பா.ஜ.க. சார்பில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு பேசியதாவது:-
பல தடைகளை மீறி தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கோவிலுக்கு சொந்தமான 33 ஏக்கர் பரப்பளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு நிலத்தை கையகப்படுத்த உள்ளது.
இந்து கோவில் இந்துக்கள் என்றால் அரசுக்கு இளக்காரமா, மசூதி இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்த முடியுமா?
வீரசோழபுரம் கோவில் இடத்தின் அருகே ஒரு சென்ட் நிலம் ரூ.3 லட்சத்துக்கு விலை போகிறது. ஆனால் 33 ஏக்கர் நிலத்துக்கு வெறும் ரூ.1 கோடியே 98 லட்சம் மட்டும் விலை நிர்ணயித்துள்ளார்கள். ஏன் சர்ச் இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்டக் கூடாதா? 1967-ல் இருந்து தி.க., தி.மு.க.வில் இருந்து தீயசக்திகள் இதுபோல் இந்து கோவில் சொத்துக்களை கொள்ளை அடித்து வருகிறது. சாதி ரீதியான விடுதலை சிறுத்தை கட்சியை தடை செய்ய வேண்டும். இந்துக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க பா.ஜ.க. போராடும்.
பைபிளுக்கு எதிராக எழுத தைரியம் இல்லாத ஸ்டாலினும், திருமாவளவனும் இந்து மதத்தை பற்றி இழிவாக பேசிவருகிறார்கள். தமிழகத்தில் வருகிற 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழ்நிலை உருவாகும்.
திருச்செந்தூர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்வது போல் மக்களுக்கு தீங்கு செய்யும் கட்சியை அரசியல் ரீதியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது. பெண்களின் மானத்தை காப்பாற்ற மத்திய பா.ஜ.க. அரசு அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டிக்கொடுத்துள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள் அனைவரும் தாமரைக்கு ஓட்டு கேட்க வேண்டும். பெண்கள் சிரமப்படாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு பிரதமர் மோடி கியாஸ் அடுப்பு வழங்கியுள்ளார். கூட்டணி என்பது கட்சி வளர்ச்சிக்கு தடை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.