புதுடில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் ந்து நாட்கள் நடந்த தொடர் ஆலோசனைக்கு பின், முதல் கட்டமாக, 189 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர்கள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டனர். இதில், 52 புது முகங்களுக்கும், எட்டு பெண்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. சீனியர்கள் சிலருக்கு, ‘கல்தா’ கொடுக்கப்பட்டுள்ளது.முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகாவியிலும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஷிகாரிபுராவிலும் போட்டியிடுகின்றனர். மாநில காங்., தலைவர் சிவகுமாருக்கு எதிராக அமைச்சர் அசோக், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு எதிராக அமைச்சர் சோமண்ணா ஆகியோர், இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு ம.ஜ.த., சார்பில் 93 தொகுதிகளுக்கும்; காங்கிரஸ் சார்பில் 166 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். உட்கட்சி குழப்பத்தால், இரு கட்சிகளும் சில தொகுதிகளுக்கு இன்னமும் வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை.பா.ஜ., சார்பில் வேட்பாளர்களை இறுதி செய்யும் கூட்டம், டில்லியில் நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தது. முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ் ஆகியோர் தனித்தனியாக கொண்டு வந்த பட்டியல் ஒத்துப்போகவில்லை.
இதனால், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், அருணாச்சல பிரதேச சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாலை டில்லி திரும்பினார்.அதன்பின், தேசிய தலைவர் நட்டா வீட்டில், அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், மன்சுக் மாண்டவியா, பிரஹலாத் ஜோஷி, மேலிட பொறுப்பாளர் அருண்சிங், தேர்தல் இணை பொறுப்பாளர் அண்ணாமலை உட்பட மூத்த தலைவர்கள் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தி, பட்டியல் தயாரித்தனர்.
பின், பா.ஜ., தலைமை அலுவலகத்தில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மேலிட பொறுப்பாளர் அருண்சிங் ஆகியோர் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இரவு 9:00 மணிக்கு வெளியிட்டனர்.பா.ஜ., வேட்பாளர்களில், 32 ஓ.பி.சி., 30 எஸ்.சி., 16 எஸ்.டி., 9 டாக்டர்கள், 31 முதுகலை பட்டதாரிகள், 5 வழக்கறிஞர்கள், தலா ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 3 முன்னாள் அரசு அதிகாரிகள், 8 சமூக சேவகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மாநிலத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், 189 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இம்முறை, 52 புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், எட்டு பெண்களும் அடக்கம்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















