பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியலில் தமிழில் 100க்கு 138, என்றும், நான்கு பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண்களை தோல்வி எனவும் குறிப்பிட்டு இருந்ததால், 600க்கு 514 மதிப்பெண்கள் பெற்ற மதுரை மாணவி ஆர்த்தி 19, வேதனை அடைந்தார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சூரக்குளத்தை சேர்ந்த வேல்முருகன் 26, மனைவி ஆர்த்தி 19. கடந்த 2021ல் ஆர்த்தியின் 17 வயதில் திருநகர் பள்ளியில் பிளஸ் 1 முடித்தார். குடும்ப சூழ்நிலையால் வேல்முருகனை திருமணம் செய்தார். திருமண வாழ்க்கையால் படிப்பு கெட்டு விடக்கூடாது என்பதற்காக, ஆர்த்தியை இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் நேரடியாக பங்கேற்க வைக்க வேல்முருகன் முடிவு செய்தார். ஆர்த்தியின் தேர்வு முடிவுகள் வந்ததும் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அவர் தமிழில் 100 க்கு 138 மதிப்பெண்கள் பெற்று இருந்ததுடன் அவர் தோல்வி அடைந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்ததுதான்.
மற்ற பாடங்களில் ஆங்கிலம் 92, கணிதம் 56, இயற்பியல் 75, வேதியியல் 71, உயிரியல் 82 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆர்த்தி கூறியதாவது: மதிப்பெண் பட்டியலில் தமிழில் 100க்கு 138 என பிழையாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் நான்கு பாடங்களில் 50க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றிருந்தும் அவற்றில் தோல்வி என குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். இரு நாட்களில் மதிப்பெண் பட்டியல் வந்துவிடும். அதில் தவறாக வந்தால் சரிசெய்ய ஏற்பாடு செய்வோம் என்றனர். இவ்வாறு அவர் கூறினார்.