பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது “மக்களை சந்திப்பதற்கு கமல்ஹாசனுக்கு முகம் இல்லை. கடந்த சட்டசபை தேர்தலில் அவர் இங்கு போட்டியிட்டிருந்த நேரத்தில் கூட மக்கள் அணுக முடியாத நபராக இருந்தார்.அதற்கு சரியான பதிலை கோவை தெற்கு தொகுதி மக்கள் கொடுத்தனர். ‘கோவையில் மூக்கு உடைந்திருந்தாலும் நான் மீண்டும் இங்கு வருவேன்.’ என கமல் கூறியிருந்தார். நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தோம். அவர் இங்கு வராதது ஏமாற்றம் தான்.
தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க போகிறோம். பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம். முதல்வர் வேட்பாளர் என சொல்லிக் கொண்டிருந்த கமல்ஹாசன், தன் குறைந்த கால பயணத்தில் லஞ்சம், வாரிசு அரசியலுக்காக எந்தக் கட்சியை விமர்சனம் செய்தாரோ அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
நம்மை மக்கள் தோற்கடித்துவிட்டார்கள். எப்படியாவது எம்.பி. எம்.எல்.ஏ ஆகிவிட வேண்டும் என்ற அடிப்படையில் ராஜ்ய சபா கேட்டிருக்கலாம். வேட்பாளராகவே மக்களிடம் பேச முடியாதவர், பிரசாரத்துக்கு வந்து மக்களிடம் என்ன செய்யப்போகிறார்.
அந்தக் கூட்டணிக்கு என்ன பயன். தன்னுடைய அரசியல் ஆசைக்காக அந்தப் பதவியை எடுத்துக் கொள்கிறார். அவர் ஒரு நட்சத்திர பேச்சாளர். அந்தப் பதவிக்கு ராஜ்ய சபா கிடைக்கிறது அவ்வளவுதான். தெற்கு தொகுதியில் தோல்வியடைந்தாலும் இங்கு வந்து மக்கள் பணியாற்றி இருக்கலாம். இங்கு வருவதில் தயக்கம் இருந்திருக்கலாம். இப்போது அவரின் அரசியல் சாயம் வெளுத்துவிட்டது. விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும். நான் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும்.” என்றார்.