரந்தும் விரிந்தும் செயல்பட்டு வருகின்றன.

1865-1945 கால கட்டங்களில் இந்தியாவில் மிகப்பெரிய அளவிற்கு உணவுப் பஞ்சம் நிலவியது. அதனால் லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி உயிரிழந்தார்கள். எனவே, சுதந்திரம் பெற்ற பிறகு தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் உணவு அளிக்கவும்; வேறு எந்த நாடுகளையும் சார்ந்திராமல் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் பொருட்டும்; கோதுமை, நெல், கரும்பு, காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள் என அனைத்திலும் விளைச்சலைப் பன்மடங்கு அதிகரிக்கும் பொருட்டும், அதன் உற்பத்தி தரமாக இருக்கும் வகையிலும் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பசுமை புரட்சி (Green Revolution) திட்டத்தின் கீழ் புதிய புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதில் கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பங்கு அளவிடற்கரியது. ’பசுமை புரட்சி’க்கு வித்திட்ட ‘இந்தியாவின் வேளாண்மை விஞ்ஞானி’ எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தோடு இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.

1868-ல் துவங்கி 1920 வரையிலும் வேளாண்மை பள்ளி மற்றும் கல்லூரி என்ற நிலையிலிருந்து அது பல்கலைக்கழகமாக வளரும் அளவிற்கு நில ஆர்ஜிதம், கட்டிட வடிவமைப்பு, கட்டிட கட்டமைப்பு என அனைத்தையும் மேற்கொண்டவர் ’lawley-லாலி’ என்ற ஆங்கிலேயர் ஆவார். கோவையிலிருந்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு செல்லும் பாதை இன்று வரையிலும் அவர் பெயரில் ’லாலி சாலை’ என்றே இருந்து வருகிறது.

உலகளவில் தமிழ்நாட்டின் முகவரியாக உள்ள உயர்ந்த அந்தப் பல்கலைக்கழகம் அதன் தரத்தையும், தமிழ்நாட்டின் பெருமையையும் உலகிற்குப் பறை சாற்றிக் கொண்டு இருக்கின்ற போது அதன் பெருமைமிகு அடையாளங்களை அழித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்த செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தமிழக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

அரசு கட்டிடங்கள், போக்குவரத்துக் கழகங்கள், மாவட்டங்களுக்கு அரசியல், சமுதாய தலைவர்களின் பெயர்களை சூட்டுவதில்லை எனவும், பொது இடங்களில் எவரது சிலையையும் அமைப்பதில்லை எனவும் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அந்த தீர்மானத்தின் படி ஏற்கனவே மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன; அது வரலாறு.

இவை அனைத்தும் அன்றைய திமுக ஆட்சியில் அவரது தகப்பனாரின் தலைமையில் நடந்தது என்பதை மு.க.ஸ்டாலின் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 1995 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொடியங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களை அன்றைய காவல்துறை தாக்கி அழித்தது. அந்த மனித உரிமை மீறலைக் கண்டித்து தமிழகமெங்கும் மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட கலவரத்தால் தென் தமிழகத்தில் சட்ட-ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே காவல்துறையால் தாக்குதலுக்கு உண்டான அம்மக்களை சமாதானப்படுத்துவதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ’சுதந்திரப் போராட்டத் தியாகி’ தளபதி சுந்தரலிங்கனார் அவர்கள் பெயரில் விருதுநகரை மையமாக வைத்து ஒரு புதிய போக்குவரத்துக் கழகம் இயக்கப்படும் என அறிவித்தார். 1996 ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அப்போக்குவரத்து கழகம் உடனடியாக துவக்கி வைக்கப்படவில்லை.

1996-ல் சட்டமன்ற தேர்தலில் நாம் போட்டியிட்டு முதல் முறையாக வெற்றி பெற்று சட்டமன்றத்தில் பங்கு பெற்று இருந்தோம். நாம் தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்ததன் விளைவாகவும், 1997 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம் இயங்கவில்லை எனில் வேறு எந்தப் பெயரிலும் போக்குவரத்துக் கழகம் இயங்குவது கடினம் என்று தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றதாலும் 1997 மே 1ஆம் தேதி ’சுதந்திர போராட்ட தியாகி’ தளபதி சுந்தரலிங்கம் அவர்கள் பெயரில் போக்குவரத்துக் கழகம் துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட அதே நேரத்தில் அதற்கு எதிரான போராட்டங்களும் தூண்டிவிடப்பட்டு தேவையில்லாமல் இரண்டு உழைக்கும் வர்க்கங்கள் மோதிக்கொண்டு ரத்தம் சிந்தும் அவல நிலை உருவாயிற்று.

அன்றைய காலகட்டங்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் பல அரசியல் மற்றும் சமுதாய தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. ஏறக்குறைய நான்கு மாத காலம் தொடர்ந்து தமிழகத்தில் இடைவிடாத கலவரம் நடைபெற்ற காரணத்தினால் 1997 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது.

அதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மூப்பனார், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் நல்ல கண்ணு, தோழர் வரதராஜன் போன்றோரும் கலந்து கொண்டனர். இரண்டு நாள் நடைபெற்ற அக்கூட்டத்தின் நிறைவாக மாவட்டங்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் சூட்டப்பட்டிருந்த அனைத்து தலைவர்களின் பெயர்களை நீக்கி விடுவது எனவும், தமிழ்நாட்டில் பொது இடங்களில் உள்ள அனைத்து சிலைகளையும் அப்புறப்படுத்தி அவைகளை அருங்காட்சியகங்களில் வைப்பது எனவும்; இனிமேல் மாவட்டம், போக்குவரத்துக் கழகம், அரசு பொது கட்டிடம் மற்றும் நிறுவனங்களுக்கு மறைந்த அல்லது உயிரோடு இருக்கும் எந்த சமுதாய, அரசியல் தலைவர்களின் பெயரையும் சூட்டுவது இல்லை எனவும்; புதிதாக எவருக்கும் சிலைகள், நினைவுச் சின்னங்கள் எழுப்புவதில்லை எனவும் முடிவெடுக்கப்பட்டது.

எனவே, இப்படிப்பட்ட வரலாறுகள் இருக்கும் சூழலில் ஆட்சிக்கு வந்தவுடன் கருணாநிதி படத்தைச் சட்டமன்றத்தில் திறப்பதற்காகவே நூற்றாண்டு விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது. தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் புதிய அரசியல் தளங்களை உருவாக்குவதற்காக மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்கவும், ஏறக்குறைய 150 ஆண்டுக்கால வரலாறு கொண்ட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திற்கு கருணாநிதி பெயரைச் சூட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக தெரியவருகிறது. இந்த தவறான முயற்சியை இன்றைய அரசு கைவிட வேண்டும் என்பதே அனைத்து தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

கடந்த காலங்களில் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டிய பின் அக்கட்டிடங்களை உருவாக்க பெரும் பங்காற்றியவர்களின் பெயரைச் சூட்டுவது வழக்கம். ஆனால் இன்றைய காலகட்டங்களில் பெயர் சூட்டுவதற்காகவே பொது மக்களின் வரிப் பணத்தில் கட்டிடம் கட்டுகிறார்கள்.

இந்த அரசு மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கிறது. அதை விட்டுவிட்டு கோட்டைகள் கட்டுவது, கோட்டங்கள் கட்டுவது என தனது தந்தையின் வழியிலேயே இவரும் பயணிப்பது முறையல்ல. அறிவுத்திறன் கொண்டவர்களின் முழு அர்ப்பணிப்பு மூலம் உருவாக்கப்பட்டு அவர்களுடைய அடையாளமாக விளங்கக்கூடிய வாழ்விடங்களையும், கட்டிடங்களையும் அழித்து புதிதாகக் கட்டிடங்கள் கட்டி பெயரிடுவது, தன்னை ‘Dravidian Stock’ என அடையாளப்படுத்திக் கொண்டு தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும், தமிழ் மாநிலத்தையும் அடையாளப்படுத்தும் பெயர்களை மாற்றுவது என ஆட்சி, அதிகாரம் கையில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் எனும் முயற்சிகள் கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். இதுபோன்று கடந்த காலங்களில் பொதுக் கட்டிடங்களுக்கு பெயரிடும் பிரச்சினைகளில் ஏற்பட்ட சம்பவங்களை நினைவில் கொண்டு, மீண்டும் அதுபோன்ற விசப்பரீட்சையில் திமுக அரசு ஈடுபட வேண்டாம்.

தமிழ்த் தாயின் வயிற்றில் பிறந்து, தமிழ் மண்ணிலேயே வளர்ந்து மிக இளம் பிராயத்திலேயே தன்னை இந்தியச் சுதந்திரத்திற்காக மாய்த்துக்கொண்ட ஒரு மாவீரரின் பெயரைக் கூட அங்கீகரிக்காமல், அந்த ஒரே ஒரு அடையாளத்தையும் அழிக்க முற்பட்ட அன்றைய இதே திமுக அரசு இப்போது பொது மக்களுடைய வரிப் பணத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அதில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத அரசியல் தலைவரின் பெயரைச் சூட்டுவது ஏற்புடையது அல்ல.

மதுரை மாநகரில் நத்தம் சாலையில் ‘பென்னி குயிக்’ வாழ்ந்த இல்லத்தை இடித்து கருணாநிதி பெயரில் நூலகம் கட்டவும், 150 ஆண்டுக் கால வரலாறு கொண்ட ’தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு’ கருணாநிதி பெயரைச் சூட்டுவதற்குமான விஷப்பரீட்சையில் இந்த அரசு ஈடுபடக் கூடாது; அரசு கட்டிடங்கள்-நிறுவனங்களுக்கு பெயர் சூட்ட 1997-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவை மாற்ற முயற்சியும் செய்ய கூடாது என எச்சரிக்கிறோம்.

Exit mobile version