பள்ளிகளில் சீருடைகள் இருப்பதை போல கல்லூரிகளில் பெரும்பாலும் சீருடைகள் இருப்பதில்லை. சில தொழில்கல்வி நிறுவனங்களில் மட்டும் சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. சீருடை இல்லாத போதிலும் நாகரிகமான ஆடைகள், மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் போன்றவற்றை சில கல்லூரிகள் அனுமதிப்பதில்லை. இருப்பினும் கல்லூரியில் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கிடையேயான ஆடை விவகாரம் ஒன்று தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் கோப்பா தாலுகாவில் பலகாடி அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்கனவே ஆடை விஷயம் தொடர்பாக பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருந்தது. இருப்பினும் அது பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யப்படது. தற்போது மீண்டும் அதே போல பிரச்னை உருவெடுத்துள்ளது.
இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் எனப்படும் முழு அளவில் உடலை மறைக்கும் ஆடையை அணிந்து வகுப்புகளில் கலந்து கொண்டு வந்துள்ளனர். சில தலையை மூடி அணியும் துணியையும் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் இந்த ஆடைகள் கல்லூரி விதிகளின்படி தடை செய்யப்பட்டது என கூறப்படுகிறது. இது குறித்து மாணவர்களின் புகாரை ஏற்று கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளுக்கு அறிவுறுத்தியதாகவும், இருப்பினும் அவர்கள் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த ஒரு தரப்பு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர், ஒரு தரப்பு மாணவர்களும், மாணவிகளும் நேற்று கல்லூரிக்கு காவித்துண்டு அணிந்து வருகை தந்தனர். மேலும் மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இது போல வந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட்டால் காவித்துண்டு அணியவும் அனுமதிக்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே, மாணவர்கள் ஜனவரி 10ம் தேதி வரை என்ன ஆடைகளை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளட்டும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விரைவில் பெற்றோர்கள், மாணவர்களை அழைத்து மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த விவகாரத்துக்கு சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும் என அவர்கள் விளக்கம் அளித்தனர்.
தகவல் :- நியூஸ் 18 தமிழ்நாடு