இஸ்ரேல் தனது அதிநவீன லேசர் ஆயுத சோதனை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த லேசர் ஆயுதங்கள் மூலம் தொலைவில் வரும் டிரோன்கள், ஆயுதங்கள் என எந்தவொரு அச்சுறுத்தலாக இருந்தாலும் அதை நொடியில் அழிக்க முடியும். ரபேல் உருவாக்கியுள்ள இந்த ஆயுத அமைப்பு எந்தளவுக்கு வலிமையானது.. இது இஸ்ரேலுக்கு மட்டுமில்லை.. இந்தியாவுக்கும் கூட முக்கியமானதாக இருக்கும். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில் கடந்த சில ஆண்டுகளாகவே போர் சூழல் நிலவி வருகிறது. ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உடனும் மோதலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இஸ்ரேல் தனது ஆயுதங்களைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. பல புதிய அதிநவீன ஆயுதங்களைத் தனது ராணுவத்தில் இணைத்து வருகிறது.
அதிநவீன லேசர்
இதற்கிடையே இப்போது இஸ்ரேல் ராணுவம் தனது அதிநவீன ஆயுதம் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக இஸ்ரேல் ஹமாஸ், ஹிஸ்புல்லா எனப் பல முனைப் போர்களில் ஈடுபட்டுள்ள நிலையில் அதில் பயன்படுத்தும் அதிநவீன ஆயுதம் குறித்த வீடியோவை இஸ்ரேல் பகிர்ந்துள்ளது. இஸ்ரேல் தனது அடுத்த தலைமுறை ஆயுதமான லேசர் வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்திப் பல டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம், இஸ்ரேல் விமானப்படை மற்றும் ரஃபேல் நிறுவனம் ஆகியவை கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன. அதில், “இஸ்ரேல் விமானப்படையின் வான் பாதுகாப்பு டீம் சக்திவாய்ந்த லேசர் அமைப்பு மாடலை களத்தில் இறக்கியது. இதன் மூலம் எதிரிகளின் பல அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக அழிக்க முடிந்தது” எனக் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் லேசர் ஆயுதம்
மேலும், இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரேலின் அதிநவீன பாதுகாப்பு அமைப்பு, பல டிரோன்கள் சுட்டு வீழ்த்துவதைப் பார்க்க முடிகிறது. ஹிஸ்புல்லா மற்றும் ஈராக், சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுத குழுக்கள் இதுபோன்ற டிரோன்களையே இஸ்ரேலைத் தாக்கப் பயன்படுத்துகிறது. அந்த டிரோன்களை இஸ்ரேலின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பு அசால்டாக வீழ்த்துவது தெரிகிறது.
நொடியில் பொசுங்கும் டிரோன்கள்
இஸ்ரேலின் லேசர் ஆயுதங்கள் அந்த டிரோன்களின் இறக்கையை நொடியில் எரித்து விடுகின்றன. இதனால் அந்த டிரோன்கள் அப்படியே கீழே விழுந்து நொறுங்கிவிடுகிறது.
அதேநேரம் இந்த லேசர் ஆயுதங்கள் எந்த டெக்னாலஜி அடிப்படையில் செயல்படுகிறது.. இதனால் என்ன மாதிரியான அச்சுறுத்தல்களை முறியடிக்க முடியும் என்பது போன்ற தகவல்களைப் பகிரவில்லை. இருப்பினும், அவை ரபேல் ஆயுதங்களின் ஒரு பகுதி என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக இருக்கும் என்றும் கிட்டகட்ட ஐயர்ன் பீமுக்கு இணையான பாதுகாப்பை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் சொல்வது என்ன!
இது தொடர்பாக இஸ்ரேல் விமானப் படைத் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “லேசர் அமைப்புகளின் ஆயுதம் மூலம் ஏராளமான வான்வழி அச்சுறுத்தல்களைச் சமாளிக்க முடிந்தன. இதன் மூலம் டிரோன்கள் மட்டுமின்றி ராக்கெட்டுகளை கூட தாக்கி அழிக்க முடியும்” என்றார். இந்த புதிய லேசர்கள் ஆயுதங்கள் கேம் சேஞ்சராக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இதைக் கண்டு இஸ்ரேலின் அனைத்து எதிரிகளும் அஞ்சுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு ஏன் முக்கியம்!
இந்த ஆயுதம் இஸ்ரேலுக்கு மட்டுமில்லை இந்தியாவுக்கும் கூட ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் இந்தியாவும் பாகிஸ்தான் எல்லையில் டிரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. இந்தியாவிடம் ஏற்கனவே எஸ் 400 அதிநவீன பாதுகாப்பு அம்சம் இருந்தாலும் கூட இந்த லேசர் இந்தியாவின் திறனை அதிகரிக்கவே செய்யும். ரபேலின் இந்த புதிய ஆயுத அமைப்பு இந்தியாவுக்கு வந்தால் அது கூடுதல் பிளஸ் பாயிண்டாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இஸ்ரேல் இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதால் இந்த வான் பாதுகாப்பு அரணையும் விரைவில் கொள்முதல் செய்யப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.