காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கு எதிராக யாரும் பேச முடியவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் கட்சிக்குத் தலைமையேற்று இருந்தபோது ஏதேனும் தவறு நடந்தால் அதுகுறித்து கேள்வி எழுப்ப தமக்கு சுதந்திரம் வழங்கப்பட்டு இருந்ததாக அவர் கூறியுள்ளார்.காங்கிரஸ் கட்சிக்கு முழுநேரத் தலைவர் தேவை என 23 மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களில் குலாம் நபி ஆசாத் முக்கியமானவர்.
அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு காங்கிரஸ் தலைமை அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. மேலும், கட்சியின் நிர்வாகக் குழுவில் இருந்தும் அண்மையில் நீக்கப்பட்டார்.ஆனால் இதுகுறித்து குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பாமல், காஷ்மீர் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேரணிகள், பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதையடுத்து அவர் புதுக்கட்சி தொடங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.
காங்கிரஸ் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், அண்மையில் கட்சியில் இருந்து விலகினார்.இதையடுத்து புதிய கட்சி தொடங்கிய அவர், அடுத்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறார். அவரது வழியை குலாம் நபி ஆசாத்தும் பின்பற்றுவார் எனக் கூறப்படுகிறது.
ஆனால் இது தவறான தகவல் என்று குறிப்பிட்டுள்ள குலாம் நபி ஆசாத், இப்போதைக்கு தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றார். மேலும், எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.