தினம் தோறும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எதாவது செய்திகளை வெளியிட்டு அமைச்சர் சேகர்பாபு பிரபலம் அடைகிறார். இந்து கோவில்கள் குறித்து ஏதாவது திட்டம் சொல்கிறார். அது நீதிமன்றம் போகிறது தடை செய்யப்படுகிறது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த திட்டம் மறு சீரமைக்க பட்டு செயல்பாட்டுக்கு வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில்
கோவில்களின் சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை என்ற பெயரில் தாரை வார்க்கும் செயலை நிறுத்தி கொள்ளவில்லையெனில் மீண்டும் நீதிமன்றத்தில் திமுக அரசுக்கு தலைகுனிவே ஏற்படும் என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கோவில் சொத்துக்களை பலன் தரும் வகையில் பயன்படுத்துவது குறித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றவது குறித்தும், சொத்துகளின் மூலம் வருவாய் ஈட்டுவது குறித்தும், சொத்துக்களை மேம்படுத்துவது குறித்தும் திட்டமிட, தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவதற்கு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு (டெண்டர்) தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களாக கோவில் பணியாளர்கள் நியமனம்,கோவில்களுக்கு சொந்தமான தங்க நகைகளை உருக்கி தங்க பத்திரங்களின் மூலம் வட்டி வருவாய் ஈட்டுவது, கல்லூரிகள் திறப்பது போன்று பல்வேறு வகைகளில் கோவில்களின் நிர்வாகத்தில் தலையிட்டு குழப்பத்தை விளைவிக்க முயற்சித்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றம் ஒவ்வொரு விவகாரத்திலும் தமிழக அரசின் தலையில் பலமாக குட்டியும், திமுக அரசு மீண்டும் ஒரு குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
இந்து அறநிலைய துறை என்பது கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் ஓர் அமைப்பே. கோவில்களின் நிர்வாகத்தில் அதற்கு அதிகாரமில்லை. அறங்காவலர்கள்தான் நிர்வாகத்தை நடத்த வேண்டும். அறங்காவலர்களின் நிர்வாகத்தில் முறைகேடுகள் அல்லது இடர்பாடுகள் எழுமேயானால், அதை சரிசெய்து சீரமைக்கும் பணி மட்டுமே இந்து அறநிலையத்துறையின் பணி. கோவில்களின் சொத்துக்களை பாதுகாக்கும் பணி அறங்காவலர்களுடையது. அந்த அறங்காவலர்களை நியமிக்காமல், அரசே நேரடியாக கோவில்களின் நிர்வாகத்தை கையிலெடுக்க முயற்சிப்பது சட்டவிரோதம்.
இதுபோன்ற செயல்களினாலேயே கோவில் சொத்துக்கள் களவாடப்பட்டன. நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கொள்ளையர்களின் கூடாராமாகின. கோவில் சொத்துக்களுக்கு உரிமையாளர் அந்தந்த கோவிலின் தெய்வங்களே என்பது சட்டம்.
கோவில்களின் ஒரு சிறு துரும்பின் மீதுகூட அரசுக்கு உரிமையில்லை. கோவில்களை வருவாய் பெருக்கும் வர்த்தக நிறுவனங்களாக கருதி செயல்படும் எண்ணத்தை தமிழக அரசு கைவிட்டு, கோவில்களின் சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை என்ற பெயரில் தாரை வார்க்கும் செயலை நிறுத்தி கொள்ளவில்லையெனில் மீண்டும் நீதிமன்றத்தில் திமுக அரசுக்கு தலைகுனிவே ஏற்படும்.” என்று அறிக்கையில் நாராயணன் திருப்பதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















