ஜோதிடம் என்பது வானியல் சாஸ்திரம் என்பதை பலமுறை நான் பதிவு செய்திருக்கிறேன்.
ஜோதிடம் என்பது மந்திரமோ தந்திரமோ அல்ல…. ஜோதிடர்கள் என்பவர்கள் ரிஷிகளோ வரம் கொடுக்கும் சாமிகளோ அல்ல.
மருத்துவம், பொறியியல், விவசாயம், மேலாண்மை போன்ற மற்ற படிப்புகளைப் பயின்று அதில் வல்லுநர்கள் ஆவதுபோல…. ஜோதிடம் என்னும் அறிவியலைப் பயின்று அதில் தம்மை நிலை நிறுத்திக் கொண்டிருப்பவர்களே ஜோதிடர்கள்.
சரியாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு பாடம்… அந்தப் பாடத்தை படித்து தெரிந்து கொண்டு பலன் கூறுபவர்கள்தான் ஜோதிடர்கள்.
பாடம் பயின்று அதில் தேர்ச்சி பெறுவதில் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமான திறமை இருக்கும் 100% மதிப்பெண்கள் பெறுகிறவர்கள் உண்டு 35% மதிப்பெண்கள் பெறுபவர்களும் உண்டு.
அதனால், அவரவர்கள் கற்றதற்கு ஏற்ப… தெரிந்து கொண்டதற்கு ஏற்ப… தாங்கள் வளர்த்துக்கொண்ட தகுதிக்கேற்ப பலன்கள் கூறி வருகின்றனர்.
இந்த இடத்தில்….
எந்த ஒன்றையும் நான்தான் கண்டுபிடித்தேன்… நான்தான் உருவாக்கினேன் என்று சொல்லக்கூடிய நிலை ஜோதிட சாஸ்திரத்திற்கு கிடையாது. பராசர முனிவர், புலிப்பாணி என்று பலர் ஜோதிட சாஸ்திரத்தை நமக்கு வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அதிலிருந்து… காலத்திற்கு ஏற்ப! சூழலுக்கு ஏற்ப! வாழ்வியலுக்கு ஏற்ப! மக்களின் புரிதலுக்கேற்ப… ஓட்டத்திற்கு ஏற்ப… அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஜோதிட சாஸ்திரம் கற்றவர்கள் தாங்கள் கற்றதை எளிய வழியில் அவர்களுக்கு பலன்களாக வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
திருவள்ளுவர் எழுதிய ஒரு திருக்குறளுக்கு ஆயிரமாயிரம் பேர் தாங்கள் புரிந்ததை வைத்து விளக்க உரை எழுதியிருப்பதுபோல் நம் முன்னோர்கள் எழுதி வைத்த ஜோதிட சாஸ்திரத்தை அறிந்து, புரிந்து அதிலிருந்துதான் நாம் பலன்கள் கூறி வருகிறோமே ஒழிய, இதை நான்தான் புதிதாக உருவாக்கினேன்… இதை நான்தான் புதிதாக படைத்தேன் என்று சொல்லக்கூடிய விஷயங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் இல்லை என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் கற்காமல் போனதை… அதன் ஆழத்தை உணர முடியாமல் போனதை நாம் கற்றிருக்கலாம்… உணர்ந்திருக்கலாம்! அவ்வளவுதான்.
அதனால் இங்கே இதை நான்தான் சிருஷ்டித்துள்ளேன்… பராசர முனிவர் அறியாததை… புலிப்பாணிக்கு தெரியாததை நான் தெரிந்துள்ளேன் என்று எவர் கூறினாலும் அது அப்பாவி மக்களை ஏமாற்றும் கூற்றேயாகும்.
திருக்கோவிலூர் பரணிதரன் – 9444 393 717