கன்னி
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள், மற்றும் அஸ்தம், சித்திரை 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும்; ஜென்ம ராசி எதுவென்று தெரியாத புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும்; டோ, ம, பா, பி, பூ, ஷ, ன, ட, பே, போ ஆகிய எழுத்துக்களைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.ராசியின் அதிபதி: புதன். நட்சத்திர அதிபதிகள்: சூரியன், சந்திரன், செவ்வாய். யோகாதிபதிகள்: புதன், சுக்கிரன், சனி. பாதகாதிபதி: குரு. மாரகாதிபதிகள் குரு, சந்திரன்.
கண்ணியம் காக்கும் கன்னி ராசி.
வித்யா காரகனான புதனின் அம்சத்தில் பிறந்து, தோற்றத்தில் அமைதியும், இனிமையாக பேசும் ஆற்றலும், அடுத்தவர்களுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் எண்ணமும், எந்த நேரத்திலும் நிதானத்தை இழந்து விடாத மனநிலையையும் கொண்ட கன்னி ராசி நண்பர்களே!
நீங்கள் மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்தாலும், அதிகபட்சமான செல்வாக்கு பெற்றிருந்தாலும், அடக்கமானவராகவே காட்சியளிப்பீர்கள். பார்ப்பதற்கு எளிமையானவராக இருப்பீர்கள். என்றாலும், உடலழகின்மீது எப்போதும் தனி கவனம் செலுத்துவீர்கள். சடங்கு சம்பிரதாயங்களில் மிக நம்பிக்கை உடையவராக இருப்பீர்கள். யாருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற எண்ணம் உங்கள் மனதில் மேலோங்கியிருக்கும். ஆர்ப்பாட்ட வழியைப் பின்பற்றாமல் அமைதி வழியில் நீங்கள் செல்தால்தான் உங்களால் அனைத்திலும் வெற்றிகளைக் காணமுடிகிறது. வெளியுலகத்திற்கு நீங்கள் சிக்கனமானவர் போல் தோன்றினாலும், உலகை நன்றாகப் புரிந்தவர்கள் நீங்கள் என்பதால் வரவிற்கேற்ப செலவு செய்வதில் கெட்டிக்காரராக இருப்பீர்கள். உங்களுக்குள்ள பிரச்சினைகள், கவலைகள்பற்றி யாரிடமும் எப்போதும் மூச்சுவிட மாட்டீர்கள். எத்தகைய துன்பம் வந்தாலும் அதையெல்லாம் தாங்கிக்கொண்டு காரியமாற்றும் ஆற்றல் பெற்றவராக நீங்கள் இருப்பீர்கள். புதன் என்ற சொல்லுக்கு எல்லாம் தெரிந்தவர் என்று பொருள். வித்யாகாரகன், கல்விக்காரகன் என்று உங்கள் ராசிநாதனை உலகம் கொண்டாடி மகிழ்வதையே அதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
நீங்கள் சுகவாசிகள் என்றாலும் காலத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் உங்களுக்கு முன்னால் உள்ள வேலைகளை உடனுக்குடன் செய்து, அதில் வெற்றியையும் அடைவீர்கள். மற்றவர்களால் முடிக்க முடியாத வேலைகளைக் கூட எளிதில் முடித்து விடும் ஆற்றல் பெற்றவராக இருப்பீர்கள். உங்களில் சிலர் மூலதனம் இல்லாமல்கூட மிகப்பெரிய செல்வந்தராக உருவாகியுள்ளனர். உங்கள் வாக்கிற்கு இருக்கும் மதிப்பும், பிறரை நம்ப வைக்கும் தன்மையும், உங்களை மிகப்பெரிய முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.
உங்களுக்கு நண்பர்களாக வாய்ப்பவர்களே உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படுவார்கள். அவ்வப்போது உங்களுக்கு எதிர்ப்புகள் தோன்றிக் கொண்டிருக்கும் என்றாலும் அவற்றை முறியடிக்கும் வலிமையும் உங்களிடம் இருக்கும். நாளை நடக்கப்போவதை இன்றே அறிந்துகொள்ளும் ஆற்றல் உங்களுக்கிருக்கும் என்பதால் எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் வலிமையும் உங்களுக்கிருக்கும். எந்தவொரு செயலையும் நீங்கள் நன்றாக சிந்தித்தப்பிறகே காரியத்தில் இறங்குவீர்கள். எதையும் திறமையாக செய்து புகழ்பெற வேண்டும், வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்பது உங்கள் பிறவி குணமாக இருக்கும்.
திறமையாக பேசுவதிலும், தர்க்கம் செய்வதிலும் வல்லவராக இருப்பீர்கள். பிறர் செய்யும் நன்மைகளை விட அவர்கள் செய்யும் குற்றங்களே உங்கள் பார்வையில் எப்போது பளிச்சென்று தோன்றும். குற்றத்தைக் கண்ட இடத்திலேயே ஒளிவு மறைவு இல்லாமல் அதை எடுத்துக்கூறி குற்றம் செய்தவரை திருத்த நினைப்பதும் உங்கள் வழக்கமாக இருக்கும். உங்களைச் சார்ந்தவர்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் நீங்கள் உங்களுக்கென்று வரும்போது மற்றவர்களிடம் உதவி கேட்பதற்கு உங்கள் தன்மானம் தடுக்கும். எதிலும் எச்சரிக்கையாகவும், மிகவும் கவனமாகவும் வாழ விரும்புவீர்கள். எதைச் செய்தாலும் அதை மிகவும் நன்றாக யோசித்து செய்வீர்கள்.
உங்களுக்கு கோபம் அதிகமாக வராது. வந்தாலும், வந்த வேகத்தில் தணிந்துவிடும். ஆனால், சுய கௌரவத்திற்கு பங்கம் உண்டாக்கும் வகையில் உங்களை யார் சீண்டினாலும் அதை மறக்கவும் மாட்டீர்கள். மன்னிக்கவும் மாட்டீர்கள்.சோம்பலாக இருப்பதென்பது உங்களுக்கு கொஞ்சமும் பிடிக்காது. அப்படி இருப்பதுதான் துரதிர்ஷ்டத்திற்கு காரணம் என்று நினைப்பீர்கள். எதிர்காலத்திற்குரிய விஷயங்களையும் பொருட்களையும் சேமித்துக் கொள்வதில் அதிக அளவில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
எதையும் அலசி ஆராய்ந்து, விமர்சித்துப் பார்க்கும் ஆற்றல் உங்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். என்றாலும், உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பீர்கள். குடும்பம், தொழில் என்று சதாசர்வ நேரமும் சிந்திப்பதும் செயல்படுவதுமாக இருப்பதால் உங்கள் மூளைக்கு ஓய்வு என்பது இல்லாமல் போகும். எனவே, ஓய்வு நேரத்தில் திட்டமிட்டு இயற்கை வாசஸ்தலங்களுக்கு சென்று வருவது உங்களுக்குள் புத்துணர்ச்சியை உண்டாக்கும்.
செயல்படுவதில் நீங்கள் வல்லவர்கள் என்பதால் உங்கள் ஆற்றலை வருவாயாக்கும் வகைகளில் அவசரமின்றியும் நிதானமாகவும் செயல்படுவது உங்களுக்கு நன்மையாகும். எல்லோரையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதை விட்டொழித்தால் உங்கள் வாழ்வில் நன்மை அதிகரிக்கும். உங்களுக்கு நன்மைச் செய்யக்கூடியவர்களின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்வது உங்கள் எதிர்காலத்திற்கு வழிகாட்டுதலாக இருக்கும்.
அடுத்தவர் மனம் புண்படாத வகையில் வாழ வேண்டும், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாக இருக்கும். உங்கள் முயற்சியில் வெற்றியைக் காண்பது மட்டுமே உங்கள் லட்சியமாக இருக்கும். உங்களுக்கு கல்வியறிவுடன், மாமன், மைத்துனர்வழி ஒத்துழைப்பும் இயற்கையாகவே அமைந்துவிடும். உங்கள் யோசனைகளைக்கேட்டு முன்னேறியவர்கள் நிறையபேர் உண்டு. அதே நேரத்தில் உறவினர்களுக்கு நீங்கள் எவ்வளவுதான் உதவி செய்தாலும் அவர்களிடம் நன்றியை எதிர்பார்க்கவே முடியாது. அதுபோல உறவினர்கள் உங்களுக்குத் தொல்லைகள் கொடுத்தாலும் அதை எல்லாம் மறந்து அவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
உங்களுக்குள் இருக்கும் ஒப்பற்ற திறமைகளை தெரிந்து கொண்டு செயல்பட்டால் எப்போதும் உங்களுக்கு வெற்றிமேல் வெற்றிதான். அதே நேரத்தில் மிக முக்கியமான ஒன்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பதுபோல், கன்னிக்கு கன்னியே எதிரியாகலாம். எனவே, இரண்டு கன்னி ராசிக்காரர்கள் ஒரே வீட்டில் இருந்தால் பிரச்சினைகளுக்குமேல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம் என்பதால், வீட்டில் இரண்டு கன்னி ராசிக்காரர்கள் இருந்தால் ஒருவரைவிட்டு ஒருவர் விலகி இருப்பது இருவருக்குமே நன்மையாகும்.
பொதுவாக மற்றவர்கள் மனதைப் புண்படுத்துபவராக நீங்கள் இருக்க மாட்டீர்கள். கெட்டவர்களையும், எதிரிகளையும்கூட நண்பர்களாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவராக இருப்பீர்கள். ஜாதி, மதம், ஏழை, பணக்காரர் என்று பேதம் பார்க்காமல் அனைவரையும் சரி சமமாக நினைத்து பழகக்கூடிய உங்களுக்கு இல்லறத் துணையால் ஏற்றம் உண்டாகும்.
பொருளாதார நிலை எப்போதும் உங்களுக்கு உயர்வாகவே இருக்கும். தேனிபோல் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட்டு எப்படியாகிலும் பணத்தை சம்பாதிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக நீங்கள் இருப்பீர்கள். கிடைக்காத எந்த ஒன்றுக்கும் எப்போது நீங்கள் ஏங்க மாட்டீர்கள். என்றாலும், வீடு வாகனம் என்று வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் அடைய முயற்சிப்பீர்கள்உங்கள் ராசியில் பிறந்த பலர் கலைத்துறையில் புகழ்பெற்று விளங்குகின்றனர். பலர் ஆசிரியர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், நிர்வாகிகளாகவும் விளங்குகின்றனர். இவையெல்லாம் கன்னி ராசியில் பிறந்தவர்களின் பொதுப் பலன்களாகும்.
நீங்கள் கன்னி ராசியில் பிறந்திருந்தாலும், உங்கள் நட்சத்திரங்கள் வேறுபட்டிருக்கும். உங்கள் ராசிநாதனின் நிலை வேறுபட்டிருக்கும். உங்கள் ஒவ்வொருவர் ஜாதகத்திலும் கிரகங்கள் மாறுபட்டிருக்கும். லக்னங்களில் மாற்றம் இருக்கும். தசா புத்திகளில் வித்தியாசங்கள் இருக்கும். ஒருவருக்கு அமைந்திருப்பதுபோல் மற்றவர்களுக்கு கிரகங்கள் அமைந்திருக்காது என்பதால் ஜனன ஜாதக அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடும்.
இந்த நிலையில் கோட்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து நமக்கு உண்டாகப்போகும் பலன்களை அறிந்து கொள்கிறோம். ஜாதக ரீதியாக பாதகமான நிலையில் உள்ளவர்களுக்கும் கோட்சார பலன்களின் வழியே நன்மைகள் உண்டாகும் வாய்ப்புள்ளது. அந்த ரீதியில், சுபகிரகமான குரு பகவானின் பெயர்ச்சியை நாம் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்.
அதிர்ஷ்டம் அளிக்கும் பாக்ய குரு
கடந்த ஒரு வருடமாக உங்கள் ராசியான கன்னி ராசிக்கு அஷ்டம ஸ்தானம் என்னும் எட்டாம் வீடான மேஷத்தில் சஞ்சரித்து மிகவும் பாதகமான பலன்களை பல வகையிலும் வழங்கி, உங்களை சங்கடத்தில் ஆழ்த்திவந்த குரு பகவான் 1.5.2024 அன்று உங்கள் ராசிக்கு 9 ம் வீடான ரிஷப ராசியில் பாக்ய குருவாக சஞ்சரித்து அந்த வீட்டிற்குரிய பலன்களை உங்களுக்கு வழங்கிடப் போகிறார்.
குரு பகவான் எட்டாம் வீட்டில் சஞ்சரித்த காலத்தில், நீங்கள் செய்துவந்த தொழிலில் பாதிப்பையும், நஷ்டத்தையும் உண்டாக்கியதுடன் எந்தவொரு வேலைக்கும் அதிகபட்சமான முயற்சிகளை மேற்கொள்ளும்படியான நிலையை உண்டாக்கினார். ஒரு பக்கம் அலைச்சல், மறுபக்கம் பணவிரயம் என்ற நிலையை ஏற்படுத்தினார். உடல் நிலையிலும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தினார். குடும்பத்தில் ஒருவர் விட்டு ஒருவர் நோய்வாய்ப் படும்படி செய்தார். அலைச்சல், பணவிரயத்தை அதிகப்படுத்தினார். பார்த்துவரும் வேலையில் சரிவர கவனத்தை செலுத்த முடியாத நிலையை உருவாக்கினார். பணிபுரியும் இடத்தில் அடிக்கடி விடுமுறை எடுக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தினார். வீண் பிரச்சனைகளையும் தொல்லைகளையிம் வீடுதேடி வரும்படி செய்தார். வரவேண்டிய தொகையும் கைக்கு வராத வகையில் இழுபறி நிலையை ஏற்படுத்தினார். எப்போதும் கவலையான நிலையிலேயே வாழவைத்தார். பொருளாதார நெருக்கடியில் சிக்க வைத்தார். அதனால், கையில் இருந்த பொன் பொருட்களில் குறைவையும் ஏற்படுத்தினார். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, பிள்ளைகளால் தொல்லையென்று கடந்த ஒரு வருடத்தில் உங்கள் வாழ்க்கையை போராட்ட களத்தில் நிற்க வைத்தார்.
ஒருவருக்கு எட்டாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும் போது சங்கடமான பலன்களே உண்டாகும் என்பது பொதுவிதி. இந்த நேரத்தில் தசாபுத்தியும் பாதகமாக இருந்துவிட்டால் சோதனைக்குமேல் சோதனை என்றுதான் சொல்ல வேண்டும்.நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்! எங்கள் சோதனையும், வேதனையும் இந்த குருப் பெயர்ச்சியிலாவது தீருமா? எட்டில் இருந்த குரு பகவான் எங்கள் வாழ்க்கையில் துன்பத்திற்கு மேல் துன்பங்களை வழங்கினார். ஒன்பதுக்கு வரும் குருபகவான் என்ன செய்வார்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
ஒன்பதாம் இடமான ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கப்போகிறார். ‘மன்னன் என்னும் பெயர் கொண்ட குருபகவான் நவம் என்கின்ற ஒன்பதாமிடத்தில் ஏறினால் மன்னனாவான்! அரசாங்க வழியில் ஆதாயங்களை அடைவான்! தான், வாழ்கின்ற ஊரில், மாநிலத்தில், நாட்டில் புகழோங்கி வாழ்வான்…’ என்று புலிப்பாணி முனிவர் கூறி இருக்கிறார்.
ஒன்பதாம் இடம் என்பது பிதுர் ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தர்ம ஸ்தானம் என்பர். இந்த இடத்தை வைத்துதான் அரசாங்கத்தால், தந்தையால் அடையக்கூடிய நன்மைகளையும் தீமைகளையும் தெரிந்து கொள்ள முடியும். நமக்கு கிடைக்கப்போகும் பாக்யத்தை நாம் செய்யப் போகும் புண்ணிய செயல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
குரு பகவான், தான் அமரும் இடத்திற்குப் பாதகமான பலன்களை வழங்குவார் என்றொரு பொதுவான விதி இருந்தாலும், 2, 5, 7, 9, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது அந்த இடத்திற்குரிய பலன்களையும் நற்பலன்களாகவே வழங்குவார். இதனால், ஒன்பதாம் இடத்திற்குவரும் குரு பகவனால், இருளுடைந்துள்ள உங்கள் வாழ்க்கையில் மீண்டும் ஒளி உண்டாகப் போகிறது.
ஆம்; ஒன்பதாம் இடத்திற்கு வரும் குரு பகவன் முதலில் உங்கள் உடல் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். மருந்து, மாத்திரை, மருத்துவர் என்று அலைந்தும் உடல்நிலை சீராகவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்தவர்களின் உடல்நிலை சீராகும். மனதில் தைரியம் அதிகரிக்கும் தன்னம்பிக்கை உண்டாகும். உங்கள் செயல்திறன் கண்டு பகைவர்களும் உங்களிடம் சரணடைவார்கள். பிரச்சினை என்று நீங்கள் பயந்துகொண்டு, மனதை வருத்திக் கொண்டிருந்ததெல்லாம் சூரியனைக்கண்ட பனிபோல் அகலத்தொடங்கும்.
இதுவரை திருமணம் கூடி வரவில்லையே என்று வருந்தி கொண்டிருந்தவர்களுக்கும், வீட்டில் வயது வந்த பிள்ளைகள் இருந்தும் திருமணம் நடக்கவில்லையே என்ற சோகத்தில் இருந்தவர்களுக்கும் இக்காலம் நன்மையை உண்டாக்கும். வீட்டில் மங்கள வாத்தியம் முழங்கும்.குழந்தை பாக்யத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களின் ஏக்கம் தீரும். வாழ்க்கைத் துணையால் உங்கள் அந்தஸ்து உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலர் இருப்பிடத்தை மாற்றம் செய்வீர்கள். வேறு இடம் வேறு ஊர், மாவட்டம் விட்டு மாவட்டம், என்று ஒரு சிலருக்கு வெளியூர் வாசம் அமையும். அதனால் நன்மைகளே உண்டாகும்.
சொந்தமாக வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகமும் இக்காலத்தில் உண்டாகும். கல்வியாளர்கள், மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆசிரியர்கள் நிலை உயரும். புதிய பொறுப்புகள் தேடிவரும். கடல்கடந்து செல்ல நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வரும். அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வும் எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகும். பொதுவில் இக்காலம் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் காலமாகும். நினைத்ததெல்லாம் நடக்கும் காலமாகும் என்பதால் இக்காலம் உங்களுக்கு யோக காலமாகும்.
ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து அந்த வீட்டிற்குரிய பலன்களை யோகப் பலன்களாக வழங்கும் குரு பகவான், அங்கிருந்து அவர் பார்க்கப் போகும் 5, 7, 9 ம் பார்வைகளாலும் நன்மைகளை வழங்கப் போகிறார். முதலில், தனது ஐந்தாம் பார்வையினால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களிடம் ஒரு புதிய பொலிவு தோன்றும். மனதிலும் செயலிலும் வேகம் உண்டாகும். ஆயுள் பற்றி அச்சம் கொண்டிருந்த நிலைமாறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கையாகும். ஐம்புலனும் சந்தோஷமடையும் நிலை உண்டாகும். புகழும் செல்வாக்கும் ஏற்படும். உங்கள் சிந்தனை செழிப்படையும். எல்லாவற்றையும் முன்னதாகவே உணர்ந்து அதற்கேற்ப வாழ ஆரம்பிப்பீர்கள்.
அடுத்து, தனது ஏழாம் பார்வையினால் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான தைரிய, வீரிய, பராக்கிரம, சகோதர ஸ்தானத்தைப் பார்க்கும் குருபகவான், உங்கள் துணிச்சலை அதிகரிப்பார். குடும்பத்தில் இருந்த குழப்பங்களை முடிவிற்கு கொண்டு வருவார். உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார் உலகைப் பற்றிய அறிவை உண்டாக்குவார். மற்றவர்களின் போற்றுதல்களையும் தூற்றுதல்களையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். உங்கள் உழைப்பும் முயற்சியும்தான் உங்களை வாழ வைக்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். செல்லும் இடமெல்லாம் இனி சிறப்பைக் காண்பீர்கள். செய்துவரும் தொழில் விருத்தியாகும். கடன்கள் அடைபடும். காதுநோய் குணமாகும். அரசியல், எழுத்து, பேச்சு, செயல் எல்லாம் இனி முன்னேற்றமாக இருக்கும். உங்கள் வீரியம் அதிகரிக்கும். யோகமும் போகமும் உண்டாகும்.
அடுத்து, தனது ஒன்பதாம் பார்வையினால் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தைப் பார்க்கும் குரு பகவான், குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யத்தையும், பிள்ளைகள் நிலையை நினைத்து கவலைப்பட்டு வந்தவர்களுக்கு அவர்களின் வழியே மகிழ்ச்சியையும், பூர்வ புண்ணிய சொத்தில் இருந்த பிரச்சினைகளால் வம்பு வழக்கு என்று நீடித்து வந்ததில் நீங்கள் எதிர்பார்த்த தீர்வையும் ஏற்படுத்தி உங்களுக்கு நிம்மதியை உண்டாக்குவார். குலதெய்வ அருளும் இக்காலத்தில் கிடைக்கப்பெறும். இவை யாவும் ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் உங்களுக்கு உண்டாகப்போகும் ஸ்தானப்பலனும், பார்வைகளின் பலன்களுமாகும். இவை யாவினாலும் இந்த ஆண்டில் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகப் போகிறது. உங்கள் எண்ணமெல்லாம் நிறைவேறப்போகிறுது.
பலன்களை மாற்றும் அஸ்தமன காலம்
குரு பகவான் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில்,
3.5.2024 முதல் 2.6.2024 வரை அஸ்தங்கம் அடைவதால் இக்காலத்தில் அவரால் உங்களுக்கு ஆதாயமான பலன்களை வழங்க முடியாமல் போகும். இருந்தாலும், அவர் உங்களுக்கு சப்தமாதிபதி என்பதால் உங்களுக்கு நன்மைகளையே வழங்கிடக் கூடியவர். அதனால் உங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த மாட்டார். என்றாலும், ஞானக்காரகன், தனக்காரகன் அஸ்தங்கம் அடைவதால் மனதில் குழப்பங்கள், செயலில் தடுமாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பண வரவிலும் தடைகள் ஏற்படும் என்பதால் ஒவ்வொரு செயலிலும் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது அவசியம்.
வக்ரமடையும் பாக்ய குரு
குரு பகவானின் சஞ்சார நிலையில் அஸ்தமனமும் வக்ர நிலையும் ஏற்படுவதால், அக்காலத்தில் அவர் வழங்கும் பலன்களிலும் மாற்றம் உண்டாகும். 15.10.2024 முதல் 11.2.2025 வரை குரு வக்ரமடைவதால் பாக்ய ஸ்தானத்தில் இருந்து அவர் வழங்கிவரும் பலன்கள் இக்காலத்தில் மாறுபடும். பொதுவாக குரு பகவான் வக்ரம் அடையும்போது முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்கிடக் கூடியவர் என்பதால், இக்காலத்தில் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எதிர்பார்த்த அளவிற்கு பண வரவு இருக்கும். வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். தாய் வழி உறவுகளின் ஆதரவு உண்டாகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கி நிம்மதியான நிலை ஏற்படும்.
ஆறாமிட சனியால் அதிர்ஷ்டம் உண்டாகும்.
சனி பகவான் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை அவரவர் கர்ம வினைக்கேற்ப வழங்கிடக் கூடியவர் என்பதால், ஆறாம் இடத்தில் அவர் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் வாழ்க்கை வளமாகும். உடலில் இருந்த பாதிப்புகள், சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலகும். தொழிலில், வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் காணாமல் போகும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கான நிலையை உங்களால் அடைய முடியும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி என்பதுடன், கடந்த காலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் எல்லாம் விலகும். பொருளாதாரத்தில் உயர்வும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.
ராகு – கேது சஞ்சாரப் பலன்கள்
குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலம் முழுவதும், கேது உங்கள் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பார் என்றாலும், இக்காலத்தில் குரு பகவானின் பார்வை அவர்மீது பதிவதால் அவரால் ஏற்படுகின்ற பாதிப்புகள் சங்கடங்கள் நெருக்கடிகள் உங்களை நெருங்காமல் போகும். ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும் ராகு இக்காலத்தில் உங்கள் வாழ்க்கையில் தடுமாற்றங்களையும் தடமாற்றங்களையும் ஏற்படுத்துவார். உங்களுக்கு கொஞ்சமும் பொருத்தமோ தகுதியோ இல்லாதவர்களுடன் உங்களை இணைத்து வைப்பார். கணவன் மனைவியரிடையே சண்டையையும் சச்சரவையும் உண்டாக்குவார். ஒரு சில தம்பதிகள் இக்காலத்தில் பிரிந்து வாழவும் நேரும். அந்நிய உறவுக்கு ஆட்பட்டு அதுவே உலகம் என்று நினைக்கும் மனநிலைக்கு ஒரு சிலர் ஆளாவீர்கள். உங்கள் உற்றார் உறவினர்கள் கூட உங்களை இக்காலத்தில் வெறுக்க ஆரம்பிப்பார்கள். தீயவர்களின் நட்பினால் அவதிப்படுவதுடன் ஒரு சிலர் இருக்கும் இடத்தைவிட்டு வாழும் ஊரை விட்டு வேறு இடம் செல்ல நேரும். யார் சொல்லுக்கும் மதிப்பளிக்காமல் மனம் விரும்புவதுபோல் மட்டுமே இககாலத்தில் உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்கள். இது; ராகுவால் உங்களுக்கு உண்டாகும் பலனாகும். என்றாலும் சுய ஜாதகத்தின் திசா புத்தியினால் இப்பலன்களில் மாற்றம் உண்டாகும்.
சூரியனால் உண்டாகும் ராஜயோகம்
ஒன்பது கிரகங்களும் அவரவர் சஞ்சரிக்கும் நிலைக்கேற்ப, சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப பலன்களை வழங்குவது போல், சூரிய பகவானும் அவரவர் ராசிக்கு 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது யோகமான பலன்களை வழங்குவார். மற்ற கிரகங்களால் உண்டாகிடக்கூடிய அவயோக பலன்களையும் கட்டுப்படுத்துவார். அக்காலங்களில் ஜாதகருக்கு எல்லா வகையிலும் நன்மைகளை உண்டாக்குவார். அந்த வகையில், கன்னி ராசியினரான உங்களுக்கு, ஆணி, ஆடி, கார்த்திகை, மாசி ஆகிய நான்கு மாதங்களும் உங்களுக்கு எல்லா வகையிலும் நன்மைகளை உண்டாக்குவார். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்குவார். தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகரிப்பார். உடலில் இருந்த சங்கடங்களை அகற்றுவார். எதிரிகளிடமிருந்து உங்களைப் பாதுகாப்பார். வழக்குகளில் உங்களுக்கு சாதகத்தை உண்டாக்குவார். தொழில், வியாபாரத்தில் போட்டியாளர்கள் இல்லாத நிலையை உருவாக்குவார். லாபத்தை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு வேண்டிய வழிகளை அமைத்துக் கொடுப்பார். பண வரவில் இருந்த தடைகளை அகற்றி உங்களுக்கு ராஜயோகத்தை வழங்குவார்.
பொதுப்பலன்
பாக்ய குருவின் காலம் உங்களுக்கு யோகமான காலமாகும் இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடங்கள் எல்லாம் இப்போது விலக ஆரம்பிக்கும். இதற்குமுன் நீங்கள் முயற்சி செய்தும் நடக்காத காரியங்கள் இப்போது எளிதாக நடந்தேறும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமணம், குழந்தை பாக்கியம், சொத்து சேர்க்கை, வேலைவாய்ப்பு, தொழில், வியாபாரம், வசதி வாய்ப்பு என்று எல்லாவற்றிலும் உங்களுடைய எண்ணம் நிறைவேறும். எதிர்ப்புகள் இல்லாத காலமாக இக்காலம் இருக்கும். குலதெய்வ அருளும், தெய்வ அருளும் உங்களைப் பாதுகாக்கும். மற்றவர்கள் பார்வைக்கு ஏளனமாக தெரிந்த நிலை மாற்றம் பெற்று செல்வாக்குடன் வாழக்கூடிய நிலை உண்டாகும். பெண்களுக்கு இது யோகமான காலமாக இருக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த வளர்ச்சி உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும் மாணவர்களின் மேற்கல்வி முயற்சி நிறைவேறும். மொத்தத்தில் இக்காலம் உங்களுக்கு யோககாலமாகும்.
பரிகாரம்
ஒருமுறை காளஹஸ்திக்கு சென்று ராகு கேதுவிற்கு பரிகார பூஜை செய்துவிட்டு வருவதுடன், வியாழக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு முல்லை மலர் சார்த்தி வழிபட வாழ்க்கை வளமாகும்.
திருக்கோவிலூர் பரணிதரன்-9444 393 717