கங்கை கரை போலவே அறிவும் கலையும் நிரம்பிய இடமாக அரேபியா இருந்ததா.

உலகில் கங்கை கரை போலவே அறிவும் கலையும் நிரம்பிய இடமாக அரேபியா இருந்தது, அதுவும் அந்த மெசபடோபிய நாகரீகமும் சுமேரிய நாகரீகமும் மாபெரும் முன்னோடிகள் கலை அங்குதான் வளர்ந்தது, காதல் வளர்ந்தது, இலக்கியம் வளர்ந்தது, கட்டடகலை வளர்ந்தது.

அன்றே தொங்கும் தோட்டம் முதல் பல அங்கு இருந்தது, “ஆயிரம் அரபு இரவுகள்” முதல் சிந்துபாத் கதைகள், இன்னும் அழியா காவியங்கள் என பல மலர்ந்தன‌ பின்னாளில் எல்லாம் மாறிற்று , அந்த அறிவுடை சமூகத்தின் அழிவினை அலெக்ஸாண்டர் தொடங்கி வைத்தான்.

அவன் அடித்து நொறுக்கிய வீழ்ச்சியே அரபு உலகின் முதல் வீழ்ச்சி அவன் ஆட்சி சுமார் 200 ஆண்டுகாலம் நீடித்தபொழுதுதான் அரேபியா தடுமாறி போனது, முதன் முதலாக அவர்கள் தடுமாறினர்.

அதன்பின் ரோமர் இன்னும் குலைத்து போட்டனர் தன் பெருமை எல்லாம் இழந்து தன் வரலாறும் பெருமையும் தெரியாமல் மிகபெரும் குழப்பத்திலும் ஒற்றுமையின்மையிலும் அவர்கள் சிதறி கிடந்தனர், உருப்படியாய் ஏதுமில்லை.

ரோமரின் தொடர்ச்சியாக கிறிஸ்தவம் மேற்கே எழும்பி துருக்கி வழியாக இங்கு பாய்ந்து மதமாற்றம் ஒருபக்கம் நடந்தது.

அன்று யூதர்கள் மேற்காசியாவிலும் அரேபியாவிலும் வலுவாக இருந்தார்கள், பணமும் செழுமையும் அவர்களிடம் குடிகொண்டிருந்தன, ஆனால் அரேபியர்களை அவர்கள் ஒரு காலமும் அணைக்கவில்லை.

புற இனத்தவர், சாபமிக்கவர்கள், அறிவில்லாதவர்கள் என தள்ளியே வைத்திருந்தனர் அம்மக்களை ஒருங்கிணைக்கவோ அந்த மூர்க்கமான சமூகத்தில் அமைதி கொண்டுவரவும் யாருமில்லை இந்த மகா குழப்பத்தில் அரேபியா சிக்கியபொழுதுதான், இயேசுவுக்கு பின் 600 ஆண்டுகள் கழித்துத்தான் அந்த அவதாரம் இதே நாளில் வந்தது.

ஆம்,றைவனின் தூதனாக நபிபெருமான் அவதரித்தார், நிச்சயமாக அவர் அறிவிக்கபட்டு இந்த உலகிற்கு கொடுக்கபட்டவர் அவர் இளமையிலே தனக்கான பாதையினை தேர்ந்தெடுத்தார், இறைவனின் கரம் அவரோடே இருந்தது.

அந்த சமூகத்தின் தனக்கான தூயபாதையினை தேர்ந்தெடுத்தார், அவரே முதலில் அதில் நடந்தார், பின் அவரை அடியொற்றி பலர் நடந்தனர். முதலில் அவரை விரட்டினாலும் பின் சமூகம் அவரை ஏற்றுகொண்டது.

அவர் பின் அணிதிரண்டது, அந்த மக்களுக்கு நல்வழியினை போதித்தார், அம்மக்கள் அவரை கடவுளின் தூதராக எண்ணி அவருக்கு அஞ்சி நடந்தனர்.

அரபு வரலாறு மட்டுமல்ல, உலக வரலாற்றிலே மிக முக்கியமான பிறப்பு அவர் ,அவரிடம் மிக மிக நல்ல விஷயம் ஒன்று உண்டு, எந்த மதத்தையும் அவர் வெறுக்கவில்லை.

யூதம் கிறிஸ்தவம் என எல்லாமதத்தின் கொள்கைகளையும் ஏற்றுகொண்டுதான் மார்க்கத்தை உருவாக்கினார்,

யூதர்கள் அவரை விரட்டினார்களே ஒழிய அவர் யூதர்களை வெறுக்கவில்லை, மாறாக கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் யூதர்களுக்கு மட்டுமல்ல என்பதில்தான் அவர் யூதர்களால் ஒரு மாதிரியாக பார்க்கபட்டார்.

அவரின் ஆட்சியில் கிறிஸ்தவர்களும் யூதர்களும் பாதுகாப்பாக இருந்தனர் என்பதும், இன்று கிறிஸ்தவ யூத ஆட்சியில் இஸ்லாமியருக்கு பாதுகாப்பு இல்லை என்பதில் தெரிகின்றது நபிகளாரின் மகத்துவம்.

ஆம், உண்மையிலே அவர் இறைவனின் தனி அருள் பெற்றவராக இருந்தார் நிச்சயமாக சொல்லலாம், இவ்வுலகிற்கு மிக தேவையான , மானிடம் மானிடமாக வாழும் கருத்தைத்தான் அவர் சொன்னார், அதில் சில சர்ச்சைகள் வருமாயின் அது அவர் பின்னால் வந்தவர்கள் உருவாக்கிகொண்டதே தவிர நபிபெருமான் சொன்னது அல்ல‌ இந்த ஆப்கனின் தாலிபான்கள், சிரியாவின் ஐ.எஸ் எல்லாம் நபிபெருமான் சொன்ன புனிதமான இஸ்லாமை பின்பற்றுபவர்களே அல்ல, அவர்கள் சைத்தான்கள்.

இந்த உலகின் பெரும் மாறுதல்களை கொண்டுவந்தவரகள் என்ற வரிசையில் நபிபெருமானுக்கு நிச்சயம் பெரும் இடம் உண்டு, அரபிய பகுதியின் தலைவிதியினையே மாற்றியவர் அவர் ஒரு விஷயத்தில் அவரின் தீர்க்கதரிசனம் மிக சரி, தனக்கு பின் தன் பிறந்த வீடு வாழ்ந்த வீடு உட்பட எல்லா அடையாளத்தையும் இடித்துவிட சொன்னார். அவற்றால் பிற்காலத்தில் சர்ச்சை வரும் என நம்பியிருகின்றார்.

அதனால்தான் அந்த பெருமகனுக்கு கல்லறை தவிர அடையாளமில்லை, அங்கும் வழிபட முடியா அளவு கட்டுப்பாடுகள் உண்டு அவரின் அந்த தீர்க்கதரிசனத்தாலே அரேபியாவில் ப்ல சிக்கல் இல்லை, நபி பெருமான் அந்த ஏற்பாட்டை செய்திராவிடால் இன்று பெரும் சிக்கல் வெடித்திருக்கலாம் நிச்சயம் அவர் கடவுளின் தூதனாயிருந்தார்.

அவர் மிக சரியான மக்கள் சமூக‌ மருத்துவர், ஆனால் பின்னாளில் சிலர் அவர் வழியில் வந்து குழப்பியிருக்கலாம், அது அவரின் தவறல்ல மருத்துவத்தை சரியாக பயிலாதோர் தவறு.

கடவுளின் கடைசி தூதராக வந்து வாழ்ந்து போதித்த நபிபெருமானுக்கு பிறந்த நாளாக மிலாது நபி கொண்டாடபடுகின்றது மிலாது என்றால் பிறப்பு என பொருள், நபி பிறந்த நாள் அது கிறிஸ்மஸ் போலவே மிலாது நபி கட்டாயம் கொண்டாட வேண்டிய பண்டிகை அல்ல, கிறிஸ்துவும் நபியும் தங்கள் பிறந்தாளை கொண்டாட சொல்லவே இல்லை .

ஆனால் நல்லவர்கள் பிறந்தநாளை கொண்டாடாவிட்டால் என்ன நன்றிகடன் என்ற வகையில் உலகம் கொண்டாடுகின்றது மனிதனை மனிதனாக நேசித்த, கடவுளின் பால் மக்கள் மனதை திருப்ப உழைத்த, இந்த உலகம் மிக அமைதியாக வாழ பல உன்னத கருத்துக்களை சொல்லிவிட்டு சென்ற அந்த மாமனிதனின் பிறந்தநாளை இஸ்லாமிய பெருமக்கள் மட்டுமல்ல‌ சமத்துவத்தையும், சம தர்மத்தையும் விரும்பும் எல்லோரும் கொண்டாடலாம் நபிகள் நாயகம் அரேபியாவினை மட்டும் காத்தார் என்பதும் இந்தியாவுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்பதும் சரியானதல்ல‌ உண்மையில் நபிகளார் உதித்ததில் பெரும் நன்மைகளை இந்தியாவும் பெற்று கொண்டது

ஆம், வரலாற்றை புரட்டுங்கள் உங்களுக்கு உண்மை விளங்கும், நபிகளார் அந்த பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியிராவிட்டால் கிறிஸ்தவம் சுமார் கிபி 800 ஆண்டுக்குள்ளாகவே நிலம் வழியாக இந்தியாவினை விழுங்கியிருக்கும்

ரோமருக்கு பின் போப்புகளுக்கும் அந்த ஆசை இருந்தது பட்டுசாலை வழியாக ஊடுருவி இந்தியாவினை பிடிக்கும் திட்டம் ஐரோப்பியருக்கு இருந்தது அப்படி நடந்திருந்தால் இந்நேரம் இந்தியாவில் இந்துமதமே துடைத்தொழிக்கபட்டிருக்கும்.

அந்த ஆபத்தை முகமது நபி தொடங்கி வைத்த அரசு காத்தது, பின் கலீபாக்கள் காத்தனர், பின் அந்த துருக்கி ஆட்டோமன் சாம்ராஜ்யம் காத்தது இதனாலே இந்தியாவில் பின்னாளில் வந்த வெள்ளையர்கள் வெகு வீரியம் காட்டாமல் அடக்கியே வாசித்து அப்படியே கிளம்பியும் போனான் இல்லாவிடில் இந்தியாவில் சைவம் துடைத்தொழிக்கபட்டிருக்கும்.

இந்துமதம் என்பது மானிட சக்தியினை கடந்த ஒரு சக்தியால் வழிநடத்தபடும் தர்மம். பவுத்தமும் சமணமும் அதை எதிர்த்து எழும்பின அழிந்தன‌ அலெக்ஸாண்டர் இங்கு நுழைய முடியாமலே திரும்பினான் அசோகர் காலத்தில் எழும்பிய பவுத்தம் போராடி தோற்றது ஆப்கானியர் காலத்தில் நுழைந்த இஸ்லாமை நோக்கி இந்து தர்மம் சிரித்தது காரணம் அன்று மாபெரும் ஆபத்தாக செங்கிஸ்கான் எழும்பியிருந்தான்

இங்கு ஆப்கன் ராஜ்யம் வலுவாக இருக்கவே அவன் அரேபியாவில் பாய்ந்தான் பின் அவனின் வசமான தைமூரும் பாபரும் இந்தியா வந்து ஆண்டனர், அவர்களை வெள்ளையன் வந்துவிரட்டினான்.

வெள்ளையனை பிரிந்த இந்து இந்தியா விரட்டி தன் தர்மத்தை காத்து கொண்டு இன்று எல்லாவற்றையும் மீட்டெடுத்து கொண்டிருக்கின்றது

இந்த உலகில் நடக்கும் அரசு, மதம்,ஆட்சி என எல்லாவற்றையும் கவனித்து கொண்டே இருங்கள் அதெல்லாம் இந்து தர்மத்தை காக்க நடக்கும் காட்சிகளாகவே தெரியும்.

ஆம் அரேபியாவில் இஸ்லாம் எழும்பியதும் கிறிஸ்தவத்திடமும் ரோமரிடம் ஐரோப்பியரிடம் இருந்து இந்தியாவினை காக்க உதவிற்று இதை கவனமாக படியுங்கள் புரியும் “உங்கள் வழி உங்களுக்கு, எங்கள் வழி எங்களுக்கு” என கண்ணியம் காத்து நின்ற அந்த உன்னதமான இறைதூதருக்கு பிறந்த நாள் இஸ்லாமிய அன்பர்கள் அனைவருக்கும் மிலாதுன் நபி வாழ்த்துக்கள்.

பாலஸ்தீன சிங்கம் அராபத்தும், மாவீரன் சதாம் உசேனும் சொன்ன வாக்கியங்களை இங்கே நினைவுபடுத்த வேண்டும், ஒவ்வொரு இந்தியனும் அதை உணர்தல் வேண்டும் சதாம் இப்படி சொன்னார் “உண்மையில் அரேபியர் இந்தியா வந்து ஆள நினைக்கவில்லை, இஸ்லாமினை வாள்முனையில் பரப்ப நினைக்கவுமில்லை.

வரலாற்றில் நிகழ்ந்த மிகபெரும் விஷயம் செங்கிஸ்கான் எனும் மங்கோலியனின் காலம், அவன் காலம் மிகபெரும் கலப்பினங்களை உருவாக்கியது. ஆப்கன் , உஸ்பெக் என மங்கோலிய வாரிசுகள் வந்தன, அவர்களின் ஆக்ரோஷமும் நாடுபிடிக்கும் வெறியும் அவர்களுக்கு அப்படியே வந்தன‌ அவ்வம்சாவளிதான் தைமூர் பாபர் வகையறாக்கள், இங்கு ஆப்கானிய வம்சங்களே பல சிக்கல்களை தோற்றுவித்தன, அவை கலப்பு இனமாகவும் இருந்தது

மற்றபடி அராபிய இஸ்லாமியருக்கும் இந்தியாவுக்கும் எந்நாளும் நல்லுறவே இருந்தது” இந்த புரிதலில் பாருங்கள் பல உண்மைகள் தெரியவரும், நபிபெருமானின் மிக உன்னதமான வழிகளும் தெரியவரும்.

ஒரு ஞானி வரலாற்றை மாற்றுவான், அதுவும் இறைவனில் கலந்த ஞானி தன் இனத்தையே மாற்றி காட்டுவான் என்பதற்கு நபிகளார் எக்காலமும் மிகபெரும் உதாரணம் ஆம் வீரர்களும், புஜபலபராக்கிரம சாலிகளும் உலகில் எதுவும் செய்யமுடியாது, செய்தாலும் நிலைக்காது,, இறைவனில் கலந்த ஞானி ஒருவனுக்கு வரும் சமூக அக்கறையே இங்கு காலத்தை கடந்து அழியாமல் நிற்கும்.

Exit mobile version