கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய மகளிர் அணி தலைவருமான வானதிசீனிவாசன் அறிக்கை உடனே வெளியிட்டுள்ளார் அதில்
செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரை பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு
அதிமுகவில் இருக்கும்போது ஊழல்வாதி – திமுகவில் சேர்ந்ததும் புனிதராகி விட்டாரா?
நிபந்தனை ஜாமினில் வெளிவந்திருக்கும் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்க கூடாது.கடந்த 2011 -20 16 அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட அரசு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
பணம் வாங்கியதை ஒப்புக் கொண்ட செந்தில் பாலாஜி, அதை வாங்கியவர்களிடமே திருப்பி கொடுத்து விட்டதாக அதாவது லஞ்சம் வாங்கியதை நீதிமன்றத்திலேயே ஒப்புக் கொண்டார்.
இதற்காக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
“சாட்சிகளை சந்தித்து பேசக்கூடாது, திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும், வெளிநாடு செல்ல தடை, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், உரிய காரணங்கள் இல்லாமல் வாய்தா கோர கூடாது” என பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், செந்தில் பாலாஜி ஏதோ புனிதர் போலவும், தேசத்திற்காகப் போராடி சிறை சென்றவர் போலவும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். செந்தில் பாலாஜியை நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜாமின் மட்டுமே வழங்கியுள்ளது என்பதை திமுகவினருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியதே திமுகதான். ஆனால், அவர் திமுகவில் இணைந்ததும் புனிதராகி விட்டார். செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது கரூரில் பேசிய இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “15 முறை அமைச்சரவை மாற்றப்பட்டபோதும், சீனியர் அமைச்சர்களே மாற்றப்பட்டபோதும், ஜூனியர் அமைச்சரான செந்தி்ல் பாலாஜி மட்டும் மாற்றப்படவில்லை. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர். ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது, யார் முதலமைச்சர் என்ற பட்டியலில் செந்தில் பாலாஜி பெயரும் இருந்தது.
இவர் கெட்டகேடு. இதுதான் வேடிக்கை. செந்தில பாலாஜியின் தம்பி, கரூர் மாவட்டத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். கொள்ளை, ஊழல், லஞ்சம் வாங்குவதில் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆள்கடத்தல், நிலஅபகரிப்பு புகார்கள் நீதிமன்றத்தில் உள்ளன” என பேசியிருந்தார்.
ஆனால் இப்போது, “எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள்.முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது” என வரவேற்றிருக்கிறார்.
முரண்பாடுகளின் மொத்த உருவம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் அவரே நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஊழல் குற்றவாளியை, அரசு வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்ட ஒருவரை கொண்டாடுவதற்கு வெட்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகள் விதித்திருப்பதால் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்க கூடாது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















