குருப்பெயர்ச்சி 2024 : கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மைகளை உண்டாக்கும்! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி

கும்பம்
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும்; ஜென்மராசி எதுவென்று தெரியாத மாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும்; கு, கெ, கோ, ஸ, ஸீ, ஸூ, ஸே, ஸோ, த … ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.ராசியின் அதிபதி: சனி. நட்சத்திர அதிபதிகள்: செவ்வாய், ராகு, குரு. யோகாதிபதி: குரு, புதன், சுக்கிரன். மாரகாதிபதி: செவ்வாய் புதன்.

குலம் காக்கும் கும்ப ராசி
ஆயுள்காரகன், கர்மக்காரனான சனிபகவானின் அம்சத்தில் பிறந்து, உங்கள் மனதில் இருப்பதை எந்த நிலையிலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அடுத்தவர் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு, நேர்மைக்காக வாழ்ந்து வருவதுபோல் வெளிக்காட்டிக் கொள்ளும் கும்பராசி நண்பர்களே!

நீங்கள் எப்போதும் அமைதியாக இருப்பதால் உங்களை பரமசாது என்று எண்ணிவிடமுடியாது. உங்கள் வாழ்க்கையில் அபாயகரமான பலவற்றை எதிர்கொண்டு துணிச்சலாக வெற்றிநடை போடக்கூடியவர்களாக இருப்பீர்கள். உங்களால் பல நிகழ்வுகளை உருவாக்கிட முடியும். எத்தகைய எதிர்ப்பையும் எதிர்கொண்டு உங்களால் வெற்றிபெற முடியும்.

சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து நேர்மையாக வாழ நீங்கள் முயற்சித்தாலும் சில நேரங்களில் தடம்புரண்டு விடுவீர்கள். உங்களைக் காப்பாற்றிக்கொள்வதில் உஷார் பேர்வழியான நீங்கள் உங்கள் எண்ணங்களை செயலாக்க என்னவழி என்று எப்போதும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். குடும்பப்பெருமையாளும், குலப்பெருமையாளும் சிறப்படையும் நீங்கள், ஒரு செயலை செய்வதற்கு முன்னால் ஏன் செய்கிறோம்? எதற்காக செய்கிறோம்? என்று யோசிப்பீர்கள். சுய கௌரவத்தை பெரிதாக என்னும் நீங்கள் அதற்கு இழுக்கு ஏற்படும் இடத்தில் காலை வைக்க மாட்டீர்கள்.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள் நீங்கள். எந்தத்தொழிலைச் செய்தாலும் அதை நுணுக்கமாக அறிந்துவைத்து செயல்படுவீர்கள். யாரேனும் ஒரு பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துவிட்டால் அதை முடித்துக் கொடுக்காமல் உங்களுக்கு தூக்கமே வராது. புகழ் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் நீங்கள், அறிமுகம் இல்லாதவர்களிடம்கூட நெருங்கிப்பழகி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள்.

உங்கள் களத்திர ஸ்தானாதிபதியாக விளங்கும் சூரிய பகவான் உங்கள் ராசிநாதனுக்கு பகைவர் என்பதால் பொருத்தம் பார்த்து துணையைத் தேர்ந்தெடுத்தால்தான் உங்கள் மண வாழ்க்கை இனிக்கும்.வரவறிந்து செலவு செய்யும் உங்களுக்கு பிற்காலம் யோகக் காலமாக அமைய வாய்ப்பில்லை என்பதால் இளமையிலேயே சேமிப்பு அவசியம்.வெளி உலகில் புகழோடும் பெருமையோடும் வாழக்கூடிய உங்களுக்கு வீட்டிற்குள் நிம்மதி என்பது நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் இருக்காது.

உண்மைப்பேசுவதையே குறிக்கோளாகக் கொண்ட உங்களின் பேச்சிற்கு எப்போதும் எல்லா இடத்திலும் மதிப்பிருக்கும். உங்கள் சொந்த முயற்சியில் முன்னேற்றம் காணும் நீங்கள் ஆடம்பரமாக வாழ்வதற்காக வீடு, மனை, வாகனம் என்று தேடிக்கொள்வீர்கள். இருந்த இடத்திலேயே தொழிலை அமைத்துக் கொண்டு வெற்றிகாணும் நீங்கள் மற்றவர்களை எளிதில் திருத்தக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள் என்றே சொல்லலாம்.

உங்களிடம் உள்ள ஒரே குறை என்னவென்றால் எவ்வளவு பெரிய பதவியும், பொறுப்பும் இருந்தாலும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறிந்து விடுவீர்கள். அதேபோல் எத்தனைப்பெரிய நண்பர்களாக இருந்தாலும் உங்களுக்குப் பிடிக்காத செயல்களில் அவர்கள் ஈடுபட்டால் அவர்களையும் துச்சமாக நினைத்துத் தூக்கி எறிந்து விடுவீர்கள்.

உங்கள் மனம் எப்போதும் தண்ணீர்க்குடம்போல் தளும்பிக் கொண்டிருக்கும். சிலர் நிறைகுடம்போல் எல்லாவற்றிலும் நிறைந்திருப்பீர்கள். சிலர் குறைகுடம் போலவும் இருப்பீர்கள். உங்களில் பெரும்பாலோர் சஞ்சல புத்திக்காரர்களாகவோ, எதையாவது நினைத்து கவலைப்படுகிறவர்களாகவோ, வாழ்க்கை முயற்சிக்கு உத்தேசம் இல்லாதவர்களாகவோ, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்களாகவோ இருப்பீர்கள். உங்களில் சிலருக்கு பரம்பரை சொத்துகள் இருப்பதும், பிள்ளைகள் அதிகம் பிறப்பதும் அபூர்வம் என்றே சொல்ல வேண்டும்.

மனவலிமை மிக்கவர்கள் நீங்கள் என்றே சொல்ல வேண்டும். எவ்வளவு இக்கட்டான நிலையிலும் எந்தவித முயற்சியும் இல்லாமல் அடிப்படை ஆதாரத்தை அடையும் ஆற்றல் உங்களுக்கு ஏற்படும். ஒருவரைப்பற்றி துல்லியமாக எடைபோடும் சக்தியும் உங்களுக்குண்டு. அவர் எதை மறைத்துப் பேசினாலும் நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள். எதையும் சிறப்பாகவும் சீராகவும் செய்ய வேண்டும், பலருக்குப் பயன்படும் விதத்தில் வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். எதிர்காலத்தின் மீது உங்கள் கவனம் செல்லும். அப்போது மற்றவர்களுக்கு நாம் எப்படி பயன்பட முடியுமென்பது குறித்தும் அதிகமாக சிந்திப்பீர்கள்.

உங்கள் மனதில் தன்னம்பிக்கையும் தணியாத வேட்கையும் இருக்கும். இன்றைய வாழ்க்கை உங்களுக்கு எவ்வளவு இக்கட்டாக இருந்தாலும் நீங்கள் எதற்காகவும் உங்களை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு நரம்பு தளர்ச்சியோ, உணர்ச்சிவசப்படும் தன்மையோ தோன்றும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மையாகும்.சகோதரர்களுடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக இருப்பதையே பெரிதும் விரும்புவீர்கள் என்றாலும், ஒரு சிலருக்கு அந்த விருப்பம் நிறைவேறாமலே போய் வாழ்க்கை வேறு கோணத்தில் போக ஆரம்பித்துவிடும்.

பெரும்பாலும் நீங்கள் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் உயர்வீர்கள். இருப்பு என்பது உங்களில் பலருக்கு இல்லாமல் போகும். உடலும் உள்ளமும் எப்போதும் வலிமையாக இருக்கும். வருமானம்தேடி வெளியூர்களுக்கோ, வெளிநாட்டிற்கோ செல்லக்கூடிய யோகம் உங்களில் பலருக்கு உண்டாகும். ஒரு சிலருக்கு அந்நியர் மூலமாகவே வருமானம் என்று சொல்லவேண்டும்.

உங்கள் கவர்ச்சியிலும் தோற்றத்திலும் உள்ள நம்பிக்கையினால் நீங்கள் எப்போதும் உற்சாகமாக இருப்பீர்கள். அந்த உற்சாகம் மிதமிஞ்சிப் போய்விடக்கூடாது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். அதேபோல் எந்த ஒரு செயலிலும் அவசரமும் ஆர்ப்பாட்டமும் கூடாது. நிதானத்துடனும் சகிப்புத்தன்மையுடனும் செயல்படுவதாலே உங்களுக்கு வெற்றி உண்டாகும்.

பந்தப்பாசங்களில் பற்றுள்ள நீங்கள் எந்த நேரத்திலும் எத்தகைய பிடிப்பான பற்றையும் உறவையும் உதறக் கூடியவராகவும் இருப்பீர்கள் மலருக்கு மலர்தாவும் எண்ணமும் அதற்குரிய வாய்ப்பும் உங்களுக்கேற்படும். அதனால் உங்கள் கடமைகளையும் மறந்து விடுவீர்கள். கடைசியில் ஒருவர்கூட உங்கள் மீது உண்மையான அன்பு கொண்டவராக இருக்க மாட்டார்கள். எனவே உங்களை நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள்.

இவையாவும் கும்ப ராசியில் பிறந்த உங்களுக்குண்டான பொதுப் பலன்களாகும். நீங்கள் கும்ப ராசியில் பிறந்திருந்தாலும், உங்கள் ஒவ்வொருவருக்கும் நட்சத்திரங்கள் வேறுபட்டிருக்கும். உங்கள் ராசிநாதனான சனி பகவானின் சஞ்சார நிலை வேறுபட்டிருக்கும். ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் கிரகங்கள் மாறுபட்டிருக்கும். லக்னங்களில் மாற்றம் இருக்கும். தசா புத்திகளில் வித்தியாசங்கள் இருக்கும். ஒருவருக்கு அமைந்திருப்பதுபோல் மற்றவர்களுக்கு கிரகங்கள் அமைந்திருக்காது என்பதால் ஜனன ஜாதகத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடும்.

இந்த நிலையில் தான் கோட்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து நமக்கு உண்டாகப்போகும் பலன்களை அறிந்து கொள்கிறோம். ஜாதக ரீதியாக பாதகமான நிலையில் உள்ளவர்களுக்கும், கோட்சாரப் பலன்களின் வழியே நன்மைகள் உண்டாகும் வாய்ப்புள்ளது. அந்த ரீதியில் சுப கிரகமான குரு பகவானின் பெயர்ச்சியை நாம் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்.

நலம் தருவாரா நான்காமிட குரு
கடந்த ஒரு வருடமாக உங்கள் ராசியான கும்ப ராசிக்கு தைரிய, சகோதர ஸ்தானம் என்னும் மூன்றாம் வீடான மேஷத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 1.5.2024 அன்று உங்கள் ராசிக்கு நான்காம் வீடான ரிஷப ராசியில் சஞ்சரித்து உங்களுக்குப் பலன்களை வழங்கிட உள்ளார்.

ஒரு வருடமாக உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டில் இருந்து உங்கள் தொழிலில் பின்னடைவையும், வேலையில் சிக்கலையும், வருமானத்தில் தடைகளையும், நட்பு வட்டாரத்தில் விரிசலையும், முயற்சிகளில் தோல்வியையும், மனக்குழப்பத்தையும் உண்டாக்கி இருப்பார். உங்களை ஊர்சுற்றித் திரிய வைத்ததுடன் அவமானத்திற்கும் ஆளாக்கி இருப்பார்.

இதுபற்றி ஒரு பழம் பாடலில் ‘தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்…’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.போனது சரி; நான்காம் இடத்திற்கு வரும் குரு பகவான் இக்காலத்திலாவது எங்களுக்கு நன்மைகள் செய்வாரா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.உங்கள் கேள்விக்கும் அதே பாடலில் பதில் இருக்கிறது. ‘தருமபுத்திரர் நாலிலே வனவாசம் போம்படி யானதும்…’ என்று கூறப்பட்டுள்ளது.

ஜென்ம ராசிக்கு நான்காம் இடத்தில் குரு பகவான் சஞ்சரித்தபோதுதான் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் பாஞ்சாலியுடனும், தன் தம்பிகளுடனும் அரசாட்சியையும் நாடு நகரங்களையும் இழந்து வனவாசம் போனாராம். நான்காம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் நிலைக்குறித்த பொதுவான பலன் இது. குருவைப் பொருத்தவரை மூன்றாம் இடமும், நான்காம் இடமும் நமக்கு பாதகமான இடங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். “அப்படி என்றால் இந்த வருடம் எப்படி?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இந்த நேரத்தில், உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால், தசாபுத்தி நன்றாக இருந்தால், இந்தப் பலனில் நிச்சயம் மாறுதல் இருக்கும். சரி; நான்காம் வீட்டிற்குவரும் குரு பகவான் என்னதான் செய்வார்? ஜாதகத்தில் நான்காம் இடம் என்பது சுகஸ்தானம், மாதுர் ஸ்தானம், வாகன ஸ்தானம், வித்யா ஸ்தானம் என்பதாகும் இந்த இடத்தைக் கொண்டுதான் உங்களின் சுக துக்கங்கள், உங்கள் தாயின் நிலை, வாகன யோகம் உள்ளதா இல்லையா என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.

கோட்சாரத்திற்கு நான்கில் வரும் குரு பகவான் தேவையில்லாத எண்ணங்களை உருவாக்குவார். நிறைவேறாத செயலில் முயற்சியை உண்டாக்கி மனதில் சஞ்சலத்தையும், அமைதியற்ற நிலையையும் உண்டாக்குவார். உடல் நலன் பாதிப்படையக்கூடும் என்பதால் சுகத்தின் மீதான நாட்டமும் போய்விடும். நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும்கூட பகைவர்களாகும் நிலை உருவாகும். இல்லையெனில் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டி வரலாம். அதனால், அவமானத்திற்கும் ஆளாக நேரலாம். காரணம், குரு பகவான் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திற்கு பாதகமான பலனையும், அவர் பார்க்கும் இடங்களுக்கு நற்பலன்களையும் வழங்கிடக்கூடியவர் என்பதுதான்.

நான்காம் இடத்தில் அமர்ந்து அந்த இடத்திற்குரிய பலனை எதிர்மறையாக வழங்கும் குரு பகவான் அங்கிருந்து அவருடைய 5, 7, 9 ம் பார்வைகளை உங்கள் ராசிக்கு 8, 10, 12 ம் வீடுகளின் மீது செலுத்திட இருக்கிறார் என்பதால், அந்த இடமெல்லாம் இக்காலத்தில் சிறப்படைய போகிறது. ஆம்; குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் பார்க்கும் இடங்கள் எல்லாம் செழிப்பாகும் என்பது விதி.

முதலில் தனது ஐந்தாம் பார்வையினால் உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான ஆயுள் ஸ்தானத்தைப் பார்க்கிறார். இதனால் உங்கள் ஆயுள் பலம் அடையும். தீராத வியாதிகளுக்கு ஆட்பட்டிருந்தால் அதில் இருந்து விடுதலைக் கிடைக்கும். பல்வேறு காரணங்களால் அவமானத்துடன் வாழ்ந்த நிலையில் இப்போது மாற்றம் உண்டாகும். தோல்விகளையே சந்தித்து வந்த நிலைமாறி வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலும் குடும்பமும் நிலைபெறும். இங்கும் அங்குமென்று அலைந்து திரிந்த நிலைமாறி ஒரே இடத்தில் இருந்து வெற்றி அடையக்கூடிய நிலை உண்டாகும். உங்கள் ஆரோக்கியம் முழுமையாக சீராகும் என்பதால் மற்ற அனைத்து பிரச்சினைகளையும் நீங்கள் சமாளிக்கக்கூடிய சக்தியைப் பெறுவீர்கள்.

அடுத்து, தனது ஏழாம் பார்வையினால் உங்கள் ராசிக்கு பத்தாமிடமான ஜீவன ஸ்தானத்தைப் பார்க்கிறார். அதனால், இதுவரை தேக்கமடைந்திருந்த உங்கள் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும். செயலிலும் வேகமும் விவேகமும் நிறைந்திருக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து ஒரு தெளிவான நிலை ஏற்படும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும்முயற்சி வெற்றியாகும். வருமானம் பல வழிகளிலும் வர ஆரம்பிக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு ஆர்டர் வரும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புகழும் கௌரவமும் உண்டாகும். ஒரு சிலருக்கு பொறுப்பும் பதவியும் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத்தரம் உயரும். நல்ல உடையுடன் ஆரோக்கியமான நிலையுடன் பளிச்சென்று தோன்றுவீர்கள். ருசியான உணவு நேரத்திற்கு கிடைக்கும் அரசாங்கத்தால் வெகுமதியும் மூத்தோரின் ஆதரவும் கிடைக்கும்.

அடுத்து, தனது ஒன்பதாம் பார்வையினால் உங்கள் ராசிக்கு 12 ம் இடமான விரய ஸ்தானத்தைப் பார்க்கிறார். அதனால், இனி; விரயம் எல்லாம் சுப விரயமாகப் போகிறது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறப்போகிறது. ஒரு சிலர் வெளிநாட்டிற்கும் பயணம் மேற்கொள்வீர்கள். கஷ்டங்கள் நஷ்டங்கள் ஏமாற்றங்கள் என்ற நிலை மாறி, அவற்றில் எல்லாம் இனி மாற்றங்களை சந்திக்கப்போகிறீர்கள். காணாமல்போன பொருள் திரும்ப வரும். கைவிட்டுப் போன சொத்து ஒரு சிலருக்கு மீண்டும் கைவசமாகும். மனைவி ஓரிடம் கணவன் ஓரிடம் என்று வாழ்ந்த நிலைமாறி இருவரும் ஒன்றாக, மகிழ்ச்சியாக வாழும் நிலை உண்டாகும். எதிர்பாலினரால் மகிழ்ச்சி அடையும் நிலையும் ஏற்படும். விரோதிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் இல்லாமல் போகும். என்பதால் நிம்மதியான உறக்கமும் இருக்கும்.

இவையாவும் குரு பகவானின் பார்வைகளால் உங்களுக்கு உண்டாகப் போகும் பலன்களாகும். ஒரு கதவு அடைக்கப்படும்போது மறு கதவு திறக்கும் என்பார்கள். குரு பகவான் அமரும் ஒரு இடத்திற்கு சங்கடமான பலன்கள் ஏற்பட்டாலும் அவர் பார்க்கும் மூன்று இடங்களுக்கும் நற்பலன்களை வழங்கிடக் கூடியவராக இருக்கிறார்.

பலன்களை மாற்றும் அஸ்தமன காலம்
குரு நான்காம் இடத்தில் சஞ்சரிப்பதால் நன்மைகள் வழங்க மாட்டார் என்று நினைப்பவர்களுக்கு ஆறுதலாக, 3.5.2024 முதல் 2.6.2024 வரை அவர் அஸ்தங்கம் அடைகிறார் என்பதால் நான்காம் இட குருவின் பலன்கள் உங்களுக்கு இக்காலத்தில் கிடைக்காமல் போகும். கடந்த கால நிலையே மீண்டும் தொடரும். உங்கள் சுய ஜாதகத்தில் திசா புத்தி சாதகமாக இருந்தால் அந்த நிலைக்கேற்ப யோகம் உண்டாகும். மற்ற கிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்ப சாதக பாதக நிலைகள் உண்டாகும். இக்காலத்தில் குரு பகவான் அஸ்தங்கம் அடைவதால் செயல்களில் கவனம் தேவை. அவசரப்பட்டு எந்த ஒரு முடிவிற்கும் வர வேண்டாம்.

வக்ர காலம் உங்களுக்கு வசந்த காலம்
குரு பகவானின் சஞ்சாரங்களில் அஸ்தமனமும், வக்ர நிலையும் ஏற்படுவதால் அக்காலங்களில் அவர் வழங்கும் பலன்களில் மாற்றும் உண்டாகும் 15.10.2024 முதல் 11.2.2025 வரை அவர் வக்ரம் அடைவது உங்களுக்கு நன்மைகளையே உண்டாக்கும். நான்காம் இடத்தில் இருந்து அவர் வழங்கிவரும் பலன்கள் இக்காலத்தில் மாறுபடும். பொதுவாக குரு பகவான் வக்ரமடையும் போது முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்கிடக் கூடியவர் என்பதால், இக்காலத்தில் கடந்த காலத்தில் உங்களுக்குண்டான யோக பலன்கள் மீண்டும் தொடரும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச்செல்வார்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உங்களுக்கு எதிராக செய்த சதிகள் முறியடிக்கப்படும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். லாபம் அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

ஜென்ம சனியால் ஜெயம் உண்டாகுமா?
குருபகவான் நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில், உங்கள் ராசிநாதன் சனி பகவான் ஜென்ம சனியாக உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கிறார் என்பதால், எந்த ஒன்றையும் துணிச்சலாக செய்திட முடியாத அளவிற்கு மனதில் குழப்பம் உண்டாகும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் ஒரு சங்கடம் இருந்து கொண்டே இருக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் பிரச்சினைகள் ஏற்படும். பணத்தட்டுப்பாடு அதிகமாகும். செயல்பட முடியாத அளவிற்கு சங்கடங்கள் உண்டாகும். நல்லமுறையில் பழகி வந்தவர்களும் உங்களை விட்டு விலகிச்செல்வார்கள். செய்துவரும் தொழில் பாதிப்படையும். அதனால் வருமானக்குறைவு ஏற்படும். கூட்டுத்தொழிலில் எதிர்பாராத நெருக்கடிகள் உண்டாகும். தம்பதிகளுக்குள் ஏதேனும் ஒரு பிரச்சினை உண்டாகிக்கொண்டே இருக்கும். கூட்டாளிகள் பிரிந்து சென்று தனித்து செயல்படுவார்கள். மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். அளவிற்கு மீறிய சங்கடங்களை அனுபவிக்க வேண்டியதாக இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் பகையாளியாக மாறுவார்கள். குடும்பத்தில் துக்ககரமான சம்பவங்கள் நிகழ்வதுடன் மனதில் மரண பயம் இருந்து வரும். மாணவர்களுக்கு கல்வியில் தடையும் மந்தமான நிலையும் ஏற்படும். பொன் பொருட்களில் குறைவு உண்டாகும். பொதுவில் ஜென்ம சனியானது உங்களை எழமுடியாத அளவிற்கு கட்டிப்போடும் என்றாலும், இது இரண்டாவது சுற்றாக இருந்தால் இந்த பாதிப்புகளில் மாறுதல் இருக்கும். சுய ஜாதகத்தில் திசாபுத்தி வலிமையாக இருந்தாலும் இப்பலன்கள் மாறுபடும்.

ராகு – கேது சஞ்சாரப் பலன்கள்
நான்காம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையில் தன,வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் ராகு சஞ்சரித்து வருகிறார். இரண்டாம் இட ராகுவால், பொருளாதார நிலையில் சங்கடங்கள் ஏற்படும். செய்துவரும் தொழிலில் நெருக்கடி உண்டாகும். வார்த்தைகளால் பிரச்சினைகள் உண்டாகும். அதனால், சுற்றி இருந்தவர்களே பகைவர்களாகும் நிலையும், விலகிச் செல்லும் சூழலும் உருவாகும். சொன்ன சொல்லை, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம், கருத்து வேறுபாடு, நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது போன்ற நிலை உருவாகும். கேது பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால், ஆரோக்கியத்தில் அடிக்கடி சங்கடம் உண்டாகும். இன்னதென்று கண்டுபிடிக்க முடியாத நோய்களுக்கும் ஆளாகலாம். ஆண்களுக்கு அந்தரங்க பிரச்சினைகள் உருவாகலாம். பெண்களுக்கு மாதவிலக்கில் பிரச்சினை, உதிரப்போக்கு, கர்ப்பப்பை கோளாறு என்ற சங்கடங்கள் தோன்றலாம். வீண் விவகாரங்கள் உண்டாகலாம் என்பதால் எந்த ஒன்றிலும் நிதானித்து செயல்பட வேண்டும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும், நாம் உண்டு நம் வேலை உண்டு என்றிருப்பதும் நன்மையாகும். இக்காலத்தில் உங்கள் தெய்வ நம்பிக்கையில் மாற்றம் உண்டாகலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் உங்கள் இறை நம்பிக்கையை குறைத்துக்கொள்ள வேண்டாம். தவறான நபர்கள் என்று தெரிந்தால் இக்காலத்தில் அவர்களை விட்டு அறவே ஒதுங்கி விடுங்கள். குறுக்கு வழியில் சென்று ஆதாயம் தேடுவதையும் நிறுத்துங்கள். அதனால் சங்கடங்களே உண்டாகும்.

சூரியனால் உண்டாகும் ராஜயோகம்
ஒவ்வொரு கிரகமும் தான் சஞ்சரிக்கும் நிலைக்கேற்ப, சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப பலன்களை வழங்குவது போல், சூரிய பகவானும் அவரவர் ராசிக்கு 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கின்ற போது ஜாதகருக்கு ராஜயோகத்தை உண்டாக்குவார். மற்ற கிரகங்களால் ஏற்படும் சங்கடங்களை எல்லாம் இல்லாமல் செய்வார். எதிர்மறையான பலன்களைக் கட்டுப்படுத்துவார். அக்காலங்களில் ஜாதகரின் செயல்களை எல்லாம் வெற்றியாக்குவார். அந்த வகையில் கும்ப ராசியினரான உங்களுக்கு, சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதங்களும் உங்களுக்கு அதிர்ஷ்ட மாதங்களாக இருக்கும். உங்கள் முயற்சிகள் எல்லாம் இந்த மாதங்களில் நிறைவேறும். செயல்கள் எல்லாம் லாபம் ஆகும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். அரசு வழியில் இருந்த தடைகள், பிரச்சினைகள் விலகும். உடல்நிலை முன்னேற்றமடையும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்குவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும்.

பொதுப்பலன்
நான்காம் வீட்டில் குரு பகவான் சஞ்சரிக்கும் இக்காலத்தில் அவருடைய பார்வைகள் உங்களுக்கு நன்மைகளை உண்டாக்கும் நீங்கள் செய்துவரும் தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும் பார்த்து வரும் வேலையில் இருந்த பிரச்சினைகள் விலகும். உங்கள் மீது இருந்த குற்றச்சாட்டுகள் இல்லையென்று மாறும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். செல்வாக்கும் புகழும் மீண்டும் உயரும். உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். நோய்நொடிகளில் இருந்து நிவாரணம் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். விளைச்சல் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு எதிர் பார்த்த ஒப்பந்தம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை உண்டாகும்.

பரிகாரம்
உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் ஒருமுறை திருநள்ளாறு சென்று தர்ப்பராண்யேஸ்வரரை அர்ச்சனை செய்து வழிபடுவதுடன், சனி பகவானுக்கு நல்லெண்ணை தானம் செய்து வழிபட நன்மையுண்டாகும். திருப்பராம்புரத்திற்கு சென்று ராகு கேதுவிற்கு பரிகாரம் செய்து கொள்வதும். திருக்கடையூரில் சிவபெருமானையும், அபிராமியையும் வழிபட்டுவர யாவும் நலமாகும்

Exit mobile version