திருவண்ணாமலை கிரிவல பாதை அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து, திருவண்ணாமலையை சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 சதுர அடி நிலத்தை வாங்கி, அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து சிலை அமைக்கப்பட உள்ளதாகவும், கிரிவல பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர் எனவும், அப்பகுதியில் கால்வாய் அமைந்துள்ளதால், அங்கு கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் நிர்வகிக்கும் ஜீவா கல்வி அறக்கட்டளைக்கு விற்கப்பட்டு, 215 சதுர அடி என பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், வருவாய் துறையினர், அமைச்சர் வேலு, அவரது மகன் குமரன் ஆகியோர் கூட்டு சேர்ந்து முறைகேடாக பட்டா வாங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தும், வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்தும் அறிக்கை தாக்கல் செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதுவரை சிலை அமைக்கும் விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோரின் அறிக்கை பெற வேண்டியுள்ளதாலும், ஆக்கிரமிப்பு புகார் குறித்து புதிய தகவல்களை பெற வேண்டியுள்ளதாலும் அவகாசம் வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் இந்த மனு குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஆதாரங்களை சேகரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். அதுவரை, குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
நன்றி ABP நாடு.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















