தக் லைஃப் படம் நேற்று அதாவது ஜூன் 5ஆம் தேதி வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் குறித்து தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வந்தார்கள். அதில் பெரும்பான்மையாக இருந்தது, மணிரத்னத்திடம் இப்படி ஒரு சொதப்பலான படத்தை எதிர்பார்க்கவில்லை, அதர பழசான கதை, சுவாரஸ்யமில்லாத திரைக்கதை என கடுமையாக சாடினார்கள். படம் ஆவரேஜான படமாகக் கூட இல்லை எனவும் விமர்சித்தார்கள். ஒருசிலரோ இது மணிரத்னத்தின் இந்தியன் 2 எனக் கூற, உடனே இணையத்தில் தக் லைஃப் படத்திற்கு இந்தியன் 2 படமே தேவலை என்று பதிவிட்டு வந்தார்கள்.
மேலும் சிலர் கமல்ஹாசன் கர்நாடகத்திடம் மன்னிப்பு கேட்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் எங்களிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள் என்று பதிவிட்டார்கள். இதையெல்லாம் பார்த்ததும், திரும்பும் திசையெல்லாம் படத்தை மோசமாக விமர்சிக்கிறார்களே இதெல்லாம் உண்மையா, அல்லது கமல்ஹாசன் மீது ஏதேனும் வன்மமா என்று தெரிந்து கொள்ள படத்திற்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
படம் பார்த்த பின்னர்தான் தெரிந்தது, படத்தில் ஒளிப்பதிவு, பின்னணி இசை, மேக்-அப், காஸ்ட்யூம் மற்றும் சண்டைக் காட்சிகளை தவிர மீதி அனைத்துமே சொதப்பல் தான். சொதப்பல் என்றால் மணிரத்னத்திற்கு சினிமா மறந்துவிட்டதா என யோசிக்க வைக்கும் அளவுக்கு சொதப்பல். அதேபோல் இந்த படத்தின் கதைக்களத்துக்கு கவித்துவமான வசனங்கள் தேவையில்லாத ஆணி. பொன்னியின் செல்வன் படத்திற்கும் இந்த படத்திற்கும் ஒரே நேரத்தில் வசனங்கள் எழுதியிருப்பார்கள் என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டியுள்ளது.
ஒரு படத்தோடு ரசிகர்கள் டிராவலாக வேண்டும் என்றால் கதைக்கு மையமாக இருக்கும் கதாபாத்திரம் மிகவும் வலிமையாகவும் ரசனை மிக்கதாகவும் உருவாக்கப்பட வேண்டும். மையக் கதாபாத்திரமாக உள்ள சிம்பு மற்றும் கமல்ஹாசன் கதாபாத்திரங்கள் கொஞ்சம் கூட ஒட்டவில்லை. படத்தில் அதிகப்படியான ஸ்டார் பட்டாளங்கள் நடித்துள்ளார்கள். ஆனால் அவர்களில் பல கதாபாத்திரங்கள் கதைக்கு தேவையில்லாத ஆணிகள்.
தேவையில்லாத ஆணிகள்: குறிப்பாக ஜோஜு ஜார்ஜ், பக்ஸ், அபிராமி த்ரிஷா, டெல்லியில் காட்டப்படும் கேங்ஸ்டர் குரூப் போன்றவை சொதப்பலோ சொதப்பல். த்ரிஷா கதாபாத்திரம் படத்தின் திரைக்கதை நகர்வுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. த்ரிஷாவை செட் பிராப்பர்ட்டி போல கமல் மற்றும் சிம்பு பயன்படுத்துகிறார்கள். த்ரிஷா கொலை செய்யப்படும் போது, எந்த தாக்கமும் கதையில் ஏற்படவில்லை. கமல்ஹாசனுக்கு அண்ணனாக வரும் நாசர் கமல் மீது இருக்கும் வன்மத்தை கொட்டுகிறேன் என சுவாரஸ்யமே இல்லாமல் நம்மை பழிவாங்குகிறார்.
மையக் கதாபாத்திரமாக அதுவும் ஒரு பெரிய கேங்ஸ்டராக உருவெடுத்து நிற்கும் சிம்புவை மிகவும் சுலபாமாக எடுப்பார் கைப்பிள்ளை போல மாற்ற முடியும் என திரைக்கதை அமைத்தது எல்லாம், கொஞ்சம் கூட ஒட்டாத காட்சிகளாக இருந்தது. எதார்த்தத்தை விட்டு விலகாமல் கூடுமானவரை படம் எடுத்துக் கொண்டிருந்த மணிரத்னம் இந்த படத்தில் அதையும் பிரேக் செய்துவிட்டார். இடைவேளை காட்சிக்குப் பிறகு, இரண்டு தோட்டாக்களை உடம்பில் வாங்கிக் கொண்டு கமல்ஹாசன் இமயமலை பனியில் உயிர் பிழைத்த கமல், சரிந்து வரும் பனியில் இருந்து தப்பிக்க சிறுத்தை போல ஓடுவது எல்லாம், மணி சார் இது நிஜமாவே உங்க படமா என கேட்க வைக்கிறது.
கமல்ஹாசன் மனைவி மற்றும் மனதுக்கு நெருக்கமான பெண்ணின் மீதும் ஒரே அளவில் காதல் புரிவது, கண்ணீர் சிந்துவது எல்லாம் வொஸ்ட் சீன்கள் என்றுதான் யோசிக்க வைக்கிறது. படத்தில் த்ரிஷா கதாபாத்திரத்தை அடுத்து தேவையில்லாத ஆணி என்றால் அசோக் செல்வன் கதாபாத்திரத்தை கூறலாம். அவருக்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசம் அவர் ஸ்க்ரீனுக்கு உள்ளே இருந்து வேடிக்கை பார்த்துள்ளார், ரசிகர்கள் தியேட்டரில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பது மட்டும்தான். படத்தில் சிம்பு மற்றும் கமல்ஹாசனைத் தவிர மீதி அனைவருமே தேவையில்லாத ஆணிகளாகத்தான் உள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் இப்படியான படத்தைக் கொடுக்க மணிரத்னம் தேவையில்லை என்பதால் அவரே தேவையில்லாத ஆணிதான் என்று சொல்ல வைத்துவிட்டார் மணிரத்னம்