இந்தியாவின் விண்வெளி தொலைநோக்குத் திட்டம் 2047-ல் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைய மத்திய அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சர்வதேச கூட்டாண்மைகள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் விண்வெளி ஆய்வு பணிகளை முன்னெடுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. விண்வெளி நடவடிக்கைகளில் இந்திய தனியார் துறையின் பங்களிப்பை அனுமதிக்க மத்திய அரசு 2020-ம் ஆண்டில் விண்வெளித் துறை சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
2035-க்குள் பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவவும், 2040-க்குள் நிலவில் இந்தியரை தரையிறக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட விண்வெளி தொலைநோக்கு 2047-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக, நான்கு முக்கிய திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
விண்வெளி தொலைநோக்கு 2047-ன் இலக்கை அடையும் வகையில், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, விண்வெளி அறிவியல் ஆய்வுப் பணிகளுக்கான செயல் திட்டத்தை இத்துறை வகுத்துள்ளது.
இந்திய விண்வெளிக் கொள்கை, 2023-ஐ அரசு வெளியிட்டுள்ளது, இது விண்வெளித் துறையில் உள்ள அரசு சாரா நிறுவனங்களுக்கு விண்வெளி நடவடிக்கைகளின் முழு மதிப்புச் சங்கிலியிலும் அவர்களின் பங்கேற்பை இறுதி முதல் இறுதி வரை செயல்படுத்துவதன் மூலம் சமமான விளையாட்டுக் களத்தை வழங்குகிறது.
மேலும், விண்வெளித் துறைக்கான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு விண்வெளித் துறைகளில் அந்நிய முதலீடுகள் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விண்வெளி புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதோடு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் IN-SPACe-ன் கீழ் விண்வெளித் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ரூ.1000 கோடி மூலதன நிதியை அமைக்கவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), விண்வெளித் துறை, இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.