இஸ்ரேல் இராணுவம் 9 ஈரானிய அணு விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களைக் கொன்றதாகத் தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கும் வகையில் கொல்லப்பட அணு விஞ்ஞானிகளின் பெயர்களையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கொல்லப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களும் ஈரானிய அணு ஆயுதங்களை உருவாக்குவதில் முக்கியமான நபர்களாக இருந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை குறி வைத்து கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸிற்கு ஆதரவாக ஈரான் செயல்படும் நிலையில், அந்நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், ஈரானின் அணு ஆயுத கொள்கை தொடர்பான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்துள்ளது. ஈரானின் அணு ஆயுத முகாம் மற்றும் ராணுவ தளவாடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் தற்காப்பிற்காக இத்தாக்குதலை தன்னிச்சையாக தொடுத்திருப்பதாக அமெரிக்க விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
முன்னதாக, வியாழக்கிழமை இரவு ஈரானுக்கு எதிராக தொடங்கிய ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ தாக்குதல்களில் ஆறு அணு விஞ்ஞானிகளை கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. தற்போது ஒன்பது அணு சக்தி விஞ்னானிகள் மற்றும் நிபுணர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளதுஈரான் மேற்கொண்ட அணு ஆயுத முயற்சிகளுக்கு இந்த விஞ்ஞானிகள் கடுமையாக பாடுபட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. “கொல்லப்பட்ட அனைத்து விஞ்ஞானிகளும், நிபுணர்களும் ஈரானிய அணுசக்தி திட்டத்தில் குறிப்பிடத்தக்க நபர்களாக இருந்தனர், மேலும் அணு ஆயுதங்களை உருவாக்குவதில் பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்த அனுபவத்தைக் கொண்டிருந்தனர்” என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அணுசக்தி பொறியியல் நிபுணர் ஃபெரேடூன் அப்பாசி, இயற்பியல் நிபுணர் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி, வேதியியல் பொறியியல் நிபுணர் அக்பர் மொட்டலேபி சதே, பொருள் பொறியியல் நிபுணர் சயீத் பார்ஜி, இயற்பியல் நிபுணர் அமீர் ஹசன் ஃபகாஹி, உலை இயற்பியல் நிபுணர் அப்துல்-ஹமீத் மினௌஷெர், இயற்பியல் நிபுணர் மன்சூர் அஸ்காரி, அணுசக்தி பொறியியலில் நிபுணர் அஹ்மத் ரெசா சோல்ஃபாகரி தர்யானி, மற்றும் இயக்கவியல் நிபுணர் அலி பகோய் காதிரிமி ஆகியோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ராணுவத்தின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரானில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒன்பது பேரும் கொல்லப்பட்டனர். அதே தாக்குதல்களில் ஆறு உயர் அதிகாரிகள் உட்பட டஜன் கணக்கான ஈரான் ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் ஈரான் நாட்டின் நடான்ஸ் அணு உலையில் கதிரியக்க கசிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அங்கே அணு கசிவு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி வெளியிட்ட அறிக்கையில், ஈரான் நாட்டின் நடான்ஸ் அணு உலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் கதிரியக்க மற்றும் இரசாயனக் கலப்படங்கள் ஏற்பட்டதை உறுதிப்படுத்தினார். இருப்பினும், அந்த இடத்திற்கு வெளியே கதிர்வீச்சு அளவு இயல்பாகவே உள்ளது, எனவே பொதுமக்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடான்ஸ் அணு உலை மீதான தாக்குதல்
நடான்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து க்ரோஸி கூறுகையில், “நடான்ஸில் உள்ள அணு உலகை அமைப்பில் இஸ்ரேல் தாக்குதலால் கதிரியக்க மற்றும் இரசாயனக் கலப்படம் ஏற்பட்டுள்ளது. அந்த வசதிக்குள் இருக்கும் ஆல்பா துகள்கள் போன்ற கதிர்வீச்சை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இனி கட்டுப்படுத்த முடியும். கசிவு ஏற்பட்டுள்ளது பற்றி தீவிர ஆய்வுகள், சோதனைகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும்.
இதைத்தான் இஸ்ரேல் தாக்க முயற்சி செய்கிறது. நேற்று இதில்தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரானின் அணு உலை மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களை இஸ்ரேல் தாக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்கான சீக்ரெட் திட்டங்களை இஸ்ரேலின் மொசாத் அமைப்பு மேற்கொண்டதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கணித்து உள்ளனர். ஈரான் உள்ளே அவர்களின் அணு திட்டங்களை சேதப்படுத்தும், தோல்வி அடைய செய்யும் பணிகளை இஸ்ரேல் தனது உளவாளிகள் மூலம் செய்ததாகவும்.. நேற்று மொசாத் உதவியுடன் இந்த தாக்குதல்களை செய்ததாகவும் கூறப்படுகிறது.