இந்தியாவில் லோகோமோட்டிவ் டீசல் இஞ்சின் தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்று JRD. டாடா முடிவு செய்தார். இதற்கான தொழில்நுட்பம் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இல்லை. டீசல் இஞ்சின் உற்பத்தியில் தலைசிறந்த நிறுவனங்கள் ஜெர்மனியில் தான் இருந்தன.
அது 1946ம் வருடம். இரண்டாம் உலகப்போர் முடிந்து விட்டது. ஜெர்மனியின் முன்னணி ஆட்டோ நிறுவனமான Krauss Maffei நிறுவனத்துடன் ஒரு தொழில்நுட்ப உடன்படிக்கை ஏற்படுத்தி, இந்தியாவில் டீசல் இஞ்சின் தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜெ.ஆர்.டி. டாடாவும் டெல்கோ நிறுவனத்தின் இன்ஜினியர் திரு சுமந்த் மல்கோங்கரும் ஜெர்மன் நாட்டில் உள்ள மியூனிச் நகருக்கு சென்றனர்.
மியூனிச் ரயில் நிலையத்தின் உள்ளே ரயில் மெதுவாக நுழைந்தது. Krauss Maffei நிறுவனத்தின் டைரக்டர்களில் சிலர் இந்தியாவிலிருந்து வந்த விருந்தாளிகளை வரவேற்க ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
ஜெர்மனி சென்ற டாடாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாம் உலகப்போரில் நடந்த வான்வழி குண்டு வீச்சில், மியூனிச் நகரம் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்து விட்டிருந்தது.
இரண்டாம் உலகப்போரின்போது ராணுவ விமானங்களின் குண்டு வீச்சினால் ஜெர்மனியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் அழிந்து விட்டிருந்தன. தொழிற்சாலைகள் இல்லாததால் வேலையில்லாத் திண்டாட்டம், பசி, பஞ்சம் தலைவிரித்தாடியது.
டீசல் இஞ்சின் லோகோமோட்டிவ் தொழில்நுட்ப உடன்படிக்கை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு சென்ற டாடாவிடம் Krauss Maffei நிறுவன டைரக்டர்கள் ஒரு உதவியைக் கோரினர்.
எங்கள் தொழிற்சாலையில் பணிபுரிந்த சில முன்னணி இன்ஜினியர்கள் இப்பொழுது வேலை இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர். அவர்களில் சிலரை குடும்பத்துடன் இந்தியா அழைத்துச் செல்லுங்கள். அவர்களை உங்கள் நிறுவனத்தில் பணியில் அமர்த்திக் கொள்ளுங்கள். உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் கொடுத்து அவர்களை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள் என்று Krauss Maffei நிறுவனத்தின் டைரக்டர்கள் டாடாவிடம் கோரிக்கை வைத்தனர். இந்த இன்ஜினியர்கள் திறமை வாய்ந்தவர்கள் உங்கள் கம்பெனிக்கு உதவுவார்கள் அது மட்டுமல்ல இந்திய இன்ஜினியர்களுக்கு பயிற்சியும் அளிப்பார்கள்.
ஜெர்மனி இன்ஜினியர்களில் சிலரை இந்தியா அழைத்துவந்த டாட்டா, தன் தொழிற்சாலைகளில் அவர்களுக்கு கௌரவமான வேலையும் அளித்தார்.
பிற்காலத்தில் இந்தியன் ரயில்வேயுடன் டீசல் இன்ஜின் தயாரிக்கும் ஒப்பந்தம் போடப்பட்ட போது ஜெர்மனியில் இருந்து வந்த விஞ்ஞானிகள் அந்த ஒப்பந்தத்தை செயல்படுவதற்கு பெரிதும் உதவினர்.
1950ம் வருடம் – டெல்கோ நிறுவனம் டயல் மர் பென்ஸ் உடன் இணைந்து டிரக்குகள் தயாரிக்க தொடங்கியது.
இது நடந்து சில வருடம் கழிந்தது. Krauss Maffei நிறுவனத்திற்கு திடீரென்று டாடா நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதம். “நீங்கள் அனுப்பிய இன்ஜினியர்கள் மூலம் டெல்கோ நிறுவனத்திற்கு தொழில்நுட்ப உதவிகளும் மற்றும் எங்கள் நிறுவன இன்ஜினியர்களுக்கு பயிற்சியும் கிடைத்தது. இதற்காக டாட்டா நிறுவனம் எவ்வளவு தொகை உங்களுக்கு அளிக்க வேண்டும் என்பதைத் தெரியப் படுத்துங்கள்”.
Krauss Maffei நிறுவனத்தில் உள்ள டைரக்டர்கள் யாருமே எதிர்பாராத கடிதம் இது. எந்த ஒரு ஒப்பந்தமும் கையெழுத்திடவில்லை. அதுமட்டுமல்ல இன்ஜினியர்களுக்கு வேலை கொடுத்து அவர்களை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையை Krauss Maffei நிறுவனம்தான் வைத்திருந்தது. இந்த சூழ்நிலையில் JRD டாடா கடைபிடித்த நேர்மையான வழி முறை அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பல வருடம் முன்பு (1950களில்) நடந்த இந்த நிகழ்ச்சி பற்றி இன்றும் கூட Krauss Maffei நிறுவனத்தில் பெருமையாகப் பேசப்படுகிறது.
1970 ம் வருடம். Krauss Maffei நிறுவனத்தின் ஒரு டெண்டர் விஷயமாக டெல்கோ நிறுவனம் ஒரு பேங்க் கேரண்டி அளிக்க வேண்டியிருந்தது. அப்போது இருந்த மத்திய அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய வங்கிகளால் அந்த பேங்க் கேரண்டி தர இயலவில்லை.
இந்த விஷயம் ஜெர்மன் கம்பெனிக்கு தெரியப்படுத்தப்பட்டது.
“உங்களிடமிருந்து எங்களுக்கு எந்த ஒரு பேங்க் கேரண்டியும் தேவையில்லை. டாட்டா நிறுவனத்தின் லெட்டர் ஹெட்டில், JRD டாட்டா கையெழுத்துப் போட்ட ஒரு கடிதம் இருந்தால் போதுமானது” என்று Krauss Maffei கூறிவிட்டது.
“JRD டாடாவின் கையெழுத்து போட்ட கடிதத்தை நாங்கள் பேங்க் கேரன்டியை விட அதிக மதிப்புடன் ஏற்றுக்கொள்வோம்” என்று Krauss Maffei நிறுவனம் கடிதம் எழுதியது.
கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் பத்மநாபன் நாகராஜன்.