கிளாம்பாக்கம் வந்துருச்சு….அடுத்து குத்தம்பாக்கம் வருது.. இது எங்க இருக்கு.. இப்போவே தலையை சுற்றுதே..

Kuthambakkam Village in Tamil Nadu

Kuthambakkam Village in Tamil Nadu

தென் மாவட்ட ஊர்களுக்கு செல்வதற்காக திறக்கப்பட்டது. கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. போதிய வசதி இல்லை,போதுமான பேருந்துகள் இல்லை, சென்னையிலிருந்து 30 கிலோமீட்டருக்கு தள்ளி இருக்கும் இந்த பேருந்து நிலையத்தை அடைய பல மணிநேரம் ஆகிறது என தினம் தோறும் ஒரு பிரச்சனையை சந்தித்து வரும் நிலையில் அடுத்த பேருந்து நிலையத்தை திறப்பதற்கு மும்முரம் காட்டி வருகிறது தமிழக அரசு.

கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தைதொடர்ந்து குத்தம்பாக்கம் என்கிற இடத்தில் புதிய பேருந்து நிலையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்துநிலையம் எங்கே இருக்கிறது என சென்னைவாசிகள் கேட்டு வருகிறார்கள். பேருந்து நிலையம் அருகில் எதாவது லோக்கல் ரயில் நிலையம் எதாவது உள்ளதா இல்லை லோக்கல் பேருந்து நிலையம் உள்ளதா என ஆராய ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் செல்லும், என கேள்விகள் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் குத்தம்பாக்கம் பேருந்து நிலயத்திற்கு செல்ல புறநகர் ரயில் வசதியோ, மெட்ரோ வசதியோ இப்போது வரை இல்லை என குறிப்பிடத்தக்கது. மக்கள் இந்தப் பேருந்து முனையத்திற்குச் செல்ல வேண்டுமெனில் பேருந்தையோ அல்லது தனிப்பட்ட வாகனங்களையோதான் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை தான் உள்ளது

20 ஆண்டுகளைக் கடந்து கோயம்பேடு பேருந்துநிலையம் இயங்கி வந்தது. மேலும் சென்னையின் மைய பகுதியில் அமைந்துள்ளது. மேலும் கோயம்பட்டில் வேறொரு பெரிய திட்டம் வரவிருப்பதாக அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்தார்.

மேலும் கோயம்பேட்டிலிருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் கிளம்பும்போது நகருக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் புகார்களும் கிளம்பியிருந்தன. இந்நிலையில்தான் கோயம்பேடு பேருந்து முனையத்தில் மொத்தமாகக் குவியும் பேருந்துகளை நகரின் பல்வேறு எல்லைகளுக்கு பிரித்துவிடும் வகையில் பல்வேறு பகுதிகளில் பேருந்து முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே ஆந்திரா,தெலங்கானா மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாதவரம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் புதிதாகக் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் ஒன்று செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.

குத்தம்பாக்கத்தில் பேருந்து முனையம் கட்ட வேண்டும் என்கிற திட்டம் 2019 ஆம் ஆண்டே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. 336 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டு 2021 பிப்ரவரியில் வேலைகள் தொடங்கின. இடையிலேயே பட்ஜெட் கொஞ்சம் கூட்டப்பட்டு 396 கோடி ரூபாய் பட்ஜெட்டாக அறிவிக்கப்பட்டது.

எங்கே இருக்கிறது குத்தம்பாக்கம்?

கோயம்பேட்டிலிருந்து சரியாக 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது குத்தம்பாக்கம் பேருந்து முனையம். மதுரவாயிலைத் தாண்டி பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் ஈவிபி ஃபிலிம் சிட்டியும் ஈவிபி சினிமாஸூம் அமைந்திருக்கும். அதற்கு நேர் எதிரில் வீட்டு வசதி வாரியத்தின் திருமழிசை துணைக்கோள் நகரத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலத்தில்தான் இந்தப் பேருந்து முனையம் அமைந்திருக்கிறது.

எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் செல்லும்?

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என இப்போதைக்கு திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள்.

வருகிற டிசம்பருக்குள் வேலைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார். ஆனால், இந்த குத்தம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு செல்ல புறநகர் இரயில் வசதியோ மெட்ரோ வசதியோ இப்போது வரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் இந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டுமெனில் பேருந்தையோ அல்லது தனிப்பட்ட வாகனங்களையோதான் பயன்படுத்த வேண்டும்.

மாதவரம், கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து முடிச்சூரிலும் ஒரு ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கத்தில் மக்களுக்கு என்னென்ன மாதிரியான நடைமுறை சிக்கல்கள் இருக்கும் என்பதை அரசு அனுமானிக்கத் தவறியிருந்தது. அதனால் பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்து ஒன்றரை மாதத்தைக் கடந்தும் தினந்தோறும் மக்கள் எக்கச்சக்க சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.

குத்தம்பாக்கம் பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே மக்கள் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அனுமானித்து தீர்வுகளை தேடி தயாராக வைத்திருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருக்கிறது.

Exit mobile version