நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி ஆசிரமத்தில் புதிதாக கட்டப்பட்ட நூற்றாண்டு விழா கட்டிடத்தில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட காதி பவனை மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் 2024, செப்டம்பர் 01 அன்று திறந்துவைத்தார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் நிகழ்வுக்கு முன்னிலை வகித்தார். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, 20 கைவினைஞர்களுக்கு ஊதுபத்தி (அகர்பத்தி) தயாரிக்க தானியங்கி இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மேலும் கிராமத் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 20 பிளம்பர்கள், 20 எலக்ட்ரீஷியன்களுக்கு கருவிப் பெட்டிகள் வழங்கப்பட்டன.
விழாவில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன், உள்நாட்டு காதி தயாரிப்புகளை வாங்குவதன் மூலம் ‘உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு’ என்ற இயக்கத்தில் இணையவேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதற்கும், கைவினைஞர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும், கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.
கைவினைஞர்களிடையே உரையாற்றிய காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் மனோஜ் குமார், தமிழ்நாட்டில் 74 காதி நிறுவனங்கள் மூலம் 11,000-க்கும் அதிகமான கைவினைஞர்களுக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். கடந்த நிதியாண்டில், சென்னையில் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில அலுவலகம் மூலம் பிரதமரின் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 191 கோடி மானியம் வழங்கப்பட்டது. இதன் மூலம் 6,508 அலகுகள் நிறுவப்பட்டு 52,000-க்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், காந்தி ஆசிரமத்தின் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாநில அரசு மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் திருச்செங்கோட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி ஆசிரமம், மகாத்மா காந்தியின் விலைமதிப்பற்ற பாரம்பரியம் என்றும், இந்தியாவின் பழமையான காந்தி ஆசிரமங்களில் ஒன்றாகும் என்றும் காந்தி ஆசிரமத்துடன் தொடர்புடைய அலுவலர்கள் தெரிவித்தனர். இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலான சுதந்திர போராட்ட வீரர் சி.ராஜகோபாலாச்சாரியால் நிறுவப்பட்ட இந்த ஆசிரமத்திற்கு மகாத்மா காந்தி 1925, 1936 ஆகிய ஆண்டுகளில் வருகை தந்ததையும் அவர்கள் நினைவுகூர்ந்தனர்.இந்த நிகழ்வில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பாஜக மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.