Thursday, June 1, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

79ஆவது மனதின் குரல் பிரதமர் மோடியின் உரை.

Oredesam by Oredesam
July 25, 2021
in இந்தியா, செய்திகள்
0
மோடி அரசு மக்கள் நலனை காக்க ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் விலை 54 சதவீதம் வரை குறைப்பு.
FacebookTwitterWhatsappTelegram

எனதருமை நாட்டுமக்களே,

     இரண்டு நாட்கள் முன்பாக, சில அற்புதமான காட்சிகள், நினைவினை விட்டு நீங்கா சில நினைவுகள்….. இவை இப்பொழுதும் என் கண்களின் முன்பாக நிழலாடுகின்றன.  ஆகையால் இந்த முறை அந்தக் கணங்கள் சிலவற்றோடு மனதின் குரலைத் தொடங்கலாம்.  டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய விளையாட்டு வீரர்கள், தங்கள் கரங்களிலே மூவண்ணக் கொடியினை ஏந்திக் கொண்டு பவனி வந்ததைக் கண்டு நான் மட்டுமல்ல, நாடு முழுவதும் சிலிர்ப்படைந்தது.  நாடெல்லாம் தங்களுடைய இந்த வீரர்களிடம், விஜயீ பவ!  விஜயீ பவ! என்று ஒன்றுபட்டுக் கூறியது போலத் தோன்றியது.  இந்த வீரர்கள் பாரதம் விட்டுப் போந்த வேளையில், அவர்களுடன் கலந்து அளவளாவ, அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள, தேசத்திற்கு இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.  இந்த வீரர்கள், வாழ்க்கையின் அனைத்து சவால்களையும் கடந்துதான் இந்தக் கட்டத்தினை எட்டியிருக்கின்றார்கள்.  இன்று இவர்களிடத்தில், உங்கள் அன்பு-ஆதரவு என்ற பலம் இருக்கிறது; ஆகையால் வாருங்கள், நாமனைவரும் இணைந்து அனைத்து வீரர்களுக்கும் நமது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம், அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்போம்.  சமூக வலைத்தளங்களில் ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நமது Victory Punch Campaign என்ற வெற்றி வீச்சு இயக்கம் இப்பொழுது தொடங்கி விட்டது.  நீங்களும் நமது அணியோடு இணைந்து, நமது Victory Punchஐ பகிருங்கள், இந்திய வீரர்களை உற்சாகப்படுத்துங்கள்.

READ ALSO

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

     நண்பர்களே, தேசத்தின் பொருட்டு மூவண்ணக் கொடியினை யார் உயர்த்துகிறார்களோ, அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வண்ணம் நமது உணர்வுகள் பெருகுவது என்பது இயல்பான ஒன்று.  தேசபக்தியின் இந்த உணர்வு தான் நம்மனைவரையும் இணைக்கிறது.  நாளை, ஜூலை மாதம் 26ஆம் தேதியன்று கார்கில் விஜய் திவஸும் கூட.  பாரதப் படையின் வீரம், ஒழுங்குமுறை ஆகியவற்றின் அடையாளம்கார்க்கில் யுத்தம். உலகம் முழுமையும் இதைக் கண்டிருக்கிறது.  இந்த முறை, இந்த கௌரவம் நிறைந்த நாளும், அம்ருத மஹோத்ஸவத்திற்கிடையே கொண்டாடப்பட இருக்கிறது.  ஆகையால் இது மேலும் சிறப்புத்தன்மை வாய்ந்தததாக ஆகின்றது.   சிலிர்ப்பை ஏற்படுத்தும் கார்கிலின் வீரதீரச் சம்பவங்களை நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும், கார்கில் போரின் வீரர்களை நாமனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

     நண்பர்களே, இந்த முறை ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று தேசம், தான் சுதந்திரம் அடைந்த 75ஆம் ஆண்டில் பிரவேசிக்க இருக்கின்றது.  எந்த சுதந்திரத்திற்காக தேசம் பல நூற்றாண்டுக்காலமாக காத்திருந்ததோ, அதன் 75 ஆண்டுக்கால நிறைவினுக்கு நாம் சாட்சிகளாக ஆகவிருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் வாய்த்த பெரும்பேறு.  சுதந்திரத்தின் 75 ஆண்டினைக் கொண்டாட, மார்ச் மாதம் 12ஆம் தேதியன்று அண்ணலின் சாபர்மதி ஆசிரமத்திலிருந்து அமிர்த மஹோத்ஸவம் தொடங்கப்பட்டது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  இதே நாளன்று தான் அண்ணலின் தாண்டீ பயணத்திற்கும் மீளுயிர் அளிக்கப்பட்டு, அது முதல், ஜம்மு கஷ்மீரம் தொடங்கி புதுச்சேரி வரையும், குஜராத் தொடங்கி வடகிழக்கு வரையிலும், தேசமெங்கும் அமிர்த மஹோத்ஸவத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.  அதிகம் கவனத்தில் வராத பல சம்பவங்கள், பல சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஆனால் இவர்களின் பங்களிப்பு மிகப் பெரியது – இப்படிப்பட்டோரின், இப்படிப்பட்ட சம்பவங்களைப் பற்றியும் நாம் கேள்விப்படத் தொடங்கியிருக்கிறோம்.  எடுத்துக்காட்டாக, மோய்ராங்க் டேவையே எடுத்துக் கொள்வோமே!!  மணிப்பூரின் மிகச் சிறிய கிராமமான மோய்ராங்க், ஒரு காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் இந்திய தேசியப் படை, ஐ.என்.ஏவின் மிக முக்கியமான மையமாக விளங்கியது.  இங்கே, சுதந்திரத்திற்கு முன்பாக, ஐ.என்.ஏவின் கர்னல் ஷௌகத் மலிக் அவர்கள் கொடியேற்றினார்கள்.  அமிர்த மஹோத்ஸவத்தின் போது, ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று மோய்ராங்கில், மீண்டுமொரு முறை மூவண்ணக் கொடி ஏற்றப்பட்டது.  இப்படி விடுதலை வேள்வியில் பங்கெடுத்த எண்ணிலடங்கா வீரர்கள், மஹாபுருஷர்கள் ஆகியோரை, அமிர்த மஹோத்ஸவத்தின் போது தேசம் நினைவு கூர்கிறது.  அரசு மற்றும் சமூக அமைப்புகளின் தரப்பிலிருந்தும், தொடர்ந்து இதோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.  இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி, இந்த முறை ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று நடைபெற உள்ளது, இது ஒரு முயற்சி தான் – தேசிய கீதம் தொடர்பானது.  கலாச்சார அமைச்சகத்தின் முயற்சி இது.  இந்த நாளன்று அதிக அளவில் நாட்டுமக்கள் இணைந்து தேசிய கீதம் பாட வேண்டும், இதற்கெனவே ஒரு இணையத்தளமும் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது –ராஷ்ட்ரகான்.இன்.  இந்த இணையத்தளத்தின் வாயிலாக, நீங்கள் தேசியகீதம் பாடி, அதைப் பதிவு செய்ய முடியும், இந்த இயக்கத்தோடு உங்களை இணைத்துக் கொள்ள இயலும்.  நீங்கள் இந்த வித்தியாசமான முயற்சியோடு உங்களைக் கண்டிப்பாக இணைத்துக் கொள்வீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.  இதைப் போன்றே பல இயக்கங்கள், பல முயல்வுகள் ஆகியவற்றை இனிவரும் நாட்களில் நீங்கள் பார்க்கலாம்.  அமிர்த மஹோத்ஸவம் என்பது, எந்த ஒரு அரசின் நிகழ்ச்சியும் அல்ல, எந்த ஒரு அரசியல் கட்சியின் ஏற்பாடும் அல்ல, இது கோடானுகோடி நாட்டுமக்களின் நிகழ்ச்சி.  செஞ்சோற்றுக்கடன் உணர்வு கொண்ட சுதந்திர பாரதத்தின் குடிமக்கள், தங்களுடைய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு செலுத்தும் வணக்கம்.  இந்த மஹோத்ஸவத்தின் அடிப்படை உணர்வின் வீச்சு மிகவும் பரந்துபட்டது.  இந்த உணர்வு என்ன தெரியுமா?   சுதந்திரப் போராட்ட வீரர்கள் காட்டிய பாதையில் பயணிப்பது, அவர்களின் கனவு தேசத்தை உருவாக்குவது, இவை தாம்.  நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்ற அணையா வேட்கை கொண்டவர்கள், தேச விடுதலைக்காக எப்படி ஒன்றுபட்டார்களோ, அதே போல, நாமும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபட வேண்டும்.  நாம் தேசத்தின் பொருட்டு வாழ வேண்டும், தேசத்தின் பொருட்டே பணியாற்ற வேண்டும், இதில் புரியப்படும் சின்னச்சின்ன செயல்களும் கூட, பெரிய விளைவுகளை அளிக்கக்கூடும்.  நமது அன்றாடப் பணிகளுக்கு இடையேயும் கூட, நாம் தேசத்தின் உருவாக்கத்தைப் புரியலாம்.  எடுத்துக்காட்டாக, Vocal for Local என்ற உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற நோக்கம்.  நமது நாட்டின் உள்ளூர் தொழில்முனைவோர், கைவினைஞர்கள், கட்டிடக் கலைஞர்கள், நெசவாளர்கள் ஆகியோருக்கு ஆதரவளிப்பது ஆகியவை நமது இயல்பான நடைமுறையாக மாற வேண்டும்.  ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று வரவிருக்கின்ற தேசிய கைத்தறிப் பொருட்கள் நாள் என்பது, நாம் முயற்சி மேற்கொண்டு இந்தப் பணியை நிறைவேற்ற ஒரு வாய்ப்பாக அமைந்திருப்பது.  தேசிய கைத்தறி தினத்தோடு கூட, மிகப் பெரிய சரித்திரப் பின்புலம் இணைந்திருக்கிறது.  இதே நாளன்று தான் 1905ஆம் ஆண்டிலே சுதேஸி இயக்கம் தொடங்கப்பட்டது.

     நண்பர்களே, நமது தேசத்தின் ஊரக மற்றும் பழங்குடியினப் பகுதிகளில், கைத்தறி என்பது, வருவாய்க்கான மிகப்பெரிய சாதனமாக விளங்கி வருகின்றது.  இந்தத் துறையோடு இலட்சக்கணக்கான பெண்கள், இலட்சக்கணக்கான நெசவாளர்கள், இலட்சக்கணக்கான கைவினைஞர்கள் இணைந்திருக்கின்றார்கள்.  உங்களுடைய சின்னச்சின்ன முயற்சிகள், நெசவாளர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை உதிக்கச் செய்யும்.  நீங்கள்அவர்கள் தயாரித்த ஏதோ ஒன்றை வாங்குங்கள், நீங்கள் வாங்கியதைப் பற்றியும், உங்கள் நோக்கம் பற்றியும் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள், நாம் நமது சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டினைக் கொண்டாடும் போது, இந்த குறைந்தபட்ச செயலைப் புரிவது நமது கடமையில்லையா சகோதரர்களே!!  2014ஆம் ஆண்டிற்குப் பிறகிலிருந்தே, மனதின் குரலில் நாம் அடிக்கடி கதர் பற்றிப் பேசி வந்திருக்கிறோம்.  உங்களின் முயற்சிகள் காரணமாகவே, இன்று தேசத்தில் கதராடைகளின் விற்பனை பலமடங்கு பெருகியிருக்கின்றது.  கதராடைகள் விற்பனையகம் ஒன்றில் மட்டும் ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை ஆகியிருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!!   ஆனால் இதை நீங்கள் தான் செய்து காட்டியிருக்கிறீர்கள்.  நீங்கள் கதராடை விற்பனையகம் ஒன்றில் வாங்கும் போதெல்லாம்,அதனால் நமது ஏழை நெசவாளர் சகோதர சகோதரிகளுக்கு ஆதாயம் ஏற்படுகிறது.  ஆகையால், கதராடைகள் வாங்குவது என்பது ஒரு வகையில் மக்கள் சேவை…… தேச சேவையும் கூட.  என் அன்புநிறை சகோதர சகோதரிகள் நீங்கள் அனைவரும், ஊரகப் பகுதிகளில் உருவாக்கம் பெறும் கைத்தறிப் பொருட்களைக் கண்டிப்பாக வாங்க வேண்டும், இதைப் பற்றி #MyHandloomMyPrideஇலே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

     நண்பர்களே, சுதந்திரப் போராட்டம் மற்றும் கதர் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், வணக்கத்திற்குரிய அண்ணல் பற்றி நினைத்துப் பார்ப்பது இயல்பான விஷயம்.  எடுத்துக்காட்டாக, அண்ணலின் தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்தது போலவே, இன்று நாட்டுமக்கள் அனைவரும்,இணைந்து பாரதம் இணைப்போம் இயக்கத்திற்குத் தலைமையேற்க வேண்டும்.  பன்முகத்தன்மை நிறைந்த நமது தேசத்தை இணைக்க உதவும் வகையில் நமது பணிகள் உதவிகரமாக இருப்பதை உறுதி செய்வது நம்மனைவரின் கடமை.  தேசமே நம்மனைவரின் மிகப்பெரிய நம்பிக்கையாக, நம்மனைவரின் மிகப்பெரிய முதன்மையாக நீடித்து இருக்க வேண்டும் என்று நாமனைவரும் இந்த அமிர்த மஹோத்ஸவ வேளையிலே, ஒரு அமிர்தமான உறுதிப்பாட்டை மேற்கொள்வோம், வாருங்கள்!!  Nation First, Always First – தேசமே தலையாயது, எப்போதுமே முதன்மையானது என்ற மந்திரச் சொற்களோடு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.

     என் மனம் நிறை நாட்டுமக்களே, இன்று மனதின் குரலைக் கேட்டுவரும் நமது இளைய நண்பர்களிடம் நான் எனது சிறப்பான நன்றிகளை வெளிப்படுத்த விரும்புகிறேன்.  சில நாட்கள் முன்பாகத் தான் மைகவ் தளம் தரப்பிலிருந்து, மனதின் குரல் நேயர்கள் குறித்த ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.  மனதின் குரலுக்காக தகவல்களையும், ஆலோசனைகளையும் அளிப்பதில் முக்கியமானோர் யார் என்பதை இந்த ஆய்வு கண்டறிந்தது.   தகவல்களையும், ஆலோசனைகளையும் அளிப்பவர்களில் கிட்டத்தட்ட 75 சதவீதம் பேர், 35 வயதுக்குட்பட்டவர்கள், அதாவது பாரத நாட்டின் இளையோர் சக்தியின் ஆலோசனைகள் தாம் மனதின் குரலுக்கு திசையளித்திருக்கிறது என்ற முடிவு, ஆய்விற்குப் பிறகு கிடைத்த தகவல்.  இதை நான் மிகவும் நல்ல அறிகுறியாகவே காண்கிறேன்.  ஆக்கப்பூர்வமான தன்மையும், புரிந்துணர்வும் தான் மனதின் குரல்.  இதில் நாம் நேர்மறை விஷயங்கள் குறித்துப் பேசுகிறோம், இதுவே இதன் Charactercollective குணக்கூட்டு.  ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் மற்றும் ஆலோசனைகள் நிரம்பிய நமது பாரதநாட்டு இளைஞர்களின் எண்ணமும் செயலும், எனக்கு நிரம்ப ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது.  இளைஞர்களின் மனதின் குரல்களை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு, மனதின் குரல் வாயிலாகக் கிடைப்பது, எனக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

     நண்பர்களே, நீங்கள் அனுப்பிவரும் ஆலோசனைகள் தாம் மனதின் குரலின் மெய்யான சக்தி.  உங்களின் ஆலோசனைகள் தாம் மனதின் குரல் வாயிலாக பாரதத்தின் பன்முகத்தன்மையை பிரகாசிக்கச் செய்கிறது, பாரத நாட்டவரின் சேவை மற்றும் தியாகத்தின் மணத்தை, நாலாபுறங்களிலும் பரப்புகின்றது, கடினமாக உழைக்கும் நமது இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளால் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.  மனதின் குரலுக்கு நீங்கள் பலவகையான கருத்துக்களை அனுப்பி வைக்கின்றீர்கள்.  நம்மால் அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க முடியவில்லை என்றாலும், இவற்றில் பல கருத்துக்களை நான் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன். 

     நண்பர்களே, நான் உங்களோடு சாய் பிரணீத் அவர்களின் முயல்வுகள் பற்றிப் பகிர விரும்புகிறேன்.  சாய் பிரணீத் அவர்கள், ஒரு மென்பொருள் பொறியாளர், ஆந்திரப் பிரதேசத்தில் வசித்து வருபவர்.  கடந்த ஆண்டு, அவருடைய பகுதியில் மோசமான பருவநிலை காரணமாக விவசாயிகளுக்குக் கணிசமான பாதிப்பு ஏற்பட்டதை இவர் கவனித்திருக்கிறார்.   வானிலை ஆய்வியலில் இவருக்குப் பல ஆண்டுகளாகவே ஆர்வம் இருந்து வந்திருக்கிறது.  ஆகையால், இவர் தனது ஆர்வம் மற்றும் திறமை, விவசாயிகளின் நலனுக்குப் பயனாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.   இப்பொழுது இவர் தனித்தனி தரவு ஆதாரங்களிடமிருந்து, வானிலைத் தரவுகளை விலைக்கு வாங்கி, இவற்றைப் பகுப்பாய்வு செய்து, உள்ளூர் மொழியில் பல்வேறு வழிகளில் விவசாயிகளிடம் உறுதியான தகவலைக் கொண்டு சேர்க்கிறார்.  வானிலை புதுப்பிப்புகள் தவிர, பிரணீத் அவர்கள், பல்வேறு பருவநிலைகளில் இருப்போர் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் அளிக்கிறார்.  குறிப்பாக, வெள்ளப்பெருக்கிலிருந்து தற்காத்துக் கொள்வது பற்றியும், புயல் அல்லது மின்னல்-இடியால் தாக்கப்படும் போது எப்படி உயிர் தப்புவது என்பது பற்றியும் மக்களுக்குத் தெரிவிக்கிறார். 

     நண்பர்களே, ஒரு புறம் இந்த மென்பொருள் பொறியாளர் இளைஞரின் இந்த முயல்வு, மனதைத் தொடும் ஒன்றாக இருக்கும் அதே வேளையில், இன்னொரு புறத்தில் நமது நண்பர் ஒருவர் ஏற்படுத்தியிருக்கும் புதிய தொழில்நுட்பத்தின் பயன், உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.  இவர் தான் ஓடிஷாவின் சம்பல்புர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஈசாக் முண்டா அவர்கள்.  ஈசாக் அவர்கள் ஒரு காலத்தில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தவர் என்றாலும், இப்போது இவர் ஒரு இணைய பரபரப்பாக ஆகி விட்டார்.  தனது யூ ட்யூப் சேனல் மூலமாக கணிசமாகப் பணம் சம்பாதித்து வருகிறார்.  இவர் தனது காணொளிகளில் உள்ளூர் உணவுப் பதார்த்தங்கள், பாரம்பரியமான உணவுத் தயாரிப்பு முறைகள், உள்ளூர் கிராமங்கள், அவர்களின் வாழ்க்கை முறைகள், குடும்பம், உணவுப் பழக்கங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.  ஒரு யூட்யூப் ஒளிபரப்பாளர் என்ற முறையிலே, இவரது பயணம் மார்ச் மாதம் 2020ஆம் ஆண்டு தொடங்கியது.  அப்போது தான் இவர் ஓடிஷாவின் பிரசித்தி பெற்ற உள்ளூர் உணவுத் தயாரிப்பு தொடர்பான ஒரு காணொளியைத் தரவேற்றினார்.  அப்போதிலிருந்து இன்று வரை, இவர் பல நூற்றுக்கணக்கான காணொளிகளைத் தரவேற்றம் செய்திருக்கிறார்.  இவரது இந்த முயல்வு, பல காரணங்களுக்காகத் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றது.   குறிப்பாக, இதனால் நகரங்களில் வசிப்போர், தாங்கள் அதிகம் அறியாத ஒரு வாழ்க்கைமுறை பற்றிக் கண்டு தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் அவர்களுக்கு வாய்க்கிறது.  கலாச்சாரம், உணவு தயாரிப்பு என்ற இவை இரண்டையும் கலந்துக் கொண்டாடி வருகிறார், நம்மனைவருக்கும் உத்வேகம் அளித்து வருகிறார்.

     நண்பர்களே, தொழில்நுட்பம் பற்றி நாம் பேசும் வேளையிலே, மேலும் ஒரு சுவாரசியமான விஷயம் குறித்தும் நான் பேச விரும்புகிறேன்.  நீங்களே ஒரு விஷயம் குறித்துப் படித்திருக்கலாம், கவனித்திருக்கலாம்…. ஐ.ஐ.டி. மெட்ராசின் முன்னாள் மாணவர்கள் வாயிலாக நிறுவப்பட்ட ஒரு ஸ்டார்ட் அப், ஒரு 3 D Printed House, முப்பரிமாண பதிவாலான ஒரு வீட்டை உருவாக்கி இருக்கின்றார்கள்.  முப்பரிமாணப் பதிவாலான இந்த வீடு எப்படி உருவாக்கம் பெறுகிறது?  முதன்மையாக இந்த ஸ்டார்ட் அப்பானது ஒரு முப்பரிமாண அச்சு இயந்திரத்தின் மூலம் ஒரு முப்பரிமாணப் பதிவு உருவரையை ஊட்டி, பிறகு ஒரு சிறப்புவகை கான்கிரீட் வாயிலாக, அடுக்கடுக்காக ஒரு முப்பரிமாண அமைப்பை உருவாக்கியிருக்கிறது.  இது போன்ற பல சோதனை முயற்சிகள் நாடெங்கும் நடந்து வருகின்றன என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். ஒரு காலகட்டத்தில், சின்னச்சின்ன கட்டுமானப் பணிகளுக்குக் கூட பல ஆண்டுகள் ஆகி வந்தன.  ஆனால் இன்றோ, தொழில்நுட்பத்தின் காரணமாக, பாரதத்தின் நிலை மாற்றம் கண்டு வருகிறது.  சில காலம் முன்பாக, இப்படிப்பட்ட நூதனக் கண்டுபிடிப்பு நிறுவனங்களை வரவேற்கும் வகையில், ஒரு உலகாயத குடியிருப்புத் தொழில்நுட்ப சவாலைத் தொடங்கி வைத்தோம்.  இது முற்றிலும் வித்தியாசமான ஒரு முயற்சி என்பதால், இதற்கு கலங்கரை விளக்குத் திட்டங்கள் – Light House Projects என்று பெயரிட்டோம்.  தற்போது தேசமெங்கும் 6 பல்வேறு இடங்களில் Light House Projectகள்மிக விரைவு கதியில் நிறைவேறி வருகின்றன.  இந்தத் திட்டங்களில் நவீன தொழில்நுட்பமும், நூதனமான வழிமுறைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  இதனால் கட்டுமானத்திற்குத் தேவைப்படும் காலம் குறைகிறது.  கூடவே, உருவாக்கம் பெறும் வீடுகள், அதிக உறுதியாகவும், விலை குறைவானவையாகவும், சுகமளிப்பவையாகவும் இருக்கின்றன.  தற்போது தான், நான் ட்ரோன்கள் மூலமாக இந்தத் திட்டங்களை மேற்பார்வையிட்டேன், பணிகளின் முன்னேற்றத்தை நேரடியாகப் பார்த்தேன்.

     இந்தோரில் ஒரு திட்டத்தில், செங்கல் மற்றும் சிமெண்டுக் கலவையால் ஆன சுவர்களுக்கு பதிலாக, முன்னமேயே வடிவமைக்கப்பட்ட Sandwich Panel System பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ராஜ்கோட்டின் Light House, ஃப்ரெஞ்சு தொழில்நுட்பத் துணையோடு உருவாகி வருகிறது, இதிலே சுரங்கப்பாதை வாயிலாக, Monolithic Concrete construction technology, ஒரே கல்லாலான கான்கிரீட் கட்டுமானத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்தத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடுகள், இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் திறம் அதிகம் உடையனவாக இருக்கும்.  சென்னையில், அமெரிக்கா மற்றும் ஃபின்லாந்தின் தொழில்நுட்பங்களான, Pre-Cast Concrete System என்ற முன்னரே வடிவமைக்கப்பட்ட கான்கிரீட் முறை பயனாகி வருகிறது.  இதனால் வீடுகள் விரைவாகக் கட்டி முடிக்கப்படுவதோடு, செலவும் குறைகிறது.  ராஞ்சியில், ஜெர்மானிய முப்பரிமாண கட்டுமான முறை பயன்படுத்தப்பட்டு, கட்டிடங்கள் உருவாகி வருகின்றன.  இதிலே ஒவ்வொரு அறையும் தனித்தனியே கட்டப்பட்டு, பிறகு ஒட்டுமொத்த அமைப்பும், தொகுப்பு பொம்மைகளை இணைப்பது போன்று இணைக்கப்படும்.  அகர்தலாவில், ந்யூசீலாந்தின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது; இங்கே எஃகுச் சட்டத்தோடு இல்லம் உருவாகிறது, இதனால் நிலநடுக்கங்களைத் தாக்குப் பிடிக்க முடியும்.  இதே போல லக்னௌவில், கானடாவின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.  இதிலே பூச்சு அல்லது அரைசாந்துக்கான தேவையே கிடையாது, விரைவாக இல்லத்தை உருவாக்க, முன்பேயே தயார் நிலையில் இருக்கும் சுவர்கள் பயன்படுத்தப்படும். 

     நண்பர்களே, இவை incubation மையங்களைப் போலச் செயல்பட இன்று தேசமெங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதனால் நமது திட்டமிடல் வல்லுநர்கள், கட்டிடக் கலைஞர்கள், பொறியாளர்கள், மாணவர்கள் ஆகியோர், புதிய தொழில்நுட்பத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும், பரிசோதனைகளையும் செய்ய முடியும்.  நான் குறிப்பாக இந்த விஷயங்களை இளைஞர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன், நமது இளையோர், தேச நலனுக்காகத் தொழில்நுட்பத்தின் புதியபுதிய துறைகளை நோக்கி உற்சாகமும் ஊக்கமும் அடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

     எனதருமை நாட்டுமக்களே, ஆங்கிலத்திலே நீங்கள் ஒரு பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கலாம் –To Learn is to Grow, அதாவது கற்றலே வளர்ச்சி.  நாம் புதிய ஒன்றைக் கற்கும் போது, நம் முன்பாக வளர்ச்சிக்கான புதியபுதிய பாதைகள் தாமே திறக்கும்.  எப்போதெல்லாம் வாடிக்கையை விட்டு விலகி, புதிய முயல்வு மேற்கொள்ளப்படுகின்றதோ, மனித சமுதாயத்திற்கான புதிய நுழைவாயில் அப்போதெல்லாம் திறந்திருக்கிறது, ஒரு புதிய யுகத் தொடக்கம் ஆகியிருக்கின்றது.  ஓரிடத்தில், ஏதோ புதிதாக ஒன்று நடக்கும் போது, இதன் விளைவு அனைவரையும் ஆச்சரியத்தில் திக்குமுக்காடச் செய்திருக்கிறது என்பதை நீங்களே கவனித்திருக்கலாம்.  எடுத்துக்காட்டாக, எந்த மாநிலத்தை நாம் ஆப்பிளோடு இணைத்துப் பார்க்க முடியும் என்று நான் உங்களிடத்திலே கேட்கிறேன் என்று வைத்துக் கொள்வோமே!  இயல்பாகவே உங்கள் மனம் முதன்மையாக ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு கஷ்மீரம் மற்றும் உத்தராக்கண்ட் மாநிலங்களின் பால் திரும்பும்.  இப்போது இதோடு நீங்கள் மணிப்பூரையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நான் கூறினேன் என்றால், நீங்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போவீர்கள்.  புதியதாகச் செய்து சாதிக்க வேண்டுமென்ற தாகம் உடைய சில இளைஞர்கள், மணிப்பூர் மாநிலத்தில் தங்கள் திறமையைக் காட்டியிருக்கிறார்கள்.  இப்போது மணிப்பூரின் உக்கருல் மாவட்டத்தில், ஆப்பிள் சாகுபடி சூடு பிடித்து வருகின்றது.  இங்கிருக்கும் விவசாயிகள் தங்களின் பழத்தோட்டங்களில் ஆப்பிளை பயிர் செய்கிறார்கள்.  ஆப்பிளைப் பயிர் செய்ய இவர்கள் ஹிமாச்சலுக்குச் சென்று பயிற்சிகளை மேற்கொண்டார்கள்.  இவர்களில் ஒருவர் தான் டி. எஸ். ரிங்ஃபாமீ யங்.  இவர் விமானவியல் பொறியாளர் என்றாலும், தனது மனைவியான டீ.எஸ்.ஏஞ்ஜலோடு இணைந்து ஆப்பிள் சாகுபடியில் ஈடுபட்டார்.  இவரைப் போலவே அவுங்ஷீ ஷிம்ரே ஆகஸ்டீனாவும் தனது பழத்தோட்டத்தில், ஆப்பிளை சாகுபடி செய்திருக்கிறார்.  அவுங்ஷீ தில்லியில் வேலை செய்து வந்தார்.  அதைத் துறந்து விட்டு, இவர் தனது கிராமம் திரும்பினார், ஆப்பிள் சாகுபடியில் ஈடுபட்டார்.  மணிபூரில் இன்று இப்படிப்பட்ட பல ஆப்பிள் சாகுபடியாளர்கள் இருக்கின்றார்கள், இவர்கள் வித்தியாசமான, புதியதாக ஒன்றை செய்து காட்டியிருக்கின்றார்கள். 

     நண்பர்களே, நமது பழங்குடியின சமூகத்திற்கு, இலந்தை மிகவும் பிடித்தமான பழம்.  பழங்குடியின சமூகத்தவர் எப்போதும் இந்தப் பழவகையை நெடுங்காலமாகவே பயிர் செய்து வந்திருக்கின்றார்கள்.  ஆனால் கோவிட் 19 பெருந்தொற்றிற்குப் பிறகு, இதன் சாகுபடி குறிப்பாக அதிகரித்து வந்திருக்கிறது.  திரிபுராவின் உனாகோடியில், 32 வயது நிரம்பிய என்னுடைய நண்பர் ஒருவர் விக்ரம்ஜீத் சக்மா.  இவர் இலந்தையை பயிர் செய்யத் தொடங்கி, கணிசமாக இலாபம் சம்பாதித்திருக்கிறார்.  மேலும் இவர் இன்னும் பலரை இலந்தை சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தியும் வருகிறார்.  மாநில அரசும் இப்படிப்பட்டோருக்கு உதவி செய்யும் பொருட்டு முன்வந்திருக்கிறது.   அரசுத் தரப்பில் இதன் பொருட்டு சிறப்பான வகையிலே செடிவளர்ப்புப் பண்ணைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன, இங்கே இலந்தை வளர்ப்பு தொடர்பாக ஆர்வம் உள்ளவர்களின் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன.  விவசாயத்தில் நூதனங்கள் நடந்து வருகின்றன, விவசாயத் துணைப் பொருட்களிலும் படைப்பாற்றல் காணக் கிடைக்கிறது.

     நண்பர்களே, உத்திரப் பிரதேசத்தின் லகீம்புர் கீரீயில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய முயல்வு பற்றியும் தெரிய நேர்ந்தது.  கோவிட் காலத்தில் தான் லகீம்புர் கீரீயில் ஒரு வித்தியாசமான முயல்வு மேற்கொள்ளப்பட்டது.  வாழையில் வீணாகும் தண்டுகளிலிருந்து நார் தயார் செய்யும் பயிற்சி அங்கே பெண்களுக்கு அளிக்கப்படும் வேலை தொடங்கியது.  கழிவிலிருந்து செல்வம் உருவாக்கும் வழி இது.  வாழைத்தண்டினை வெட்டி, இயந்திரத்தின் துணை கொண்டு, வாழைநார் தயாரிக்கப்படுகிறது, இது கரும்புஅல்லதுசணல்கயிற்றினைப் போல இருக்கிறது.  இந்த நாரின் மூலம் கைப்பைகள், பாய்கள், தரை விரிப்புகள் என பலப்பல பொருட்களை உருவாக்கலாம்.  இதனால் ஒரு நன்மை, கழிவுப் பொருள் பயன்பாடு, மற்றுமொரு நன்மை, கிராமத்தில் வசிக்கும் சகோதரிகள்-தாய்மார்களின் வருவாய்க்கும் ஒரு வழி கிடைக்கிறது.  வாழை நார் ஏற்படுத்தியிருக்கும் இந்த வேலையால் உள்ளூர்ப் பெண்களுக்கு, நாளொன்றுக்கு 400 முதல் 600 ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடிந்திருக்கிறது.  லகீம்புர் கீரீயில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.  வாழை அறுவடை முடிந்த பிறகு பொதுவாக விவசாயிகள் இதன் தண்டுப் பகுதியை அகற்ற, பிரத்யேகமாக செலவு செய்ய வேண்டியிருந்தது.  இப்போது இவர்களுக்கு பணம் மிச்சப்படுவதோடு, வருமானமும் கிடைக்கிறது.

     நண்பர்களே, ஒரு புறம் வாழை நாரால் பொருட்கள் தயார் செய்யப்படும் அதே வேளையில், இன்னொரு புறத்தில், வாழை மாவு மூலம் தோசை மற்றும் குலாப் ஜாமுன் போன்ற சுவையான பதார்த்தங்களும் தயார் செய்யப்படுகின்றன.  கர்நாடகத்தின் உத்தர கன்னரா மற்றும் தக்ஷிண கன்னரா மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் இந்த வித்தியாசமான செயலைப் புரிந்திருக்கின்றார்கள்.  இதன் தொடக்கமும் கொரோனா காலகட்டத்தில் தான் நிகழ்ந்தது.  இந்தப் பெண்கள், வாழை மாவிலிருந்து தோசை, குலாப் ஜாமுன் போன்ற பதார்த்தங்களைச் செய்தது மட்டுமில்லாமல், இவை பற்றிய படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் இருக்கிறார்கள்.   அதிக பேர்களுக்கு வாழை மாவு பற்றித் தெரிய வந்த போது, இதற்கான கிராக்கியும் அதிகரித்தது, கூடவே இந்தப் பெண்களின் வருமானமும் தான்.  லகீம்புர் கீரீயைப் போலவே இங்கேயும் கூட, இந்தப் புதுமையான எண்ணத்தையும், பெண்கள் தான் முன்நின்று வழிநடத்தி வருகிறார்கள். 

     நண்பர்களே, இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகள், வாழ்க்கையில் புதிய சாதனை ஒன்றைப் படைக்க வேண்டும் என்ற உத்வேகக் காரணிகளாக அமைகின்றன.   உங்கள் அருகிலேயும் கூட இப்படிப்பட்ட அநேகர் இருப்பார்கள்.  உங்கள் குடும்பத்தார் பரஸ்பரம் உரையாடும் போது, நீங்கள் இவர்களையும், இது போன்ற விஷயங்களையும் உரையாடலில் இடம் பெறச் செய்யுங்கள்.  நேரம் வாய்க்கும் போது, உங்கள் குழந்தைகளோடு இப்படிப்பட்ட முயற்சிகளைக் காணச் செல்லுங்கள், சந்தர்ப்பம் வாய்த்தால், நீங்களே கூட இப்படி ஏதோ புதுமையான ஒன்றைச் செய்து காட்டுங்கள்.  மேலும், நீங்கள் நமோ செயலியிலும், மைகவ் தளத்திலும் இவை அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள், இன்னும் சிறப்பாக இருக்கும்.

     எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நமது பண்டைய சம்ஸ்கிருத நூல்களில் ஒரு சுலோகம் காணப்படுகிறது –

ஆத்மார்த்தம் ஜீவ லோகே அஸ்மின், கோ ந ஜீவதி மானவ:,

பரம் பரோபகாரார்த்தம், யோ ஜீவதீ ஸ ஜீவதி.

     आत्मार्थम्जीवलोकेअस्मिन्, कोनजीवतिमानवः |

परम्परोपकारार्थम्, योजीवतिसजीवति ||

அதாவது, உலகில் உள்ள அனைவரும் தங்களுக்காக வாழ்கிறார்கள்.  ஆனால் உள்ளபடியே யார் ஒருவர், மற்றவர்களுக்காக வாழ்கிறாரோ, அவரே மெய்யாக வாழ்கிறார் என்பதே இதன் பொருள்.  பாரத அன்னையின் நற்செல்வங்களின் பரோபகார முயற்சிகள் பற்றிய விஷயங்கள் – இது தானே மனதின் குரல்!!   இன்றும், நாம் இப்படிப்பட்ட, மேலும் சில நண்பர்கள் பற்றி பேச இருக்கிறோம்.  ஒரு நண்பர், சண்டீகட் நகரைச் சேர்ந்தவர்.  சண்டீகடில், நானும் சில ஆண்டுகள் வசித்திருக்கிறேன்.  இது மிகவும் சந்தோஷம் நிறைந்த, அழகான நகரம்.  இங்கே வாழும் மக்களும் தாராளமனம் படைத்தவர்கள், இன்னொரு விஷயம்….. நீங்கள் உணவுப் பிரியர் என்றால், இங்கே உங்கள் காட்டில் அமோக மழை தான்!!  இந்த சண்டீகடின் செக்டர் 29இல் தான் சஞ்ஜய் ராணா அவர்கள், நடமாடும் உணவுக் கடை ஒன்றை நடத்தி வருகிறார், சைக்கிளில் சோலே படூரே பதார்த்தத்தை விற்கிறார்.  ஒரு நாள் இவரது மகளான ரித்திமாவும், தமக்கை மகள் ரியாவும், ஒரு எண்ணத்தை இவர் முன்பு வைத்தார்கள்.  கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு, சோலே படூரே இலவசமாக வழங்கப்படும் என்ற கருத்திற்கு இருவரும் சம்மதிக்கச் செய்தார்கள்.  அவரும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டு, உடனடியாக இந்த நல்ல முயற்சியைத் தொடங்கியும் விட்டார்.  சஞ்ஜய் ராணாவிடம் இலவசமாக சோலே படூரே சாப்பிடத் தேவையானது, அன்று தான் உங்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது என்பதற்கான சான்று.  தடுப்பூசிக்கான குறுஞ்செய்தியைக் காட்டியவுடனேயே உங்களுக்கு சுவையான சோலே படூரே அளித்து விடுவார்கள்.  சமூக நன்மைக்கான பணிக்கு, பணத்தை விட அதிகமாக சேவையுணர்வு, கடமையுணர்ச்சி தாம் அதிக முக்கியமானவையாக இருக்கின்றன என்பார்கள் இல்லையா!!  நமது சகோதரர் சஞ்ஜய் அவர்கள் இதைத் தான் நிரூபித்திருக்கிறார்.

     நண்பர்களே, இப்படிப்பட்ட மேலும் ஒரு பணி குறித்து நான் உங்களோடு கலந்து பேச விரும்புகிறேன்.  இந்தப் பணி நடைபெறும் இடம் தமிழ்நாட்டின் நீலகிரியில்.  இங்கே ராதிகா சாஸ்திரி அவர்கள் AmbuRx ஆம்புரெக்ஸ் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்.  இந்தத் திட்டத்தின் நோக்கமே, மலைப்பகுதிகளில் இருக்கும் நோயாளிகளின் சிகிச்சைக்காக, எளிதான வகையிலே போக்குவரத்து வாகனங்கள் ஏற்பாடு செய்து தருவது.  ராதிகா அவர்கள் குன்னூரிலே ஒரு காப்பிக் கடை நடத்தி வருகிறார்.  இவர் தனது கடை நண்பர்களோடு இணைந்து ஆம்புரெக்ஸ்க்குக்காக நிதி திரட்டினார்.  நீலகிரி மலைகளில் இன்று 6 ஆம்புரெக்ஸ்கள் சேவையாற்றி வருகின்றன, தொலைவான பகுதிகளுக்கு, அவசர காலங்களில் நோயாளிகளுக்கு உதவிகரமாக இருக்கின்றன.  ஆம்புரெக்ஸில் ஸ்ட்ரெச்சர், பிராணவாயு சிலிண்டர்கள், முதலுதவிப் பெட்டி போன்ற பல பொருட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

     நண்பர்களே, நாம் நமது பணி, நமது தொழில், வேலை ஆகியவற்றைச் செய்து கொண்டே, சேவையில் ஈடுபட முடியும் என்பதையே, சஞ்ஜய் அவர்களாகட்டும், ராதிகா அவர்களாகட்டும், இவர்களின் எடுத்துக்காட்டுகள் நமக்குப் புரிய வைக்கின்றன.

     நண்பர்களே, சில நாட்கள் முன்பாக மிகவும் சுவாரசியமான, மிகவும் உணர்வுரீதியான ஒரு நிகழ்ச்சி நடந்தது, இதன் மூலம் பாரதம்-ஜார்ஜியா நாடுகளின் நட்புக்கு ஒரு புதிய பலம் கிடைத்தது.  இந்த நிகழ்ச்சியில் பாரதம், Saint Queen Ketevan,புனித இராணி கேடேவானுடைய புனித நினைவுச்சின்னத்தை ஜார்ஜியா அரசிடமும், அந்நாட்டு மக்களிடத்திலும் சமர்ப்பித்தது.  இந்த நிகழ்ச்சிக்கு நமது அயலுறவுத் துறை அமைச்சரே நேரடியாகச் சென்றிருந்தார்.  மிகவும் உணர்ச்சிகரமான சூழலில் இந்த நிகழ்ச்சி அரங்கேற்றம் செய்யப்பட்டிருந்தது; ஜார்ஜியா நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், அவர்களின் சமயத் தலைவர், அதிகமான எண்ணிக்கையில் ஜார்ஜியக் குடிமக்கள் என, ஏராளமானோர் வந்திருந்தார்கள்.  இந்த நிகழ்ச்சியின் போது பாரத நாட்டைப் பாராட்டிப் பேசப்பட்ட சொற்கள், மிகவும் நினைவில் கொள்ளத்தக்கவை.   இந்த ஒரு நிகழ்ச்சி மட்டுமே இரு நாடுகளுக்கு இடையே மட்டுமல்லாது, கோவா மற்றும் ஜார்ஜியாவுக்கு இடையேயான உறவுகளையும், மேலும் ஆழப்படுத்தியது.  காரணம் என்னவென்றால், புனிதர் அரசி கேடேவானின் புனித நினைவுச் சின்னம், 2005ஆம் ஆண்டு கோவாவின் புனித அகஸ்டீன் சர்ச்சில் கிடைத்தது.

     நண்பர்களே, இதெல்லாம் என்ன, இவை எப்போது, எப்படி நடந்தது என்ற கேள்வி உங்கள் மனங்களில் எழலாம்.  உள்ளபடியே, இது இன்றிலிருந்து 400-500 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த விஷயம்.  கேடேவான் அரசி, ஜார்ஜியா அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்.  பத்தாண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு 1624ஆம் ஆண்டு அவர் உயிர்த்தியாகம் செய்தார்.  பண்டைய போர்ச்சுகல் நாட்டு ஆவணம் ஒன்றின்படி, புனித அரசி கேடேவானின் சாம்பல், பழைய கோவாவின் புனித அகஸ்டின் கான்வெண்டில் வைக்கப்பட்டிருந்திருக்கிறது.  ஆனால் நீண்ட காலமாகவே, இவர் கோவாவில் எரியூட்டப்பட்டார் என்றும், இவரது பூதவுடல் எச்சங்கள் 1930இல் நடந்த நிலநடுக்கத்தில் காணாமல் போய் விட்டது எனவும் கருதப்பட்டு வந்தது.

     பாரத நாட்டு மற்றும் ஜார்ஜியாவின் வரலாற்றியலாளர்களும், ஆய்வாளர்களும், புதைபொருள் ஆராய்ச்சியாளர்களும், ஜார்ஜியா நாட்டு சர்ச்சைச் சேர்ந்தவர்களும், பல பத்தாண்டுகள் விடாமுயற்சி காரணமாக 2005ஆம் ஆண்டு, இந்தப் புனிதமான நினைவுப் பொருள் கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றார்கள்.  இந்த விஷயம் ஜார்ஜியா நாட்டு மக்களுக்குப் பெரும் உணர்வுபூர்வமான ஒன்று.   ஆகையால் அவர்களின் வரலாற்று, சமய மற்றும் ஆன்மீக உணர்வுகளை மனதில் கொண்டு, பாரத அரசு இந்தப் புனிதமான நினைவுப் பொருளின் ஒரு பகுதியை ஜார்ஜியா மக்களுக்கு அளிக்கத் தீர்மானித்தது.   ஜார்ஜியா மற்றும் பாரதத்தின் இணைந்த சரித்திரத்தின் இந்த பிரத்யேகமான அடையாளத்தைப் பாதுகாத்து வைத்தமைக்காக, நான் கோவாவின் மக்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  கோவா, பல மகத்தான ஆன்மீகப் பாரம்பரியங்கள் நிறைந்த பூமி.  புனித அகஸ்டின் சர்ச்சானது, ஐக்கிய நாடுகள் கல்வி, சமூக, கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமான, கோவாவின் சர்ச்சுகள் மற்றும் கான்வெண்டுகளின் ஒரு அங்கம்.

     எனதருமை நாட்டுமக்களே, ஜார்ஜியாவிலிருந்து நான் உங்களை நேரடியாக சிங்கப்பூர் அழைத்துச் செல்கிறேன்.  அங்கே இந்த மாதத் தொடக்கத்தில் மேலும் ஒரு பெருமை சேர்க்கும் விஷயம் நடந்தது.  சிங்கப்பூரின் பிரதமரும், என்னுடைய நண்பருமான, லீ சேன் லுங் அவர்கள், தற்போது புதுப்பிக்கப்பட்ட சிலாட் ரோட் குருத்வாராவைத் திறந்து வைத்தார்.  அவர் பாரம்பரியமான சீக்கியத் தலைப்பாகையை அணிந்திருந்தார்.  இந்த குருத்வாரா, கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்டது.  இங்கே பாய் மஹாராஜ் சிங்கிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவுச் சின்னமும் இருக்கிறது.  பாய் மஹராஜ் சிங் அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார், நாம் சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த வேளையில் இது மேலும் அதிக கருத்தூக்கத்தை அளிக்கின்றது.  இரு நாடுகளுக்கும் இடையே, மக்களுக்கு இடையேயான பரஸ்பர இணைப்பினை, இது போன்ற விஷயங்கள், இவை போன்ற முயற்சிகள் தாம் மேலும் பலப்படுத்துகின்றன.  மேலும், சகோதரத்துவமான சூழலில் வசிப்பது, பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கலாச்சாரங்களைப் புரிந்து நடப்பதில் எத்தனை மகத்துவம் அடங்கியிருக்கிறது என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது.

     எனதருமை நாட்டுமக்களே, இன்றைய மனதின் குரலில் நாம் பல விஷயங்களைப் பற்றிப் பேசினோம். மேலும் ஒரு விஷயம் என் இதயத்திற்கு மிகவும் அணுக்கமானது என்றால் அது நீர் பராமரிப்பு.  சிறுபிராயத்தில் நான் வாழ்ந்த இடத்தில் எப்போதுமே தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்து வந்தது.  நாங்கள் மழைக்காக ஏங்கி இருப்போம் என்ற காரணத்தால், ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாத்துப் பராமரிப்பது எங்களுடைய பழக்க வழக்கங்களின் ஒரு அங்கமாகவே மாறிப் போனது.  இப்போது, மக்களின் பங்களிப்பு வாயிலாக நீர் பராமரிப்பு என்ற மந்திரம், அந்த இடத்தில் காட்சியையே புரட்டிப் போட்டு விட்டது.  ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாப்பது, நீர் வீணாவதை அனைத்து வகைகளிலும் தடுப்பது என்பதெல்லாம் வாழ்க்கைமுறையின் இயல்பான ஒரு அங்கமாகவே மாற வேண்டும்.   குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இது குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்ற வகையில், நீர் பாரமரிப்பு என்பது நமது குடும்பங்களின் பாரம்பரியமாகவே மாற வேண்டும்.

     நண்பர்களே, இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது என்பது பாரதத்தின் கலாச்சார வாழ்க்கையில், நமது அன்றாட வாழ்க்கையில், ஓருடல் ஈருயிராகக் கலந்திருக்கிறது.  அதே போல மழை எப்போதுமே நமது எண்ணங்கள், நமது தத்துவங்கள், நமது கலாச்சாரம் ஆகியவற்றுக்கு வடிவம் கொடுத்து வந்திருக்கின்றது.  ருதுசம்ஹாரம் மற்றும் மேகதூதத்தில் மஹாகவி காளிதாஸன், மழை பற்றி அழகாக வர்ணித்திருக்கிறார்.  இலக்கியப் பிரியர்களுக்கு இடையே இந்தக் கவிதைகள், இன்றும் கூட மிகவும் பிரபலமாக இருக்கின்றன.   ரிக்வேதத்தின் பர்ஜன்ய சூக்தத்திலும், மழையின் அழகு பற்றி வர்ணிக்கப்பட்டிருக்கிறது.  இதைப் போலவே ஸ்ரீமத் பாகவதத்திலும் கூட, இலக்கியச் சுவையோடு நிலம், சூரியன், மழை ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் தொடர்புகள் விரித்துரைக்கப்பட்டிருக்கிறது.            

अष्टौमासान्निपीतंयद्, भूम्याःच, ओद–मयम्वसु |

स्वगोभिःमोक्तुम्आरेभे, पर्जन्यःकालआगते ||

அஷ்டௌ மாஸான் நிபீதம் யத், பூம்யா: ச, ஓத்-மயம் வசு,

ஸ்வகோபி: மோக்தும் ஆரேபே, பர்ஜன்ய: கால ஆகதே.

அதாவது சூரியன் எட்டு மாதங்கள் வரை, நிலத்தின் செல்வமான தண்ணீரை உறிஞ்சியது, இப்போது பருவமழைக்காலத்தில், இப்படி உறிஞ்சப்பட்ட செல்வத்தைநிலத்திற்கே மீண்டும் திரும்ப அளிக்கிறது.  உண்மையிலேயே, பருவமழையாகட்டும், மழையாகட்டும், இந்தக் காலம் அழகும், வனப்பும் நிறைந்தது மட்டுமல்ல, இது ஊட்டத்தை அளிக்கவல்லதும் கூட.   நமக்குக் கிடைக்கும் மழைநீரானது, நமது வருங்கால சந்ததிகளுக்கானது, இதை நாம் என்றுமே மறந்து விடக் கூடாது.

     இந்த சுவாரசியமான சந்தர்ப்பங்களோடு, இன்று நமது உரையாடலை ஏன் நாம் நிறைவு செய்யக்கூடாது என்று எனது மனதில் எண்ணம் எழுகிறது.   உங்கள் அனைவருக்கும் வரவிருக்கும் திருநாட்களுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.  திருவிழாக்கள், பண்டிகைகள் காலத்தில், கொரோனா பெருந்தொற்று இன்னும் நம்மிடையே தான் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.  கொரோனாவோடு தொடர்புடைய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மறந்து விடாதீர்கள்.  நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருங்கள், சந்தோஷமாக இருங்கள். 

     பலப்பல நன்றிகள்!

ShareTweetSendShare

Related Posts

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
உலகம்

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

May 25, 2023
புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
செய்திகள்

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

May 25, 2023
தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !

May 25, 2023
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை  தீர்க்கும் பரிகாரம் என்ன !
ஆன்மிகம்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

May 25, 2023
சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு
இந்தியா

சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

May 24, 2023
“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.
உலகம்

“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.

May 24, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

சனிக்கிழமை ஹோரை

சனிக்கிழமை ஹோரை

May 2, 2020
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு போராட்டம் அறிவிப்பு:  இந்துக்கள் கொந்தளித்ததால், கைவிட்டார் விக்கிரமராஜா!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு போராட்டம் அறிவிப்பு: இந்துக்கள் கொந்தளித்ததால், கைவிட்டார் விக்கிரமராஜா!

August 7, 2020
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு.

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு.

July 24, 2020
மத்திய அரசு சார்பில் பனை சம்பந்தப்பட்ட தொழில்களில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு.

மத்திய அரசு சார்பில் பனை சம்பந்தப்பட்ட தொழில்களில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு.

August 21, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • 1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
  • புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
  • தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
  • பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x