இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் உச்சமடைந்துள்ளது. நேற்று ஈரானை, இஸ்ரேல் தாக்கிய பிறகு தற்போது மோதல் வலுத்துள்ளது. ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கிறது. இந்நிலையில் தான் ஈரானை அடிக்கும் முன்பு இஸ்ரேல் பிரதமர் யூதர்களின் புனித இடமான மேற்கு சுவருக்கு சென்று பிரார்த்தனை செய்தார். சுவர் இடுக்கில் பைபிள் வசனம் எழுதி வைத்த சபதமேற்ற நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் ஏற்கனவே மோதல் உள்ளது. அதேபோல் அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் சண்டை இருக்கிறது. இதற்கிடையே தான் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இது அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் பிடிக்கவில்லை. இருநாடுகளும் ீரானை் அணுஆயுதம் தயாரிப்பதை தீவிரமாக எதிர்த்து வருகிறது.
குறிப்பாக அமெரிக்கா – ஈரானுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. மொத்தம் 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் கூட இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ஈரானுக்கு அமெரிக்க கடும் வார்னிங் செய்தது. இதற்கிடையே தான் நேற்று இஸ்ரேல், ஈரான் அணு ஆராய்ச்சி கூடங்கள், யுரேனியம் செறிவூட்டும் மையம், அன்டர் கிரவுன்ட் ராணுவ தளம் உள்ளிட்டவற்றை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில் ஈரானுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி ஈரானின் அனைத்து ராணுவ படைகளின் தளபதி முகமது ஹூசைன் பகேரி, புரட்சிகர காவல் படை தளபதி சலாமி உட்பட 3 தளபதிகளையும், 2 அணு விஞ்ஞானிகளையும் இஸ்ரேல் கொன்றது.
கடந்த ஆண்டு இஸ்ரேல் – ஈரான் மோதிய நிலையில் இப்போது ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் ட்ரோன், ஏவுகணை கொன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை தாக்கி வருகிறது. இதனால் இருநாடுகள் இடையேயான மோதல் உச்சமடைந்துள்ளது. விரைவில் இது போராக மூளும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் ஈரான் மீது கொடிய தாக்குதலை நடத்தும் முன்பு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்த விஷயம் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. ‛ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் தான் ஈரானை இஸ்ரேல் தாக்கி உள்ளது. இந்த பெயர் சூட்டப்பட்டதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது.
அதாவது ஈரானை தாக்குவதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமை, ஜெருசலேம் நகரில் உள்ள ‛வெஸ்டன் வால்’ என்று அழைக்கப்படும் பழமையான மேற்கு சுவரில் அவர் பிரார்த்தனை செய்தார். ஜெருசலேமில் உள்ள மேற்கு சுவர் யூதர்களுக்கு மிகவும் புனிதமான இடம்.ஜெருசலேமில் யூதர்கள் கட்டிய முதல் மற்றும் 2வது வழிப்பாட்டு தலங்கள் எதிரிகளால் இடிக்கப்பட்டன. அதில் தற்போது ஒரு சுவர் மட்டுமே எஞ்சி இருக்கிறது. இதனை மேற்கு சுவர் என்றும், புனித இடமாகவும் யூதர்கள் நினைக்கின்றனர்.
இங்கு பிரார்த்தனை செய்யும் யூதர்கள் குறிப்பு எழுதி சுவர் இடுக்கில் வைப்பது வழக்கம். அதன்படி அங்கு தான் பெஞ்சமின் நெதன்யாகு பிரார்த்தனை செய்தார். மேலும் அவர் குறிப்பு ஒன்றையும் எழுதி மேற்கு சுவரின் இடுக்கில் வைத்தார். இதுதொடர்பான வீடியோ, போட்டோக்கள் வெளியாகின. தற்போது ஈரான் மீதான தாக்குதல் வெற்றிகரமாக முடிந்த நிலையில் நெதன்யாகு எழுதிய குறிப்பு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அது என்னவென்றால் ஒரு பைபிள் வசனம். ‛இதோ, ஒரு மக்களினம்.. அது ஒரு பெண் சிங்கம் போன்று எழும்புகிறது.. ஒரு சிங்கம் போன்று அது தன்னை உயர்த்துகிறது. இரையை விழுங்கி கொலையுண்டதின் இரத்தத்தை குடிக்கும் மட்டும் அது படுப்பதில்லை’ என்று எழுதியுள்ளார். இது எண்ணாகமம் 23வது அதிகாரம் 24வது வசனத்தில் அது வருகிறது. இதை தான் நெதன்யாகு எழுதி மேற்கு சுவர் இடுக்கில் வைத்திருக்கிறார். இதையடுத்து தான் ஈரான் மீதான தாக்குதலுக்கு ‛ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.