நமக்குத் தேவை ஏற்படும்போது, சொந்தங்களும் நட்புமே தூர விலகும் இக்காலத்தில், தன் வாழ்வைப் பற்றியும் வருமானத்தைப் பற்றியும் துளியும் கவலைப் படாமல், ஒரு வருடம் அல்ல இரண்டு வருடங்கள் அல்ல 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவர் பிறரின் கல்விக் கண்களை திறந்து கொண்டிருக்கிறார்.
ஒடிசாவைச் சேர்ந்த ஒரு முதியவர் 75 வருடங்களுக்கும் மேலாக பணம் ஏதும் வாங்காமல், ஒரு மரத்தின் அடியில் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து வருகிறார். வயதான ஆசிரியரான நந்தா பிரஸ்டி சிறு குழந்தைகளுக்கு மட்டுமல்ல, இரவில் வயதானவர்களுக்கும் கற்பிக்கிறார்.
குழந்தைகள் கல்வியை மேலும் தொடர 4 ஆம் வகுப்பு முடித்த பின்னர், அவர்களை ஆரம்ப பள்ளிகளுக்கு அனுப்புமாறு அவர் அறிவுறுத்துகிறார். கற்பித்தல் மீதான அவரது ஆர்வம் அவரது தொழில்முறை வாழ்வாதாரத்தை ஈட்டும் அவசியத்தையும் தோற்கடித்தது. 75 ஆண்டுகளாக அவர் தன் வருமானத்திற்காக வேறு எந்த வேலையையும் செய்யாமல், சேவை மனப்பான்மையின் உச்சக்கட்டமாக ஜஜ்பூர் மாவட்டத்தின் குழந்தைகளுக்கு கல்வி புகட்டி வருகிறார்.
அந்த முதியவர் பார்தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் வசதியாக கற்பிக்கும் விதத்தில் ஒரு நல்ல கட்டிடத்தை உருவாக்கிக் கொடுக்க அரசாங்க உதவியை நாடுமாறு கிராமத் தலைவர் பலமுறை அவரிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் ஒரு பழைய மரத்தின் கீழ் உட்கார்ந்து தனது வேலையைத் தொடரவே விரும்புகிறார்.
நான் விவசாய நிலங்களில் பணிபுரிந்தேன். எங்கள் கிராமத்தில் கல்வியறிவற்றவர்கள் பலர் இருப்பதைக் கண்டேன். அவர்களால் கையெழுத்திடக்கூட முடியவில்லை. கைநாட்டுதான் அவர்களால் முடிந்த விஷயமாக இருந்தது. கையெழுத்திடுவது எப்படி என்று அவர்களுக்குக் கற்பிப்பதற்காகவே நான் அவர்களை முதலில் அழைத்தேன். ஆனால் பலர் எழுதுவதிலும் படிப்பதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினர். பகவத் கீதையைப் படிக்கத் தொடங்கினர். எனது முதல் பேட்ச் மாணவர்களின் பேரக்குழந்தைகளுக்கு இப்போது நான் கற்பிக்கிறேன்” என்று பிரஸ்டி கூறினார்.
பார்தண்டா சர்பஞ்ச், “அவர் கடந்த 75 ஆண்டுகளாக கற்பித்து வருகிறார். கற்பித்தல் அவரது விருப்பம் என்பதால் அவர் அரசாங்கத்தின் எந்த ஆதரவையும் மறுக்கிறார். ஆனால் அவர் குழந்தைகளுக்கு வசதியாக கற்பிக்கக்கூடிய வகையில் ஒரு கட்டிடத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம்.” என்று கூறினார்.
தீவிர வானிலையோ, மழையோ, வெயிலோ, காற்றோ, குளிரோ, எதுவும் இந்த வயதான மனிதரின் ஆர்வத்தைத் துளி கூட குறைக்கவில்லை என கிராம சர்பஞ்ச் ANI இடம் கூறினார்.
அவரது முதுமையை மனதில் கொண்டு, கிராம பஞ்சாயத்து, அவர் கற்பிக்க ஒரு கட்டிடத்தை கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளதுடன், வயதான அவரை தனது சேவையை அக்கடிடத்தில் இருந்து நிம்மதியாகத் தொடருமாறும் கோரியுள்ளது.