ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் முக்கிய கூட்டாளி சதா என்பவர் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் இன்று காலை சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர், உலர் பழங்கள் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் தயாரிக்க பயன்படும் முக்கிய வேதிப்பொருளான சூடோபெட்ரின் கடத்தப்படுவதாக, டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள ஒரு குடோனில் கடந்த பிப்ரவரி 15 ம் தேதி சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் 50 கிலோ எடை கொண்ட 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த என்சிபி அதிகாரிகள் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக இருந்தது திமுகவின் அயலக அணி நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து டெல்லியில் குடோன் அமைத்து சத்து மாவு மற்றும் தேங்காய் பவுடரில் மறைத்து போதை பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதும் கண்டுப்பிடிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 45 முறை 3500 கோடி ரூபாய் போதைப் பொருட்களை ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு கடத்தியதும் தெரியவந்தது.
போதை கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் தலைமறைவானதையடுத்து ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வீட்டுக்கு சீல் வைத்தனர். மேலும் அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க, நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுத்தது மற்றும் சினிமா பிரபலங்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. ஜாபர் சாதிக்கிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது முக்கிய கூட்டாளி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியை சேர்ந்த சதா என்கிற சதானந்தாவை என்சிபி அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.
சதானந்தாதான் போதை பொருட்களை சத்துமாவு மற்றும் தேங்காய் பவுடர் போன்றவற்றுடன் மறைத்து வைத்து பேக் செய்தவர் என்றும் தெரிவித்துள்ள என்சிபி அதிகாரிகள், போதைப்பொருட்களை பேக் செய்வதில் சதா, கில்லாடி என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னையில் குடோன் ஒன்றை நடத்தி போதை பொருட்களை பேக் செய்து வந்ததாகவும் என்சிபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் இதற்காக அவர் டெல்லி அழைத்து செல்லப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜாபர் சாதிக் மற்றும் சதா ஆகிய இருவரையும் குடோனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளதாகவும் என்சிபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சதானந்தா ஐந்தாவது நபராக கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைமறைவாக ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் சலீம் மற்றும் மைதீனை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது குறிபிட்டத்தக்கது.