செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? திமுகவில் நடக்கும் சம்பவங்கள்!

Senthil Balaji

Senthil Balaji

அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது

ஓராண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் அமலாக்கத்துறை வழக்கு, கிணற்றில் போட்ட கல்போல அசைவின்றிக் கிடக்கிறது. ஒவ்வொரு முறையும் ஜாமீன் மறுக்கப்பட்டு, அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்படுவதால், கரூர் மற்றும் கோவை மாவட்ட தி.மு.க-வில் குழப்பங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. மேலும் இதுதான் சமயம் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என கழக சீனியர்கள் கட்டம் கட்டி கொண்டு வேலை செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.

கரூர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் அப்செட்டில் உள்ளார்கள். “அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க-வுக்கு வந்தவுடன் கரூரில் மாவட்ட, ஒன்றியப் பதவிகளில் இருந்த பழைய தி.மு.க-வினரை ஓரங்கட்டிவிட்டு, அந்தப் பதவிகளில் தனக்கு நெருக்கமான முன்னாள் அ.ம.மு.க-வினரை நியமித்தார். கட்சியில் மட்டுமல்ல.கான்ட்ராக்ட் பணிகளிலும் அவரின் ஆதரவாளர்களே கோலோச்சத் தொடங்கினார்கள். செந்தில் பாலாஜியின் வலதுகரமாகக் கருதப்படும் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் என்பவர்தான் நிர்வாகம், கான்ட்ராக்ட் உள்ளிட்ட விஷயங்களைக் கவனித்துவருகிறார்.

அதேபோல செந்தில் பாலாஜியின் உதவியாளரான சுப்பிரமணியன்தான் கட்சி விவகாரங்களை மேற்பார்வை செய்துவருகிறார். இது தொண்டர்களிடையே பல அதிருப்திகளைக் கிளப்பியிருக்கிறது. மேலும், செந்தில் பாலாஜியால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கிவருவதும் சிக்கலாகியிருக்கிறது.

கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், தன்னிச்சையாகச் செயல்பட்டு மாநகராட்சிக் கூட்டங்களில் சர்ச்சைக்குரிய தீர்மானங்களை நிறைவேற்றி, மக்களிடம் ஆளுங்கட்சிக்குக் கெட்ட பெயரை உருவாக்கிவருகிறார். அதேபோல், செந்தில் பாலாஜியால் ‘அடக்கி’ வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர்களான சிவகாமசுந்தரி, மொஞ்சனூர் இளங்கோ, மாணிக்கம் ஆகியோர், ‘செந்தில் பாலாஜி வெளியே வருவதற்குள் வளர்ந்துவிட வேண்டும்’ என்று மும்முரமாக இருக்கிறார்கள். செந்தில் பாலாஜியின் சிறப்பே கட்சிப் பணியும், தேர்தல் பணியும்தான். அவர் சிறையில் இருப்பது, தேர்தல் பணியிலும் தி.மு.க-வுக்குப் பெரிய சுணக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, கரூர் தொகுதியில் இந்தத் தொய்வு வெளிப்படையாகவே தெரிந்தது” என்றனர்.

கோவை நிர்வாகிகளோ, “கோவை மாவட்டத்தில் தி.மு.க-வுக்கு மக்கள் பிரதிநிதிகளே கிடையாது. ஆளுமை மிக்க நிர்வாகிகளும் இங்கு இல்லை. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேல் கோவை தி.மு.க-வைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அப்போது தன்னைவிட யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்று அவர் கையாண்ட அரசியல்தான் தி.மு.க-வின் இன்றைய பின்னடைவுக்கு மூல காரணம். செந்தில் பாலாஜி இங்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகும், அதே ஃபார்முலாவைத்தான் கையாண்டார்.

`கொங்கு மண்டலத்தில் தன்னுடைய குரல் மட்டுமே ஒலிக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன், தலைமையுடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பவர்களுக்கு எந்தப் பதவியும் கிடைக்காமல் பார்த்துக்கொண்டார் பாலாஜி. தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் பிறந்தநாள்களின்போது, தன் அனுமதியில்லாமல் யாரும் சென்னைக்குச் சென்றுவிடக் கூடாது என்பதில்கூட அவர் கவனமாக இருந்தார். தலைமையும் கோவை, கரூர் மாவட்டங்களுக்கு செந்தில் பாலாஜிதான் பொறுப்பு என்பதில் உறுதியாக இருந்தது. அந்த நிலைமை இனியும் நீடித்தால், கொங்கு மண்டலத்தில் கட்சியை வளர்க்க முடியாது.

அதுமட்டுமல்ல, செந்தில் பாலாஜியின் ஆசியுடன் பதவிகள், பொறுப்புகளை வாங்கிய அவருடைய ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிவருகிறார்கள். செந்தில் பாலாஜியால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி ஆகியோரின் செயல்பாடுகள் சர்ச்சையாக வெடித்துவருகின்றன. தளபதி முருகேசன் கட்டுப்பாட்டிலிருக்கும் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் பலரும் அதிருப்தி காரணமாக அ.தி.மு.க-விலும், பா.ஜ.க-விலும் இணைந்துவருகிறார்கள். கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மீதும் அதிருப்தி அதிகரித்திருக்கிறது.

அது மட்டுமல்ல, கரூர் கம்பெனியைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் தி.மு.க சார்பில்லாதவர்கள். அவர்களுக்குக் கொள்கைப் பற்று எதுவும் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை, செந்தில் பாலாஜி சொல்வதே வேதம். அவர் என்ன சொன்னாலும் கண்களை மூடிக்கொண்டு அட்சரம் பிசகாமல் செய்து முடிப்பார்கள்… அவ்வளவுதான். அதுதான் இப்போது கட்சி, தேர்தல் பணிகள் சுணக்கத்துக்கும் காரணம். எனவே, நிலைமையை இப்படியே நீட்டிக்கச் செய்யக் கூடாது. இனி வரும் காலங்களில் தலைமை கைகாட்டும் நபரைத்தான் எல்லா பொறுப்புகளில் அமரவைக்க வேண்டும். அது தான் கட்சியின் எதிர்காலத்துக்குச் சிறந்தது. இல்லையென்றால், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு அது மாபெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்” என்றனர்.

மேலும் அமைப்பு செயலாளர் ஆ.எஸ்.பாரதி கூறுகையில் இங்கு கட்சியின் நலன்தான் பிரதானம். நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கோவை, கரூர் தொகுதிகளில் தி.மு.க-தான் வெற்றிபெறும். தேவைப்பட்டால், தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, மாற்றம் தேவைப்படும் இடங்களில் தலைவர் ஆய்வுசெய்துவிட்டு, நடவடிக்கை எடுப்பார்” என்றார். அதனால் இனி செந்தில் பாலாஜிக்கு திமுகவில் இடமில்லை என சூசகமாக தெரிவித்துள்ளார்’

மேலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் என்பது எட்டாக்கனியாக மாறியுள்ளது. தம்பி அமலக்கத்துறையிடம் சரணடைந்தால் தான் ஜாமீன் பற்றியே செந்தில் பாலாஜி பேச முடியும்.அப்படியே அவறது தம்பி ஆஜரானால் பல முக்கிய தகவல்கள் அமலாக்கத்துறைக்கு கிடைக்கும். பல திமுக புள்ளிகள் சிக்கும் அதனால் செந்தில்பாலாஜியின் தம்பி அமலக்கத்துறை பிடியில் சிக்குவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதுவரை செந்தில் பாலாஜியின் சிறை வாழ்க்கை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்கிறார்கள்.செந்தில் பாலாஜியின் உடல்நிலை மனநிலை சமநிலையில் இல்லாததால் அப்ரூவர் ஆகும் வாய்ப்பும் உள்ளதால் திமுக செந்தில் பாலாஜியை கழட்டிவிட முடிவு செய்துள்ளது என அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது

Exit mobile version