கேரளாவில் பெய்து வரும் கடும் மழையினால் பெட்டி முடி தேயிலை தோட்ட தமிழ் தொழிலாளிகள் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஏராளமான வீடுகள் தரைமட்டமாகி உள்ளன. மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கு கூட முடியாத நிலையில் நிலைமை உள்ளது.இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கடந்த ஆண்டு கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்திலுள்ள புதுமலை மற்றும் மேப்பாடி எஸ்டேட்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 40க்கு மேற்பட்ட அப்பாவிகள் பலியான வடுக்கள் மறையும் முன்பே…
இன்று (07.08.2020) காலை 3 மணி அளவில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில், உலகச் சுற்றுலா பயணிகளை தன்வசம் ஈர்க்கும், இரவிகுளம் தேசிய பூங்கா அருகே உள்ள பெட்டிமுடி எஸ்டேட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 60-க்கும் மேற்பட்ட தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் பலியாகியிருக்கிறார்கள்.
டாடா நிறுவனத்தக்கு சொந்தமான (kannan Devan hills plantations) தேயிலைத் தோட்டம் இரவிக்குளம் தேசிய பூங்கா அருகே உள்ள பெட்டி முடியில் அமைந்துள்ளது. இங்கு 4 லயன்ஸ் (காலனி) வீடுகள் உள்ளன.1850 காலகட்டங்களில் பிரிட்டிஷ் காரர்களால் கட்டப்பட்ட, இந்த லயன்ஸ் வீடுகள் கிட்டத்தட்ட 180 ஆண்டுகளாக எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன.இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்ள முடியாத பிரிட்டிஷ்காரன் காலத்து லயன்ஸ் வீடுகள், மற்றும் அதற்கு அருகாமையில் இருந்த தகரத்திலான தற்காலிக வீடுகள் என மூன்று வரிசை வீடுகள், இன்று காலை தங்களுடைய இறுதி பயணத்தை முடித்துக் கொண்டன.
தமிழ் தோட்டத் தொழிலாளிகளை காலங்காலமாக இழிநிலையில் வாழ வைத்து வரும் கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள், மறந்தும்கூட தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களுக்குள் நுழைவதில்லை.உலகத் தொழிலாளர்களுக்கு நீதிகேட்டு புறப்பட்ட மார்க்ஸ் பெருமகனாரின் வழி வந்ததாக கதை கூறும் பிணராயி விஜயன் அரசுக்கு, ஐந்து மாவட்ட சங்கத்தின் சார்பில் லயன்ஸ் வீடுகளை மாற்றித் தாருங்கள் என்று கடந்த ஆண்டுகூட கோரிக்கை வைத்தோம்.
வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடிக்கு ஏற்பட்ட கதி, தேவிகுளம் பீர்மேடு தாலுகா எஸ்டேட்களுக்கும் ஏற்படும் என்கிற எச்சரிக்கையை கடந்த ஆண்டு, முறையாக தேவிகுளம் சார் ஆட்சியருக்கு அனுப்பி வைத்தோம். வழக்கம்போல் குப்பைக் கூடைக்கு அந்த மனு போனதால் இன்று நிலைமை விபரீதமாகி இருக்கிறது.மூணாறில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் சாலையில் பத்தாவது கிலோ மீட்டரில் நம்மை எதிர்கொள்ளும், இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு அருகாமையில் இருக்கும் இந்தப் பெட்டி முடி எஸ்டேட் எந்தவித போக்குவரத்து வசதிகளும் இல்லை.மீட்புப் பணிக்காக மூணாறில் இருந்து பெட்டி முடிக்குச் செல்லும் பாதையிலுள்ள பெரியபாறை தரைப்பாலம், கடந்த ஆண்டுக்கு முந்தைய மழை வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்டது. இப்போதும் அது முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்பு வாகனங்கள், பெட்டி முடிக்கு செல்வது எளிதான காரியம் அல்ல.
இடுக்கி எஸ்.பி யாக கருப்பசாமி எனும் தமிழர், சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், மீட்பு பணிகளை துரிதப்படுத்துவார் என்று நம்புகிறோம்.லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி செய்துவரும் தேவிகுளம் தாலுகாவில் இன்றுவரை தொழிலாளிகளுக்கான ஈட்டுறுதி அரசு மருத்துவமனை (E S I) இல்லை என்பது வேதனையான ஒன்றுகூடுதலாக இந்த கொடிய நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அப்பாவி தமிழர்களுடைய உடல்களை, உடற்கூறு ஆய்வு செய்வதற்கு கூட, அடிமாலி நகருக்கு கொண்டு செல்ல வேண்டிய அவலம் நீடிக்கிறது.
ஏற்கனவே மூணாறு நகரில் இருந்த உடற்கூறு ஆய்வு மையம், தினசரி தன் வீட்டிற்கு செல்லும் வழியில் இருப்பதால், அதைக் கடந்து செல்ல முடியவில்லை என்று அடிமாலி நகருக்கு மாற்றியதும் மூணாறு அரசியல்வாதி ஒருவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.தொழிலாளர்களை காக்கப் போவதாக கதை விடக்கூடிய தோழர் பினராயி விஜயன் அவர்களேபலி எண்ணிக்கை 80 பேரை தாண்டலாம். அவர்களுடைய உடமைகளும் முற்றிலும் சேதம் அடைந்து இருக்கலாம்.
இந்த இக்கட்டான நேரத்தில், பேரிடர் காலத்தில் அரசியல் எதுவும் செய்யாமல் ஐந்து மாவட்ட சங்கத்தின் சார்பில் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை தயவு செய்து நிறைவேற்றி தாருங்கள்….மரணம் அடைந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் அரசின் சார்பில் 50 லட்ச ரூபாய் இழப்பீடும், டாடா குழுமத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போர்க்கால அடிப்படையில் தமிழ் தோட்டத் தொழிலாளிகள் தங்கி பணிபுரியும் அத்தனை லயன்ஸ் வீடுகளையும் இடித்து தள்ளிவிட்டு, நவீன தொழில்நுட்பத்தில் அவர்களுக்கு புதிய வீடுகளை கட்டித் தர வேண்டும்.நிலச்சரிவில் சிக்கி பலியான உடல்களை அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்து, அடக்கம் செய்வதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் நூறு மருத்துவர்கள் கொண்ட குழுவை உடனடியாக பெட்டி முடிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.பெருமழை இன்னும் நீடிக்கும் நிலையில், நோய் தொற்று பரவாமல் இருக்க தேவிகுளம் தாலுகா முழுவதையும், சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள தங்களுடைய சொந்த ஊர்களுக்கு உடல்களை கொண்டு செல்ல, இறந்தவர்களின் உறவினர்கள் விரும்பினால் அதற்கு சிறப்பு ஏற்பாடுகளை கேரள மாநில அரசு செய்து தர வேண்டும்.மேற்கு தொடர்ச்சி மலையை காப்பதற்காக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் நியமித்த காட்கில் கமிட்டி அறிக்கை மற்றும் கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கைகளை உடனடியாக இடுக்கி மாவட்டத்தில் அமல்படுத்துவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போர்க்கால அடிப்படையில், பெட்டிமுடியில் இரவும் பகலும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு,தகுந்த வசதிகளைச் செய்து தருவதற்கு இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.மத்திய பேரிடர் மீட்பு குழுவை உடனடியாக இடுக்கி மாவட்டத்திற்கு வரவைப்பதற்கு கேரள முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிலச்சரிவில் சிக்கி பலியான அத்தனை அப்பாவி தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் மற்றும் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கி கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் ச.அன்வர் கூறியுள்ளார்.